என் மலர்
சினிமா செய்திகள்
- எனக்கு வெற்றிமாறனோ, வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதல்ல.
- கொஞ்சம் கோபக்காரன் நான் சுயமரியாதையுடன் வாழ்பவன்.
ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் அமீர், வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள படம் 'மாயவலை'. வின்சென்ட் அசோகன், சஞ்சனாஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் அமீர் பேசியதாவது, சினிமா அறிவு உள்ளவர்களை ரசிப்பது தான் எனது வேலை. இந்த படத்தில் நடிப்பதற்கு நிறைய நடிகர்களிடம் சென்றோம். யாரும் நடிக்க வரவில்லை. அதனால் நான் நடித்தேன். இது எனக்கே புது அனுபவமாக உள்ளது. வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு தானே வெளியிடுவதாக கூறினார். ரஜினிக்கும் விஜய்க்கும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள். எனக்கு வெற்றிமாறனோ, வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதல்ல. கொஞ்சம் கோபக்காரன் நான் சுயமரியாதையுடன் வாழ்பவன். சூர்யாவிடம் இருந்து ஒதுங்கி விட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை என்று கூறினார்.
வின்சென்ட் அசோகன் பேசியதாவது, அமீர் அண்ணனுக்கு சினிமாமேல் இருக்கும் காதல் தான் எங்கள் இருவருக்கும் பொதுவானது. வட சென்னை படத்தில் அமீர் அண்ணனுடன் இணைந்து நடித்தது அனைவருக்கும் இன்றும் பிடித்த காட்சியாக உள்ளது. 'மாயவலை' படம் வித்தியாசமானதாக அமைந்தது என்று கூறினார்.
நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும். ரமேஷ் மாயவலை படத்தை நன்றாக எடுத்துள்ளார். எனக்கு திருப்தியான படமாக இந்த படம் வந்துள்ளது என்று கூறினார்.
- நடிகை அமலாபால் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்தார் இது தொடர்பான வீடியோ வைரலானது.
இந்நிலையில், நடிகை அமலாபால் தனது நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்துள்ளது. இதனை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட காட்சி இன்று (நவம்பர் 6) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
கே.எச்.234 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில் கமல்ஹாசனின் கண்கள் மட்டும் தெரியும் இந்த போஸ்டரில் டைட்டில் இன்று வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- எங்கள் குடும்பம் காந்தியை பின்பற்றும் குடும்பம் இல்லை. நேதாஜியை பின்பற்றும் குடும்பம்.
- கட்டுப்பாடுகள் இருக்கும் வரைதான் தப்பு செய்ய பயப்படுவார்கள்.
சென்னை:
சென்னை போரூர் கெருகம்பாக்கத்தில் பஸ்சில் தொங்கிய படியே சென்ற மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்டதுடன், பஸ் டிரைவர்-கண்டக்டரை அவதூறாக பேசிய வழக்கில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது.
தினமும் மாங்காடு போலீஸ் நிலையத்தில் காலை, மாலை இரு வேளையும் கையெழுத்து போட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமினில் வெளியில் வந்த ரஞ்சனா நாச்சியார், நல்ல விஷயத்துக்காக கைதானதில் தப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
பஸ்சில் மாணவர்கள் தொங்கிச் சென்றதை பார்த்ததும் வந்த கோபம் எனக்கு மட்டுமானது இல்லை. எல்லோருக்குமான கோபம் தான். உங்களுக்கும் அது போன்று கோபம் வந்திருக்கும். பஸ்களில் தொங்கிக் கொண்டு செல்லும் மாணவர்களை பார்த்தால் எல்லா பெண்களுக்குமே கோபம் வரும்.
ஏதோ நான் மட்டும்தான் கோபப்படுவது போல சிலர் பேசுகிறார்கள். படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை பார்க்கும் பலர், கோபம் வந்தாலும் நமக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று நினைத்து சென்று விடுவார்கள். பஸ்சை ஓட்டிச்செல்லும் டிரைவருக்கும் கோபம் இருக்கும். கேட்க மாட்டார்கள்.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. எல்லோருமே தப்பை தட்டி கேட்கணும். அதனால்தான் நான் கேட்டேன். ஒருவரை பார்த்து வேறு ஒருவர் கேட்கணும். அவரை பார்த்து இன்னொருவர் கேட்கணும் என்று நினைக்கிறேன்.
இந்த சம்பவத்துக்கு பிறகு போலீசார் என்னை கைது செய்த போது நல்ல விஷயத்துக்காக கைதானதில் தப்பே இல்லை என்று தான் நினைத்தேன்.
எங்கள் குடும்பம் காந்தியை பின்பற்றும் குடும்பம் இல்லை. நேதாஜியை பின்பற்றும் குடும்பம். மாணவர்களை தாக்கியது, கண்டக்டரை பேசியது பற்றி மட்டும் விமர்சிக்கிறார்கள். என்றைக்கு ஒரு ஆசிரியர் மாணவரை கண்டிக்கக் கூடாது. ஒரு போலீஸ் தப்பு செய்பவர்கள் மீது கை வைக்கக்கூடாது, பெற்ற தாய்-தந்தையே பிள்ளைகள் மீது கை வைக்கக்கூடாது என்று பேசி அதனை கடுமையாக்கினார்களோ, அன்றே பயம் போய்விட்டது.
அதனால்தான் இது போன்ற விஷயங்கள் நடக்கின்றன. இன்று நல்லதை செய்யப்போய் எனக்கு ஒரு நிபந்தனை தினமும் போலீஸ் நிலையத்தில் காலையிலும் மாலையிலும் கையெழுத்துப் போட வேண்டும். கட்டுப்பாடுகள் இருக்கும் வரைதான் தப்பு செய்ய பயப்படுவார்கள்.
இதுபோன்று படிக்காமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை தடுக்க மாணவர்களுக்கென்று தனி பஸ்சை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் தொங்கிக் கொண்டு சென்றதை பஸ்சில் யாரும் கண்டு கொள்ளவே இல்லை. நமது பிள்ளை இப்படி தொங்கிக் கொண்டு சென்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா? அதனால் தான் மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்டேன்.
பஸ்சில் தொங்கும் மாணவர்களிடம் சென்று செல்லப்பிள்ளை கீழே இறங்குடா. செல்லக்குட்டி கீழே இறங்குடா என்று சொல்லி பாருங்கள். ஒரு பையனும் கீழே இறங்க மாட்டான். தாய்மை உணர்வோடுதான் நான் இந்த செயலில் ஈடுபட்டேன். இதுபோன்ற உணர்வு எல்லா பெண்களுக்கும் வர வேண்டும். நமது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியிடம் இருந்துதான் இந்த கோபத்தை அனைவரும் கற்றுக்கொண்டிருக்கிறோம். கிராமப்புறங்களில் இருந்து சென்னையில் வந்து குடியேறியவர்கள் கூட தற்போது அந்த கோபத்தை வெளிப்படுத்த தவறுகிறார்கள்.
அடியாத மாடு பணியாது. 5-ல் வளையாதது 50-ல் வளையாது என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்ததை நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்தே போய் விட்டோம். உணவு பழக்க வழக்கங்கள் மாறி எப்படி பீட்சா, பர்கருக்கு மாறி விட்டோமோ அதே போன்று நமது சமூக பழக்க வழக்கங்களும் மாறிப் போய் விட்டது.
மாணவர்களை நான் அடித்தது தவறுதான். என்னைப் போன்று எல்லோரும் செயல்பட வேண்டும் என்று சொல்லவில்லை. குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்ட வேண்டாமா? நான் மாணவர்களை கண்டித்த வீடியோவை பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பார்த்திருப்பார்கள்.
இதன் பின்னர் பள்ளிக்கு செல்லும் மகனை பார்த்து ஏய் பஸ்சில் தொங்கிக்கிட்டு வராதடா? என்று ஒரு பெற்றோர் கூறினாலே போதும். படிப்படியாக அனைவரும் சொல்ல தொடங்கி விடுவார்கள்.
தப்பு செய்பவர்களை அடிப்பது தவறு என்று எப்போது பேசத் தொடங்கினோமோ? அப்போதே பயம் போய்விட்டது என்று தான் கூற வேண்டும். எனது செயலால் 2 மாணவர்களாவது இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தால் அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாகும்.
இவ்வாறு ரஞ்சனா நாச்சியார் கூறினார்.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
- இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
- இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நரச்ச முடி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விக்ரமை ரித்து வர்மா வர்ணிப்பது போன்று உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- சந்தானம் நடித்துள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'.
- இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'குலேபகாவலி', 'ஜாக்பாட்' , 'கோஸ்டி' போன்ற படங்களை இயக்கிய கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'. இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, பேன்டசி டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடியாக உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
- விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’.
- இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குனர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார் என்றார்.
நடிகை ஸ்ரீ திவ்யா பேசியதாவது, 'ரெய்டு' படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். 'மருது' படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
- விஜய் சேதுபதி இந்தியில் அறிமுகமான திரைப்படம் 'மும்பைகர்'.
- இப்படத்தை இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கினார்.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மும்பைகர்'. இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ஹிருது ஹாரூண், ரன்வீர் ஷோரே, தன்யா மானிக்தலா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜோதி தேஷ்பாண்டே மற்றும் ரியா ஷிபு ஆகியோர் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
மும்பையின் பரபரப்பான தெருக்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட 'மும்பைகர்' திரைப்படம் பல்வேறு தொடர்பற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையை பின்னிப்பிணைத்து சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர காலகட்டத்தில் நடக்கும் பல நிகழ்வுகளை திடீரென ஒன்றிணைக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் பயணத்தை படம் விவரிக்கிறது.
இந்நிலையில், 'மும்பைக்கர்' திரைப்படம் முதல் முறையாக நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, இந்திய நடிகர்களுக்கு இது ஒரு உற்சாகமான நேரமாக இருக்கிறது. பல்வேறு மொழிப் படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் எங்களுக்கு வருகின்றன. வெப் சீரிஸில் நான் நடித்ததற்காக மக்களின் அன்பு, பாராட்டுகளை பெற்றுள்ளேன். இந்த திரைப்படம் எனது முதல் இந்தி திரைப்பட அறிமுகமாக அமைந்துள்ளது. இப்படம் தமிழில் வெளியாவதன் மூலம் தமிழ் ரசிகர்கள் இப்படத்தை விரும்புவார்கள் மற்றும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
- முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ள திரைப்படம் 'டெவில்'.
- இப்படத்தை இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ளார்.
சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, "எல்லாக் கதைகளும் ஒரே கதைகள் தான், "டெவில்" படத்தின் கதையும் அதே தான். ஒரு அமைதியான வீட்டிற்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும், மீண்டும் அது புத்துயிர் பெற்று துளிர்க்கும். அன்னா கரீனா தொடங்கி எல்லாவற்றிலும் கதை இதுதான். நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல; ஆனால் பைபிளை பலமுறை படித்திருக்கிறேன். இப்பொழுதும் இயேசு கிறிஸ்து என் பின்னால் நிற்பதைப் போல் உணர்கிறேன். நானும் சிலுவையில் தொங்குபவன் தான். இப்படத்தில் சில பாடல்களை முயற்சித்து இருக்கிறேன்.
ஒரு எட்டு வயதாக இருக்கும் போது என் தந்தையின் தோள்களில் அமர்ந்து சவாரி செல்லும் போது, 'அன்னகிளியே உன்னத் தேடுதே…' பாடலைக் கேட்டு என் அப்பனின் தலைமுடியைப் பற்றி இழுத்து நிறுத்தி அப்பாடலைக் கேட்டேன். அன்று முதல் இளையராஜா எனக்கு குருநாதர் தான். பின்னர் ஏன் இசையமைக்க வந்தாய் என்று கேட்கிறீர்களா..? அவருடன் சண்டை போட்டுவிட்டேன்.. எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது. மேலும் மிகவும் போர் அடிக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் தான் இசையமைக்க முடிவு செய்தேன்.
இந்த இசை பயணத்தின் மூலம் நான் எந்த இடத்திற்கும் சென்று சேர விரும்பவில்லை. அப்படி நான் சென்று சேரும் இடம் என்று ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் காலடிகள் தான். இந்த உலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும். அவர்கள் தான் இசையமைப்பாளர்கள். நான் அல்ல.
.சினிமாவில் சிலர் கூறுவார்கள் அதிர்ஷ்டத்தால் ஜெயித்து விட்டான் என்று. இவர்களைப் பொறுத்தவரை சோவிகளை குலுக்கிப் போட்டால் உடனே தாயம் விழுந்துவிடும், பூவா தலையா என்று சுண்டினால் உடனே பூ விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல. தன் வாழ்நாள் முழுக்க, 24 மணி நேரமும் சினிமா, சினிமா, சினிமா என்று ஓடிக் கொண்டிருக்கும் மகத்தான இயக்குனர் அல்ல, மகத்தான கலைஞன் அவன். அவன் தான் என் நண்பன் வெற்றிமாறன். அவனுக்கு கிடைத்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் அவனது அசராத உழைப்பும் ஆழ்ந்த அறிவும் தான்.
ஒரு படம் இயக்குனரின் உழைப்பும் அறிவும் வெளிப்படையாக தெரிவது போல் இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும். இல்லை என்றால் அது எப்பேர்ப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் ஓடாது. அதை மக்கள் நிராகரித்து விடுவார்கள். படத்தை பாருங்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போடுங்கள். அவன் மீண்டும் அதைவிட நல்ல கதையோடு உங்களைத் தேடி வருவான். படம் நன்றாக இருந்தால் கொண்டாடுங்கள், ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'.
- இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.
இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை உலக தரத்தில் உருவாக்க பிரசாந்த் நீல் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 'சலார்' படத்தின் சண்டைக் காட்சிகளில் ஜீப்புகள், லாரிகள் என 750 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக இந்தக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதல்- தி கோர்'.
- இந்த படத்தை மம்முட்டி கம்பெனி தயாரித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.
தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காதல் தி கோர் போஸ்டர்
இந்நிலையில், காதல் - தி கோர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். மம்முட்டியை கட்டியணைத்தபடி ஜோதிகா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.