என் மலர்
சினிமா செய்திகள்
- பிரசன்ன விதானகேயின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேரடைஸ்' .
- விடுமுறை நாட்களில் சுற்றுலாவிற்கு வரும் ஒரு தம்பதிகளின் நிலையை இந்த படைப்பு விவரிக்கிறது.
ஆசிய சினிமாவின் வளர்ச்சியை கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் மறைந்த திரையுலக படைப்பாளி கிம் ஜிஜோக். அவரது நினைவை போற்றும் வகையில் 2017-ஆம் ஆண்டு முதல் ஆசிய சினிமாவின் சமகால நிலையை பிரதிபலிக்கும் இரண்டு சிறந்த திரைப்படங்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.
2023- ஆம் ஆண்டிற்கான கிம் ஜிஜோக் விருதை பிரசன்ன விதானகேயின் 'பேரடைஸ்' என்ற திரைப்படத்திற்கும், மிர்லான் அப்டிகலிகோவின் ' பிரைட் கிட்நாப்பிங்' எனும் திரைப்படத்திற்கும் இணைந்து வழங்கப்படுகிறது.
பிரசன்ன விதானகேயின் இயக்கத்தில் நியூட்டன் சினிமா எனும் பட நிறுவனம் தயாரித்து, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கியிருக்கும் திரைப்படம் 'பேரடைஸ்'. இந்த திரைப்படம் இலங்கையில் படமாக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் சுற்றுலாவிற்கு வரும் ஒரு தம்பதிகளின் நிலையை இந்த படைப்பு விவரிக்கிறது. சுற்றுலாவின் போது அவர்கள் எதிர்கொள்ளும் சமூக, தனிப்பட்ட மற்றும் பிரத்யேக சவால்களை குறித்தும், அதற்கான அவர்களின் போராட்டங்கள் குறித்தும் பேசுகிறது.
இந்தத் திரைப்படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் பெர்னாண்டோ மற்றும் மகேந்திரா பெரேரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்க, ஒலி வடிவமைப்பாளராக தபஸ் நாயக் பணியாற்றிருக்கிறார்.
இந்த விருது குறித்து பிரசன்ன விதானகே பேசியதாவது, கிம் ஆசிய திரைப்பட படைப்பாளிகளுக்கு உற்ற நண்பராக இருந்தார். அவரை என்னுடைய இல்லத்திற்கு எடுத்து செல்வதில் நான் பெருமை அடைகிறேன். என்னுடைய அன்பான தயாரிப்பாளர் நியூட்டன் சினிமா நிறுவனத்தை சேர்ந்த ஆன்டோ சிட்டிலப்பில்லி, இப்படத்தை வழங்கிய மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்னம், இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விருது உங்களுக்கு தான் சொந்தம் என்றார்.
'பேரடைஸ்' படம் குறித்து மணிரத்னம் பேசியதாவது, 'பேரடைஸ்' ஒரு வித்தியாசமான பார்வையை கொண்ட படைப்பு. சமூக மற்றும் பொருளாதார நிலையில் பெரும் கொந்தளிப்பு இருக்கும்போது இன்றைய சிக்கலான சூழலில் பழைய காவியங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆண் -பெண் உறவை மறு மதிப்பீடு செய்யும்போது எம் மாதிரியான சிக்கல்கள் ஏற்படுகிறது என்பதனை 'பேரடைஸ்' வித்தியாசமான பார்வையுடன் விவரிக்கிறது என்றார்.
கிம் ஜிஜோக் விருதை வென்ற 'பேரடைஸ்' திரைப்படம் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறும் ஜியோ மாமி எனும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அஜித் நடிக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.
- இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் மற்றும் படக்குழு அஜர்பைஜான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தகல் வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் கவர் இமேஜ்
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தின் கவர் புகைப்படத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதன் மூலம் அஜித்துடன் இணைவதை ஆதிக் உறுதிசெய்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
- விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்பத்'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்பத்'. டைகர் ஷெராப், கீர்த்தி சனோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பூஜா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குட் கோ நிறுவனம் சார்பில் வாசு பாக்னானி, ஜாக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.
இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று (அக்டோபர் 20) திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கண்பத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
My hearty wishes to @iTIGERSHROFF and the entire cast and crew of #Ganapath. All the very best to you and wishing the film a grand success.#tigershroff #ganapath #jackieshroff @bindasbhidu
— Rajinikanth (@rajinikanth) October 20, 2023
- நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்படம் நேற்று வெளியானது.
- இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'லியோ' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் 'லியோ' படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என வெங்கட் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தளபதி 68 படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருவதாகவும் இதற்காக விஜய் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- இனி மும்பை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- தமிழ் சினிமாவுக்கு விடியல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC-இல் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை நடிகர் விஷால் வன்மையாக கண்டித்ததோடு, பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்டு செய்து உத்தரவிட்டார்கள். மேலும் இது தொடர்பான வழக்கை மும்பை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ் படங்களை இந்தியில் வெளியிட சென்சார் சர்டிபிகேட் வாங்கும் முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழகத்திலேயே பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இனி எந்த தயாரிப்பாளரும் தமிழ் திரைப்படங்களுக்கு மும்பை சென்று CBFC-யை அனுகவேண்டிய அவசியம் இல்லை.
தமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழகத்திலேயே சென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி ரிலீசுக்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி பாராட்டி வருகின்றனர்.
- ’லியோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் 'லியோ' படம் குறித்த செய்தியால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது, 'லியோ' திரைப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் இணையத்தில் லீக்காகியுள்ளது. மக்கள் பலர் இப்படத்தை இணையத்தின் மூலம் பார்த்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவையும் தாண்டி படம் வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் லீக்கானது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- இயக்குனர் வெங்கட் பிரபு புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
'லியோ' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படவுள்ளது. இப்படத்தின் பணிகளுக்காக படக்குழு அமெரிக்கா சென்றிருந்தது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் 'லியோ' படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என வெங்கட் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தளபதி 68 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் அப்டேட் கொடுக்க படக்குழு தயாராகவுள்ளது. இதனை அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
We need to start @vp_offl ??? https://t.co/hS1ag4emaP
— Archana Kalpathi (@archanakalpathi) October 19, 2023
- 'லியோ' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. பல மொழி ரசிகர்கள் இப்படத்தை ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , அனிருத் மற்றும் படக்குழுவினர் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்தனர். அப்போது இசையமைப்பாளர் அனிருத் 'BADASS' பாடலை பாடி ரசிகர்களுடன் Vibe செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியானது.
- புதுவையில் 15 திரையரங்குகளில் 'லியோ' படம் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகி உள்ளது. புதுவையில் நகரம் மற்றும் கிராம பகுதியில் உள்ள 15 திரையரங்குகளில் 'லியோ' படம் வெளியாகியுள்ளது. காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என புதுவையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் காலை 9 மணிக்கு படம் வெளியானதாலும் விநியோகஸ்தர்கள் அனுமதி அளிக்காத காரணத்தினால் காலை 9 மணிக்கே புதுவையில் லியோ திரையிடப்பட்டது. வழக்கமாக விஜய் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் பேனர், கட் அவுட்டுகளை வைத்து கொண்டாடுவது வழக்கம்.
கொண்டாட்டத்தில் புதுவை ரசிகர்கள்
பால் அபிஷேகம், பீர் அபிஷேகம், பூ அபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். ஆனால் இந்த முறை பேனர், கட்அவுட் திரையரங்குகள் முன் வைக்கப்படவில்லை. இருப்பினும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவில்லை. திரையரங்குகள் முன்பு காலை 7 மணி முதலே ரசிகர்கள் திரள தொடங்கினர். பேண்டு வாத்தியம் முழங்க பட்டாசு வெடித்தும், நடனமாடினர். கேக் வெட்டி சக ரசிகர்களுக்கு வழங்கினர்.
காமராஜர் சாலையில் விஜய் ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்லும் நேரம் என்பதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தியேட்டருக்குள் காலை 8.30 மணிக்கு பிறகே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்றனர்.
படத்தின் தொடக்கத்தில் விஜய் பெயர் திரையில் ஒளிர்ந்த போதும், விஜய் திரையில் தோன்றிய போதும் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பியதில் தியேட்டர் அதிர்ந்தது. இதனிடையே விதி மீறி சாலையில் நிறுத்தப்பட்ட விஜய் ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த நோட்டீசை ஒட்டினர். மோட்டார் சைக்கிளுக்கு ரூ.200 அபராதம் என்ற அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
- அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'.
- இதில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.
இந்த வெப்தொடரின் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரைலர் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது. 'லேபில்' வெப் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகை அமலா பால் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்டவர்.
சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
அமலா பால் பதிவு
இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். நண்பர்கள் உடன் ஜாலியாக சுற்றுலா செல்வதும் பாருக்கு செல்வதும் என கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
கவர்ச்சியாக வலம் வந்த அமலா பால் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமைதியாக தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து கவர்ச்சி அமலாபால் அமைதியான அமலாபால் ஆக மாறியது ஏன்? என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
- விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியானது.
- இப்படம் படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியானது. இதையொட்டி படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
இதே போல் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் உள்ள 4 தியேட்டர்களில் இன்று லியோ படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பேர் இன்று காலை முதலே தியேட்டருக்கு திரண்டு வந்தனர்.
அப்போது தியேட்டர்கள் முன்பு லியோ திரைப்படம் இல்லை. காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன்திரும்பி சென்றனர். அப்போது சில ரசிகர்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் திடீரென ஒரு தியேட்டரில் கல்வீசி தாக்கினர். இதில் தியேட்டரின் கண்ணாடி உடைந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் ரசிகர்களை தியேட்டரில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் ஆத்தூர் நகரில் லியோ காட்சிகள் ரத்து செய்யப்பட்ட 4 தியேட்டர்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திடீரென காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து கேட்ட போது விநியோகஸ்தர்களுக்கும், திரையங்க உரிமையாளர்களுக்கும் உடன்பாடு ஏற்படாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.