என் மலர்
சினிமா செய்திகள்
- நயன்-விக்கி தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன.
திரையுலகின் பிரபலங்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நயன் -விக்கி தம்பதி தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக்கின் முதல் பிறந்தநாளை நெருங்கிய உறவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
- நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து 'அனிமல்' படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் 'உத்து பாத்தேன்.. என்னவிட கெட்டவன் எவனும் இல்ல' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 30-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது.
இதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம், "நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், 'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், "30-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த 'லியோ' இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அதிக பாஸ்கள் கோரிக்கை வந்ததால் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
- ரம்லா பேகம் தனது இசை பயணத்தை சிறுவயதிலேயே தொடங்கினார்.
- இவர் ஏராளமான மலையாள இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
கேரள மாநிலத்தில் மாப்பிளப்பாட்டு பாடல்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல பாடகி ரம்லா பேகம் (வயது 86). வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோழிக்கோடு பரப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 1946-ம் ஆண்டு பிறந்த அவர், ரம்லா இந்தி பாடல்களை பாடியதன் மூலம் தனது இசை பயணத்தை சிறுவயதிலேயே தொடங்கினார். பின்பு ஆலப்புழாவில் உள்ள இசைக்குழுவில் இடம்பெற்றிருந்த அவர், ஏராளமான மலையாள இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
கேரள மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் கதாபிரசங்கம் கொடுத்த சாதனை ரம்லா பேகத்துக்கு உள்ளது. தடைகளை மீறி பல கோவில்களிலும் இவர் பாடியிருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட கேசட்டுகள், 35-க்கும் மேற்பட்ட கிராமபோன் இசைத்தட்டுகளிலும் பாடியுள்ள அவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார்.
- பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற காண்ட்ராக்டருடன் ஒப்பந்தம் செய்தார்.
ஜமீரின் உறவினரான காதர் இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பரிந்துரை செய்துள்ளார். பாபிசிம்ஹாவும், காதரும் நண்பர்கள் என்பதால் அதனடிப்படையில் வீடு கட்டி கொடுக்க இருவரும் சம்மதித்தனர். கட்டுமான பணிகள் செய்வதற்காக பாபிசிம்ஹாவிடம் ஜமீர் ரூ.1. கோடியே 70 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை கட்டி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
பணிகள் பாதியில் நிற்கவே இதுகுறித்து ஜமீரிடம் கேட்டபோது கூடுதலாக பணம் கொடுத்தால்தான் வீட்டை கட்டி முடிக்கமுடியும் என தெரிவித்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தி சென்றதால் பாபிசிம்ஹா அதிர்ச்சிஅடைந்தார்.
இதையடுத்து ஜமீர், உசேன், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது பாபிசிம்ஹா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பாபிசிம்ஹா கொடைக்கானலில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது, ஜமீரின் மைத்துனரான காதர் எனது நண்பர். அவர் சொன்னதால்தான் ஜமீருக்கு வீடுகட்ட ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். ரூ.1.70 கோடி பணம் வாங்கி கொண்டு தரமற்ற கட்டிடப்பணிகளை செய்துள்ளனர்.
பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகள் என்னிடம் கொடுக்கவில்லை. முறைகேடு செய்தது குறித்து கேட்டபோது உள்ளூர் மக்களை திரட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஒரு நடிகரான எனக்கே இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும். என சந்தேகம் எழுந்துள்ளது.
பலமற்ற தரைத்தளம்,செட் அமைத்தது போல கட்டிட பணிகளை மோசமான நிலையில் கட்டி கொடுத்துள்ளனர். இதனை நான் புகாராக தெரிவித்தால் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர உள்ளேன். அங்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். 30 வருடமாக வசித்து வரும் தன்னை கொடைக்கானலை சேர்ந்த சிலர் சமூகஆர்வலர் என்ற பெயரில் கூறிக்கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
- பாடல் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் `BADASS' பாடலின் புரோமோ வீடியோ வெளியானது.
`BADASS' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மால்’.
- இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ளார் சிவராஜ்.ஆர்.
இயக்குனர் தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மால்'. இந்த படத்தில் சாய் கார்த்திக், கஜராஜ், கவுரி நந்தா, அஸ்ரப், தினேஷ் கார்த்திக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பத்மயன் சிவானந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ளார் சிவராஜ்.ஆர்.
சிலை கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து பரபரப்பாக உருவாகியுள்ள இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது
- எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாலி’.
- இப்படத்தின் இந்தி உரிமை போனி கபூருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு 'வாலி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் இந்தி உரிமை போனி கபூருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கதை எழுதியவற்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணத்தையும் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்யாததால் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கு தான் சொந்தமானது அதனால் இப்படத்தின் இறுதி ரீமேக் வேலையை துவங்குவதற்கு இடைக்கால அனுமதியை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாக்குமூலங்களை பதிவு செய்யும் நீதிமன்றத்தில் நீதிபதி கிங்ஸ்லி கிரிஸ்டோபர் முன்பு இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த விசாரணை திங்கள் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ’ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை கடந்துள்ளது.
- இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் விஜய் ரசிகர்கள் 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், "வாழ்த்துகளுக்கு நன்றி. விஜய்யின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். லவ் யூ விஜய்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த டுவீட்டை ரீடுவீட் செய்துள்ள நடிகர் விஜய், "ஷாருக்கான், அட்லீ மற்றும் ஜவான் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Congratulations on the blockbuster @iamsrk, @Atlee_dir and the entire #Jawan team!
— Vijay (@actorvijay) September 27, 2023
Love you too @iamsrk sir https://t.co/yq5T2BOhz8
- 'அசோசியேஷன்ஸ் ஆப் அறுவை சிகிச்சை இந்தியா' என்ற அமைப்பினர் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
- இந்த நிகழ்ச்சி நடத்த அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு 'அசோசியேஷன்ஸ் ஆப் அறுவை சிகிச்சை இந்தியா' என்ற அமைப்பினர் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஏ.ஆர்.ரகுமானை புக் செய்து முதற்கட்டமாக ரூ. 29 லட்சத்தி 50 ஆயிரத்தை அசோசியேஷன் கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி நடக்காததால் முதற்கட்டமாக கொடுத்த தொகையை அசோசியேஷன், ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்டுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். இந்த காசோலையை பல முறை வங்கியில் செலுத்தியும் பவுன்ஸ் ஆனதால் இது நிலுவையில் இருந்தது. ஏ.ஆர்.ரகுமானிடமும் அவரது மேலாளர் செந்திலிடமும் பல முறை இந்த நிறுவனம் தொகையை கேட்டுள்ளது.
கடந்த 5 வருடமாக ரூ. 29 லட்சத்தி 50 ஆயிரத்தை திருப்பி கொடுக்கப்படாமல் இருந்ததால் இது தொடர்பாக அந்த அசோசியேஷனின் அமைப்பு செயலாளர் விநாயகக் செந்தில் என்பவர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகாரில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ்.
- இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் மாயா நதி, மின்னல் முரளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான '2018' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் டோவினோ தாமஸ் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டியப் படங்களின் வரிசையில் இடம்பெற்றது. மேலும் மக்களிடம் 'இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி' என்கிற பாராட்டுக்களையும் பெற்றது.
நடிகர் டோவினோ தாமஸ் சமீபத்தில் செப்டிமியஸ், சிறந்த ஆசிய திரைப்பட நடிகருக்கானப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள டோவினோ தாமஸ், "ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018-ல் நம்மை தாக்கி பெருவெள்ளத்தால் கேரளா விழத் தொடங்கியது. பிறகு, நாம் எத்தகைய மன உறுதி மிக்கவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினோம். 2018 படத்திற்காக சிறந்த ஆசிய நடிகர் என்ற விருது வழங்கிய செப்டிமியஸ் விருது குழுவுக்கு நன்றி. இந்த விருது கேரளாவுக்கானது" என்று பதிவிட்டுள்ளார்.
Our greatest glory is not in never falling, but in rising every time we fall. In 2018, Kerala began to fall when unexpected floods knocked on our doors. But then the world saw what Keralites were made of…
— Tovino Thomas (@ttovino) September 26, 2023
Thank you SEPTIMIUS AWARDS for selecting me as the Best Asian Actor. It… pic.twitter.com/OZ1SAraDzp
- ஆஸ்கர் விருதுக்கு படங்கள் பரிந்துரை செய்யப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
- மொத்தம் 22 திரைப்படங்கள் பரிந்துரைக்கு அனுப்படுகிறது.
இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பில் 96-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை பரிந்துரை குழுவினர் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை, அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபையில் நடைபெற்றது.
இதில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து 22 திரைப்படங்கள் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்படுகிறது.
தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை -1', மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்', வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி', இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் வெளியான '1947 ஆகஸ்ட் 16' திரைப்படமும் முன் மொழியவுள்ள பட்டியலில் உள்ளது.
தமிழில் 4 திரைப்படங்களும், தெலுங்கில் 4 திரைப்படங்களும், இந்தியில் 11 திரைப்படங்களும், மலையாளத்தில் ஒரு திரைப்படமும், மராத்தியில் 2 திரைப்படமும் இந்த பரிந்துரை பட்டயலில் இடம்பெற்றுள்ளன. மலையாளத்தில் '2018' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.