search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் நடிகர் வசந்த் ரவிக்கு மிகப்பெரிய மையில் கல்லாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், நடிகர் வசந்த் ரவி, 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், 'ஜெயிலர்' எனது சினிமா பயணத்தில் மிக முக்கியமான மைல் கற்களில் ஒன்றாக மாறியுள்ளது. நான் இத்தனை வருடங்களாக இந்த துறையில் கற்ற முழு அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் உறுதி ஆகியவற்றிற்கு இந்தப் படம் அங்கீகாரம் கொடுத்து, என்னை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது!!


    ஆகஸ்ட் 11, 2017 அன்று, இயக்குநர் ராம் சார் என்னை பிரபுநாத் என 'தரமணி' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆகஸ்ட் 10, 2023 அன்று, ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாரின் மகன் அர்ஜுன் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் அடியெடுத்து வைத்தது என இவை அனைத்தும் இந்த பிரபஞ்சம் எனக்கு கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசாகவே நான் பார்க்கிறேன்.

    என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. எனது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே இடைவிடாத ஊக்கம் மற்றும் ஆதரவை அளித்த 'தலைவர்' ரஜினிகாந்த் (அப்பா) சாருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்.


    விலைமதிப்பற்ற நினைவுகளை எனக்கு பரிசளித்த ரஜினி அப்பாவுக்கு மீண்டும் எனது மனப்பூர்வமான நன்றிகள். படப்பிடிப்பில் அவருடன் கழித்த ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் அழியாத நினைவாக என் நெஞ்சில் இருக்கும். அவர் சொன்ன விஷயங்கள் எனது நடிப்புத் திறனை மட்டுமல்ல, மனிதநேயம், ஆன்மீகம் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள் பற்றிய விஷயங்கள் இவை அனைத்தும் எனக்கு வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதலையும், புதிய பரிமாணத்தையும் கொடுத்துள்ளது இது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம்.

    இத்தகைய மகத்தான வெற்றியை என்னை அனுபவிக்கச் செய்து, ஒவ்வொரு நொடியும் உயிர்ப்பிக்கச் செய்த சன் பிக்சர்ஸ் சேர்மன் திரு.கலாநிதி மாறன் சார் மற்றும் ஜெயிலரின் ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


    வசந்த் ரவி பதிவு

    எனது கடின உழைப்பை மிகவும் பாராட்டிய பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள், யூடியூபர்கள்,மீம் கிரியேட்டர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றி.

    எனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்துவேன் என்ற வலுவான நம்பிக்கையுடன் என்னுடன் நின்ற எனது குடும்பத்தினருக்கும், எனது ரசிகர்களுக்கும் நன்றி. வரவிருக்கும் ஆண்டுகளில் மிகுந்த பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து கொடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொண்டு .... விரைவில் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க காத்திருக்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் ராகவா லாரன்ஸ் 'சந்திரமுகி- 2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அறக்கட்டளை நடத்தி அதன் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தும் வருகிறார். இவர் சமீபத்தில் என் அறக்கட்டளைக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், இது குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சிறிது நாட்களுக்கு முன்பு என் அறக்கட்டளைக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். அதற்கு காரணம் நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் போது அறக்கட்டளை ஆரம்பித்தேன் 60 குழந்தைகளை வீட்டில் வளர்ப்பது, மாற்று திறனாளிகளுக்கு டான்ஸ் சொல்லி கொடுப்பது என்று செய்து வந்தேன். அப்போது என்னால் அதை பண்ண முடியவில்லை அதனால் மற்றவர்களின் உதவிகளை கேட்டிருந்தேன்.


    ஆனால், இப்போது ஹீரோவாகிவிட்டேன் ஒரு வருடத்திற்கு மூன்று படங்கள் நடிக்கிறேன் நல்ல பணம் வருகிறது. எனக்குள்ளே ஒரு கேள்வி இருந்தது உனக்கு நல்லாதானே பணம் வருகிறது ஏன் மற்றவர்களிடம் வாங்கி செய்ய வேண்டும் நீயே செய்யலாமே என்று. ஆணவமாக பணத்தை வேண்டாம் என்று கூறவில்லை. எனக்கு கொடுக்கும் பணத்தை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கஷ்டப்படும் அறக்கட்டளைக்கு கொடுங்கள். உங்கள் கையால் இது போன்று செய்யும் போது அதில் கிடைக்கும் சந்தோஷமே தனி" என்று பேசினார்.





    • ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'திரகபாதர சாமி'.
    • இப்படத்தின் டீசரை தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டார்.

    இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'திரகபாதர சாமி'. இந்த படத்தில் ராஜ் தருணுக்கு ஜோடியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த டீசரை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது நடிகை மன்னரா சோப்ரா பக்கத்தில் இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி நின்று கொண்டிருந்தார். அப்போது அனைவரின் முன்பாக இயக்குனர் திடீரென நடிகைக்கு முத்தமிட்டார். இதனை சிறிதும் எதிர்பாராத நடிகை பதறி போனார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • 'மார்க் ஆண்டனி' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • விஷால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

    செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ஆதரவற்ற முதியவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

    இதையடுத்து நடிகர் விஷால் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் தனது பிறந்த நாளை ஆதரவற்ற முதியோர்களுடன் கொண்டாடியுள்ளார்.

    பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "பெரியவர்கள் வாழ்த்தும் போது கடவுள் நேரில் வந்து வாழ்த்துவது போன்று இருக்கிறது. எங்கள் அறக்கட்டளை சார்பாக முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறோம்" என்று பேசினார்.

    • தேசிய விருது வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
    • விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை.

    பிரஜின், காயத்ரி ரெமா மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அக்கு". இந்த படத்தை ஸ்டாலின் வி இயக்கி இருக்கிறார். பொன் செல்வராஜ் தயாரித்து பிரஜின் நாயகனாக நடித்து இருக்கும் "அக்கு" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

    இதில் படக்குழுவுடன் நடிகர் சவுந்தரராஜா கலந்து கொண்டார். அப்போது நடிகர் சவுந்தரராஜா பேசியதாவது..,

    "இந்த படத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் பிரஜின் நண்பராக மட்டும் தான் இங்கு வந்து இருக்கிறேன். 2002-ம் ஆண்டு சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் பிரஜின். அப்போதில் இருந்தே அவர் சினிமாவில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். எங்களுக்குள் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால நட்பு இருக்கிறது.

    "சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 69-வது தேசிய விருது வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் மணிகண்டன் இயக்கிய "கடைசி விவசாயி" படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்."

    "கடைசி விவசாயி" படத்தில் விவசாயி-இன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தனர். மேலும் விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை. இந்த கருத்து மாணவர்களிடையே சென்று சேர வேண்டும். இதனால், பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும். வியாபார ரீதியில் இந்த படம் வெற்றி பெறவில்லை என்ற போதிலும், உலக அளவில் இந்த படம் அங்கீகாரம் பெற்று இருக்கிறது. இதனால், இந்த படத்தை மாணவர்களுக்காக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்தார். 

    • தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறது.
    • தனி ஒருவன் 2 ப்ரோமோ வீடியோவிற்கு சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார்.

    ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். இன்றோடு இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.

    இதனை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களின் நீண்ட கால கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், தனி ஒருவன் 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகும் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது.

    • பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
    • இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.



    அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.

    இந்த நிலையில், பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    ஸ்டார் போஸ்டர்

    அதன்படி, இப்படத்திற்கு 'ஸ்டார்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர். 'ஸ்டார்' படத்தின் புரோமோ ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    2001-ஆம் ஆண்டில் பிரசாந்த் மற்றும் ஜோதிகா நடிப்பில் 'ஸ்டார்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.





    • ‘கருவறை’ ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் இ.வி.கணேஷன்பாபு கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்திருந்த 'கருவறை' ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


    இந்நிலையில், ஸ்ரீகாந்த் தேவா, இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
    • இவர்கள் தயாரிப்பில் சமீபத்தில் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படம் வெளியானது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.


    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருந்தார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இப்படம் ஜூன் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    இந்நிலையில், தயாரிப்பாளர் சாக்ஷி டோனி தன் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாகவும் தனது இரண்டாவது படைப்பை தரமானதாக உருவாக்கும் ஆர்வத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.
    • இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

    நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார். இதையடுத்து ஜேசன் சஞ்சய் விரைவில் படம் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.


    இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அதாவது, சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • பிக்பாஸ் 7-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
    • இந்த சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கவுள்ளார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதையடுத்து ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார்.


    இந்நிலையில், பிக்பாஸ் 7-வது சீசனின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





    • 'ஜெய்பீம்', 'கர்ணன்', 'சார்ப்பட்டா பரம்பரை' போன்ற படங்களுக்கு விருது கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியல் ஏமாற்றத்தை கொடுத்தது.
    • இதனால் நெட்டிசன்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க 'ஜெய்பீம்', 'கர்ணன்', 'சார்ப்பட்டா பரம்பரை' போன்ற படங்களுக்கு விருது கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியல் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் நெட்டிசன்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகானிடம் தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது குறைவாக அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "தமிழ் திரைப்படங்களுக்கு தான் தேசிய விருது அதிகம் அறிவிக்கப்பட வேண்டும். எல்லா துறையிலும் தமிழை புறக்கணிப்பது போன்று தான் இங்கும் நடந்துள்ளது. மத்திய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் இருப்பது போன்று இருந்தால் விருதுகள் கிடைக்கும். " என்று பேசினார்.

    மேலும், 'தி காஷ்மீ பைல்ஸ்' திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, " கொடுப்பவன் பைத்தியக்காரன். சினிமாவை நேசிப்பவர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள்" என்று பேசினார்.

    ×