என் மலர்
தோஷ பரிகாரங்கள்

திருமாளம் மகாகாளநாதர், ராஜ மாதங்கி அலங்காரத்தில் அம்மன்
நாக தோஷம், திருமண தடையை நீக்கும் பரிகார தலம்
- இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
- திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.
இங்குள்ள இறைவன் மகாகாளநாதர் என்றும், இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்த பின்னர் அந்த மாலைகளில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மாகாள வாவி என்ற தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும் முருகப்பெருமானையும் வழிபட்டால் விரைவில் மக்கட்பேறு பெறலாம் என்பதும் காலம், காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
இக்கோவிலுக்கு வரும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை வாங்கி வந்து அம்மனுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து பின்னர் ஒன்றை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது
அஷ்ட நாகங்களில் 2-வது நாகம் வாசுகி. இந்த நாகத்திற்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தை போக்க என்ன வழி என்று சிவபெருமானை தரிசித்து கேட்டது வாசுகி. கோவில் திருமாளம் மாகாளநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், தோஷம் போகும் என்று இறைவன் கூறியதையடுத்து இங்கு வந்து வழிபாடு நடத்தி தோஷம் நீக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், புத்திரபேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கி, ராகு தோஷம், நாக தோஷம், பிரம்மஹத்தி தோஷங்களை நிவர்த்தி செய்ய விரும்புவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில் இது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் திருவாரூருக்கு செல்லும் ரெயிலில் பயணம் செய்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.