search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படத்திற்கு 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    பின்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் 3 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.


    ரஜினியுடன் செல்பி எடுத்த ரசிகர்கள்

    அந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவர் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். ரசிகர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கையசைத்தார். அப்போது அவருடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    படப்பிடிப்பை முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். குமரி மாவட்டத்தில் சினிமா படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னைக்கு புறப்பட்டார். அவர் கார் மூலம் ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது ஓட்டலின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் காரில் இருந்த ரஜினிகாந்துடன் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்பு நடிகர் ரஜினிகாந்த் காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். 

    • இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். விஷால் 34 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசி யாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது.


    விஷால் 34 படத்தில் இணைந்த கவுதம் மேனன் - சமுத்திரகனி

    இந்நிலையி, 'விஷால் 34' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் இயக்குனர்கள் கவுதம் மேனன் மற்றும் சமுத்திரகனி இணைந்துள்ளனர். இதனை நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். 


    • 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா.
    • இவர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார்.


    ஊர்வசி கொடுத்த புகார்

    இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் வந்தனர். இதில் நடிகை ரவுத்தேலாவும் பார்வையாளராக வந்திருந்தார். அப்போது அவர் தனது 24 கேரட் கோல்டு ஐ போனை தவறவிட்டுள்ளார். இது தொடர்பாக ஊர்வசி, அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

    இந்த புகார் மனுவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், யாராவது போனை பார்த்தால் தன்னை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.


    • விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    லியோ திரைப்படம் வருகிற 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    அதில், 'லியோ' படத்திற்கு முன்பு லோகேஷும் அனிருத்தும் கைகோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து 'லாக்ட் அண்ட் லோடட்' (Locked & Loaded) என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


    • பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஜி.பி.முத்து புகழ் மேலும் அதிகரித்தது.
    • இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

    டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து தனது யதார்த்த பேச்சின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். நாளுக்கு நாள் இவரின் பாலோவர்கள் எண்ணிக்கை அதிகரித்து பல லட்சங்களை தாண்டியது. இதையொட்டி புகழின் உச்சிக்கு சென்ற ஜி.பி.முத்து சினிமாவில் அறிமுகமாகி நடிக்க தொடங்கினார்.

    தனியார் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலங்களில் ஒருவராக வலம் வர தொடங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவரது புகழ் மேலும் அதிகரித்து சினிமா வாய்ப்புகள் வரிசையாக வரத்தொடங்கின. அந்த வகையில் இப்போது அவர் 'ஆர்வன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை ஜி.பி.முத்து தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    • நடிகை வேதிகா, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
    • பேட்ட ராப் படத்தில் பிரபுதேவா உடன் மகிழ்ச்சியாக நடித்து வருகிறேன்.

    'மதராசி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து முனி, காளை, சக்கரகட்டி, காவியத்தலைவன், பரதேசி, காஞ்சனா -3 உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் வேதிகா நடித்து வருகிறார். மீண்டும் சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடித்துவரும் வேதிகா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-


    தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான படங்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நான் நடித்த பரதேசி, காவியத்தலைவன், சிவலிங்கா போன்ற படங்களில் எனக்கு முதன்மை கதாபாத்திரம் கிடைத்தது. தமிழ் சினிமா இப்போது வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் உள்ளதால் மாறுபட்ட வேடங்களில் கதாநாயகிகள் நடித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சிறு பட்ஜெட், பெரிய பட்ஜெட் படங்கள் என்பது முக்கியமல்ல. கதைதான் பட்ஜெட்டை முடிவு செய்கிறது. பேட்ட ராப் படத்தில் பிரபுதேவா உடன் மகிழ்ச்சியாக நடித்து வருகிறேன். முனி 3 என்ற பேய் படத்தில் நடித்தேன்.


    பேய் இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியாது. பேய் படம் பிடிக்கும் ஆனால் பேயைக் கண்டு ரொம்ப பயப்படுவேன். நான் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். அதனால் அசைவம் சாப்பிடுவதில்லை. பால் கூட குடிப்பதில்லை. காரணம் என்னவென்றால் கன்று குட்டி குடிக்க வேண்டிய பாலை திருடி நாம் குடிப்பது போல் உள்ளது. எனவே பால் குடிப்பதில்லை. தோல் செருப்பு கூட அணிய மாட்டேன். ஓ.டி.டி யில் நல்ல ஆழமான கருத்துள்ள பிடித்தமான கதைகள் வருகின்றன.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து 'லியோ' படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், கோவையில் உள்ள பிரபல திரையரங்கான கே.ஜி.சினிமாஸ் திரையரங்கில் 'லியோ' படத்தின் பால்கனி டிக்கெட்டுக்காக ரூ.192 வசூலிக்கப்படும் போது அதனுடன் காம்போ பேக்காக ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து ரூ.450 வரை வசூலிக்கப்படுகிறது.


    இந்த காம்போ பேக்கில் டிக்கெட் வாங்குபவர்கள் டிக்கெட் எடுக்கும் போது பாப்கான், குளிர்பானம் போன்றவற்றையும் உடனடியாக சேர்த்து பதிவு செய்து வாங்கி செல்ல வேண்டும் என்று திரையரங்க ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும், காம்போ பேக் இல்லாமல் வெறும் ரூ.192 கொண்ட பால்கனி டிக்கெட் கொடுக்க ஊழியர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

    • ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் விநாயக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24-ஆம் ரிலீஸாக உள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'துருவநட்சத்திரம்' திரைப்படத்தில் நடிகர் விநாயக் ஸ்டைலிஸ் வில்லனாக நடித்துள்ளார். அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கவுதம் மேனன், "ஜெயிலர்' படத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகத்தை இந்த படத்தில் ஸ்டைலான வில்லனாக பார்க்கலாம். 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது" என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் விநாயக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

    • வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் மிலன்.
    • இவர் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றினார்.

    2006-ஆம் ஆண்டு வெளியான கலாபக் காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் மிலன். இவர் வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.


    அஜித்- மிலன்

    இந்நிலையில், இன்று கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜான் நாட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதாவது, இன்று அதிகாலை மிலன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பாதிவழியிலேயே மிலன் உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
    • இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24-ஆம் ரிலீஸாக உள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'துருவநட்சத்திரம்' திரைப்படத்தை யூனிவர்ஸ் போன்று உருவாக்க விருப்பம் உள்ளதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். அதாவது 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தால் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' போல 'துருவ நட்சத்திரம்' படத்தை வைத்து ஒரு யூனிவர்ஸை உருவாக்கும் ஐடியா இருப்பதாகவும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் அதன் இரண்டாம் பாகத்திற்கான லீட் உள்ளதாகவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நானி நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய் நான்னா’.
    • இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஹாய் நான்னா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் தற்போது இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுஷ்மிதா அன்புசெழியன், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், மனோபாலா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் சந்தானம் தொடங்கியுள்ளார். இதனை சந்தானம் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    ×