என் மலர்
சினிமா செய்திகள்
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.
ரஜினி 171 போஸ்டர்
இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
We are happy to announce Superstar @rajinikanth's #Thalaivar171
— Sun Pictures (@sunpictures) September 11, 2023
Written & Directed by @Dir_Lokesh
An @anirudhofficial musical
Action by @anbariv pic.twitter.com/fNGCUZq1xi
- 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சி நடைபெறாமலேயே இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் அன்றைய தினம் பெய்த மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என்றும் முன்பு வாங்கிய டிக்கெட்டுகள் இதற்கு செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சி நடைபெறாமலேயே இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதாவது, இருபதாயிரம் பேர் அமரக்கூடிய இடத்தில் ஐம்பதாயிரம் பேர் இருந்ததாகவும் ரூ.50,000 டிக்கெட் வாங்கியவர்கள் இருக்கும் இடத்தில் சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாடு சரியில்லை. குடிக்க தண்ணீர் இல்லை, சரியான கார்பார்க்கிங் இல்லை இப்படியான ஒரு நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்திருக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பல ரசிகர்கள் போக்குவரத்து நெரிசலால் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்த இன்று சக்சஸ் மீட் நடைபெற்றது.
- இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர்.
இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்த இன்று சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில், ஜெயிலர் படத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தங்க நாணயம் வழங்கி சிறப்பித்தார்.
மேலும், சக்சஸ் மீட்டை தொடர்ந்து அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. இதில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
- ஜெயம் ரவியின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
- ‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார்.
ஜெயம் ரவிக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி படத்தில் அவருடைய முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அவரின் 21 வருட திரை வாழ்க்கையில் இதுவரை நடிக்காத தோற்றத்தில் மிரட்டலாக தோன்றியுள்ளார். ஒரு தோற்றம் அமைதி கலந்த கோபமான தோற்றத்திலும் இன்னொரு கதாபாத்திரம் இளமை துள்ளலுடன் ரொமான்ஸ் பார்வையிலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்று இசை வெளியீடு நடைபெற உள்ளது. 'சைரன்' படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
- கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
- சங்க வளர்ச்சி பணிகள் கட்டிட பணிகள் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.
எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தியும், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து பொதுச்செயலாளர் விஷாலும் உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, சி.பி.ராஜ், லதா சேதுபதி, விக்னேஷ் சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், சீனிவாச ரெட்டி, ரத்தின சபாபதி, பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளி முத்து உள்பட முன்னணி நடிகர்-நடிகைகள் நாடக கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா, மாரிமுத்து, நடிகை அங்காடி தெரு சித்து உள்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் சங்க வளர்ச்சி பணிகள் கட்டிட பணிகள் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயற்குழு கூட்டம் காலை 9 மணிக்கு நடந்தது. இதில் 23 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் நன்றியுரை ஆற்றினார். நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கலை நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
- இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
- இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பரபரப்பு காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 'ரத்தம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ஜிகர்தண்டா -2’
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் "ஜிகர்தண்டா". சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜிகர்தண்டா -2 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜிகர்தண்டா -2' திரைப்படத்தின் டீசர் 11-ஆம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
#JigarthandaDoubleX
— karthik subbaraj (@karthiksubbaraj) September 9, 2023
More Than a 'Teaser'
Releasing on 11th September @ 12:12 pm
Let's Start XXing!!#MorethanATeaser#DoubleXDiwali @offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh@kunal_rajan @sheriffchoreo@kaarthekeyens @stonebenchers @5starcreationss… pic.twitter.com/bGKFGR8GK4
- இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி ‘800’ படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'கனிமொழி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எம்.எஸ்.ஸ்ரீபதி. இவர் தற்போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' படத்தை இயக்கியுள்ளார். மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசியதாவது, "இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனர் ஸ்ரீபதி என நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மன்றம் அமைத்தோம். என் கஷ்டத்தின் போது உதவி செய்த என் நாட்டு மக்களுக்கு திரும்ப நல்லது செய்ய வேண்டும் என இதை ஆரம்பித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, ஆயிரம் மாணவர்களைப் படிக்க வைப்பது என பல விஷயங்களை செய்து வருகிறோம். வெங்கட்பிரபுவும் என் மனைவியும் சிறு வயது நண்பர்கள். அவர்கள் சந்தித்து பேசினார்கள். வெங்கட்பிரபு பேசிக் கொண்டிருக்கும் போது, என்னைப் பற்றி பயோபிக் எடுக்கலாம் என்று சொன்னார். இந்தப் படம் மூலம் வரும் பணம் டிரஸ்ட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று என் மேனேஜர் ஆலோசனை சொன்னார்.
என்னைப் பற்றி நன்றாக ஆராய்ந்து தான் இயக்குனர் ஸ்ரீபதி கதை எழுதியுள்ளார். வெங்கட்பிரபுதான் முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என்பதால் விலகிவிட்டார். ஸ்ரீபதியை நான் இயக்க சொன்னேன். பின்பு விஜய்சேதுபதி வந்தார். ஆனால், அதிலும் பிரச்சினை வந்தது. இந்த பிரச்சினைகள், கொரோனா இதை எல்லாம் தாண்டி படத்தை முடித்த இயக்குனர் ஸ்ரீபதிக்கும், படத்திற்கு ஒத்துழைத்த மொத்த குழுவுக்கும் நன்றி. நாங்கள் மலையகத் தமிழர்கள் வம்சாவளியில் வந்தோம். எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பல தடைகள் வந்தது. படத்திற்கும் அப்படியான தடைகள் இருந்தது. ஆனால், இலங்கையில் எடுத்த 80 நாட்களும் படத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு அரசு ஒத்துழைப்புக் கொடுத்தது.
எல்லாம் உண்மை சம்பவங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்கிரிப்டில் அப்படியே ஸ்ரீபதி கொண்டு வந்துள்ளார். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. 'நீங்கள் காப்பி பண்ண வேண்டாம், எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் நடியுங்கள்' என்று ஹீரோ மதுரிடம் சொன்னேன். கிரிக்கெட் படமாக இல்லாமல் '800' நான் சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன, என்ன பிரச்சினைகளோடு விளையாடினேன், என்னால் நாடு எந்த நிலைக்கு வந்தது என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளோம். படம் உங்களுக்கும் பிடிக்கும்" என்றார்.
- சந்தானம் நடிப்பில் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்'.
- இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இதுவரை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து இப்படம் சாதனை படைத்துள்ளது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மெரினா மாலில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தில் வரும் இடங்களின் மீட்டுருவாக்கம் செய்து பிரத்தியேகமான ஸ்கேரி ரூம் ஜீ5 நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
- அவரது உடல் பசுமலைதேரிக்கு எடுத்து செல்லப்பட்டது.
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள பசுமலை தேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (57). சீமான், மணிரத்தினம், வசந்த, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு திரையுலகினர் அஞ்சலி செலுத்திய நிலையில் மாலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டது.
இன்று அதிகாலை 3மணி அளவில் தேனி மாவட்ட எல்லையை அவரது உடல் அடைந்ததும் அங்கு காத்திருந்த ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது கிராமமான பசுமலைதேரிக்கு எடுத்து செல்லப்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 6 மணி அளவில் அவரது வீட்டிற்கு முன்பு மாரிமுத்து உடல் வைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
- நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
காந்த கண்கள், இளைஞர்கள் மட்டுமல்ல எல்லோரையும் மயக்கும் பார்வை, சொக்க வைக்கும் நளினமான நடனம், 90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே அதுபாட்டுக்கு படம் ஓடும் என்றால் அவர் தான் சில்க் சுமிதா.
சில்க் சுமிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர். சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தில் அவர் தோன்றிய காட்சி அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், ரிதுவர்மா நாயகியாகவும் நடித்துள்ளனர். முதலில் டிரைலரை பார்த்த பலரும் ஏதோ கிராபிக்சில் சில்க் சுமிதாவின் உருவத்தை கொண்டுவந்துள்ளனர் என்றுதான் எண்ணினர். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது அவர் அச்சு அசலாக சில்க்கின் தோற்றத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் மாடல் என்பது.
அவரது பெயர் விஷ்ணுபிரியா காந்தி. இன்ஸ்டாகிராமில் கலக்கிய அவர் முதன்முறையாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளதோடு சில்க்கின் முக பாவனைகள் அனைத்தையும் கண்முன் கொண்டுவந்திருப்பது சற்று ஆச்சரியமானதுதான்.
நடிகர் தியாகராஜன் நடித்து 1984-ல் வெளியான நீங்கள் கேட்டவை படத்தில் சில்க் சுமிதாவின் ஆட்டம் இன்றும் பலருக்கு நீங்கா நினைவாக உள்ளது. அதே பாடலின் ரீமிக்சில் 'மார்க் ஆண்டனி' படத்தில் சில்க் சுமிதா தோற்றத்தில் விஷ்ணுபிரியா காந்தி கலக்கியுள்ளார். அதே கண்கள், அதே பார்வை, அதே நளினம் என நிஜத்தில் சில்க் சுமிதாவாகவே மாறியுள்ளார்.
இதுகுறித்து, மார்க் ஆண்டனி படத்தின் மேக்கப் மேன் கிருஷ்ண வேணி பாபு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடும் போது, "சில்க் சுமிதாவை மீண்டும் திரையில், எனது கைவண்ணத்தில் காண ஆவலோடு உள்ளேன்" எனக்குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவிற்கு விஷால், மற்றும் விஷ்ணுபிரியா காந்தி இருவரையும் டேக் செய்து, அவர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
சில்க் வேடத்தில் நடித்தது விஷ்ணுபிரியா காந்தி என்பது மேக்கப் மேன் கிருஷ்ணவேணி பாபு பதிவிட்டபிறகே திரை உலகினருக்கே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.விஷ்ணு பிரியாகாந்தி இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவுகளுக்கு பலரும் " நீ சில்க் சுமிதா போலவே இருக்கிறாய்" என கருத்துக்களை கூறியிருந்தனர். இதை பார்த்தே திரைப்பட குழு விஷ்ணு பிரியா காந்தியை மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேல் 'லியோ' திரைப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், 'லியோ' திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தொழிற்சாலையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.