என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மை3’.
- 'மை3’ வெப்தொடருக்கு கணேசன் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மை3'. இந்த தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புகுள்ளாகிவிடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, மை3 என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்கு பதிலாக சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை, ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை.
மை3 போஸ்டர்
ரொமாண்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'மை3' வெப்தொடரை Trendloud நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடருக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய கணேசன் இசையமைத்துள்ளார். 'மை3' வெப்தொடர் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கே.திருஞானம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’ஒன் 2 ஒன்’.
- இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார்.
திரிஷா நடிப்பில் வெளியான 'பரமபதம் விளையாட்டு' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.திருஞானம். இவர் இயக்கும் இரண்டாவது படம் 'ஒன் 2 ஒன்'. விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன், நடிகை நீது சந்த்ரா, ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
24 ஹெச்.ஆர்.எஸ் (24 HRS) புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். இவர் அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் கே.திருஞானம் அவருக்கு ஒரு புதிய ஐ போன் (IPhone) ஒன்றை பரிசளித்துள்ளார். 'ஒன் 2 ஒன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிம்பு மீது ஏற்கனவே பல முறை புகாரளித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
- நடிகர் தனுஷ் படப்பிடிப்புக்கு வராமல் நஷ்டம் ஏற்படுத்தியதாக புகார்.
அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் நான்கு நடிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
சிம்பு மீது ஏற்கனவே பல முறை புகாரளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை மேற்கொள்காட்டி ரெட்கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக வரவு, செலவு வைக்காதது தொடர்பாக ரெட்கார்டு கொடுக்கவுள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தனுஷிற்கு ரெட்கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அவருக்கு ரெட்கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
- நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நாளை (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஷால்
இந்நிலையில், நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.
ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'சித்தா' படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் இப்படம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "வித்தியாசமான தமிழ் படங்களை பார்க்க வேண்டும் எடுக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர்களில் ஒருவர் சித்தார். இப்படி சினிமாவை நற்திசையில் நோக்கி நகர்த்தும் பல கலைஞர்களில் முக்கியமான ஒருவர் சித்தார்த். அவர் 'சித்தா' படத்தின் நாயகன். சித்தப்பாவாக இருப்பது மிகவும் கடினம் கூட மிகவும் சந்தோஷமானதும் கூட. இந்த சித்தப்பாவின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். 'சித்தா' திரைப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’.
- இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், 'ஜப்பான்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, "Voice மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி" என்று பதிவிட்டுள்ளார்.
- மனோஜ் பாரதிராஜா இயக்கி வரும் திரைப்படம் 'மார்கழி திங்கள்'.
- இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார்.
நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'மிஸ்டேக்கோட சேர்ந்தது தான் லைஃப்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- கவிஞர் வைரமுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
- இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
திரையுலகில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில் இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது இவர் பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.
ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய வைரமுத்து
இந்நிலையில், 'கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்'என்ற தலைப்பில் ஆய்வுசெய்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதை அறிந்த வைரமுத்து அவரை வீட்டுக்கழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், தனது சமூக வலைதளத்தில், "லூர்துராஜ்
ஓர் ஆட்டோ ஓட்டுநர்
'கவிப்பேரரசு வைரமுத்து
திரைப்பாடல்களில்
புதுக்கவிதைக் கூறுகள்'
என்ற தலைப்பில் ஆய்வுசெய்து
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்
வியந்து போனேன்;
வீட்டுக்கழைத்துப்
பாராட்டினேன்
ஆட்டோ ஓட்டுநர்
கூட்டத்தில் ஓர் அதிசயம்
வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
- நடிகர் விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- இப்படத்தின் பணிகளுக்காக விஜய் அமெரிக்கா சென்றார்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகளுக்காக அமெரிக்க சென்றிருந்த விஜய் சமீபத்தில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், நடிகர் விஜய், நேற்று தனது பெற்றோரை சந்தித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரையும், அம்மாவையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் 'உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து' என்று குறிப்பிட்டுள்ளார்.
உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து. ? pic.twitter.com/ZDCLws2gGt
— S A Chandrasekhar (@Dir_SAC) September 14, 2023
- ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நெரிசலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனம் சிக்கியது.
- இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.
முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த நெரிசலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனமும் சிக்கியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், ஏ.ஆர்.ரகுமானையும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மன்னிப்பு கேட்டதுடன் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாந்து சென்ற ரசிகர்கள் டிக்கெட்டை இமெயிலில் அனுப்ப கூறியும், அதை பரிசீலனை செய்து அவர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப தருவதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் இருபதாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கிய நிலையில் 41,000 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்டு ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ள கடிதத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் இதனால் 20 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் வேலையில் ஈடுபடவுள்ளதாகவும் காவல் துறை இந்த நிகழ்ச்சிக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், மேலும் டிக்கெட் விற்பனை செய்தது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால் குறைவான காவலர்கள் பணியாற்றியதால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடக்கும் என்று கூறப்படுகிறது.
- பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’.
- இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான 'தோரி போரி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள 'அன்னை அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாம்' போன்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
- 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியானது.
- இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' செப்டம்பர் 7-ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.