என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'குஷி'.
- இப்படம் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'குஷி'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 70 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, எனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலா ஒரு லட்சம் வீதம் 100 குடும்பங்களுக்கு கொடுப்பேன் என்றும் இந்த தொகை ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தான் சொன்னது போன்று 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- விஷால் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இன்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் எஸ்.ஜே. சூர்யா, சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார்.
- விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
- இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 'ரத்தம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு நாள்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்றத்தாழ்வு குறித்து உருவாகியுள்ள இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படவுள்ளது. இப்படத்தின் பணிகளுக்காக அமெரிக்க சென்றிருந்த விஜய் சமீபத்தில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் 'தளபதி 68' அப்டேட் கொடுக்குமாறு ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு விரைவில் என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Viraivil https://t.co/SHNkNqz1uj
— venkat prabhu (@vp_offl) September 14, 2023
- நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'.
- இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மனோஜ் பாரதிராஜா பேசியதாவது, 18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குனராக வந்திருக்கிறேன். சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதைய சொல்லியிருந்தேன். திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு 'நீங்க படம் பண்ணுங்க' என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை.
கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்ஷனா மற்றும் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவரும் பாருங்கள். என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் என்றால் ஒரு குடும்பம் என்று சொல்லலாம். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று பேசினார்.
மேலும், பாரதிராஜா பேசியதாவது, என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை ஜாம்பவான்களுக்கும் நன்றி. நடிகனாக இருந்து இயக்குநராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது நம்பிக்கை உள்ளது. டிரைலர் தான் காட்டியிருக்கிறான், மிக அற்புதமாக செய்துள்ளான். முக்கியமாக நான் நன்றி தெரிவிக்க வேண்டியவர் யார் என்றால் சுசீந்திரன் தான். காதலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அத்தனை இயக்குனர்களும் என்னை அப்பா என்று தான் அழைத்தார்கள். மிகவும் மகழிச்சி. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன் என்று பேசினார்.
- ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அடியே’.
- இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பிரபு, இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், ஜி.வி.பிரகாஷ் குமார், கவுரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன் ஆகிய படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது, 'அடியே' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போதுள்ள சூழலில் முதலீடு செய்து திரைப்படத்தை தயாரித்து, திரையரங்குகளில் வெளியிட்டு, அதில் வெற்றி பெற்று, அதன் ஊடக லாபத்தை காண்பது என்பது அரிதானது. அந்த வகையில் இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
என்னுடைய நடிப்பில் வெளிவந்த 'பேச்சுலர்', 'செல்ஃபி' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'அடியே' திரைப்படமும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்திருக்கிறது. ஒரு படத்தில் நடிக்கிறோம். தயாரிப்பாளர் முதலீடு செய்கிறார். அதில் அவர் லாபம் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சி இருக்கும். அப்போதுதான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இந்த திரைப்படம் வசூலில் வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
நடிப்பை பொறுத்தவரை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் வழிகாட்டுதல் தான் காரணம். படத்தை பார்த்த ரசிகர்கள் ஏராளமானவர்கள் எனது நடிப்பை பாராட்டினார்கள். இவை அனைத்தும் இயக்குனரைத்தான் சாரும். படத்தின் ஒளிப்பதிவு பிரமாதம். இப்படத்தின் படத்தொகுப்பு வித்தியாசமாக இருந்ததாக அனைவரும் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதற்காகவும் அறிமுக படத்தொகுப்பாளர் முத்தையனை பாராட்டுகிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
- இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'.
- இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார்.
இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'. இதில் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஏ. எல். ரமேஷ் மேற்கொண்டிருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், '' பித்தல மாத்தி என்றால் கேடித்தனம். தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை. கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படத்தை செப்டம்பர் 22 -ஆம் தேதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.
- தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை நடிகர் அதர்வா மதிப்பதில்லை எனவும் மதியழகன் புகார்.
- அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் சரமாரி குற்றச்சாட்டு.
ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் அதர்வா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மதியழகன் புகார் மனு அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை நடிகர் அதர்வா மதிப்பதில்லை எனவும் மதியழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டாமல், பணத்தை திருப்பி தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அதர்வா தனது அப்பா முரளியின் பெயரை வைத்து ஏமாற்றி வருவதாகவும், அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
- இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மை3’.
- 'மை3’ வெப்தொடருக்கு கணேசன் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மை3'. இந்த தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புகுள்ளாகிவிடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, மை3 என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்கு பதிலாக சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை, ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை.
மை3 போஸ்டர்
ரொமாண்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'மை3' வெப்தொடரை Trendloud நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடருக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய கணேசன் இசையமைத்துள்ளார். 'மை3' வெப்தொடர் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கே.திருஞானம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’ஒன் 2 ஒன்’.
- இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார்.
திரிஷா நடிப்பில் வெளியான 'பரமபதம் விளையாட்டு' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.திருஞானம். இவர் இயக்கும் இரண்டாவது படம் 'ஒன் 2 ஒன்'. விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன், நடிகை நீது சந்த்ரா, ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
24 ஹெச்.ஆர்.எஸ் (24 HRS) புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். இவர் அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் கே.திருஞானம் அவருக்கு ஒரு புதிய ஐ போன் (IPhone) ஒன்றை பரிசளித்துள்ளார். 'ஒன் 2 ஒன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிம்பு மீது ஏற்கனவே பல முறை புகாரளித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
- நடிகர் தனுஷ் படப்பிடிப்புக்கு வராமல் நஷ்டம் ஏற்படுத்தியதாக புகார்.
அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் நான்கு நடிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
சிம்பு மீது ஏற்கனவே பல முறை புகாரளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை மேற்கொள்காட்டி ரெட்கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக வரவு, செலவு வைக்காதது தொடர்பாக ரெட்கார்டு கொடுக்கவுள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தனுஷிற்கு ரெட்கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அவருக்கு ரெட்கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
- நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நாளை (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஷால்
இந்நிலையில், நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.