search icon
என் மலர்tooltip icon

    திருப்பாவை

    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் 
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து 
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி 
    மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு 
    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் 
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய 
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த 
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். 

    பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே
    சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
    கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
    செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
    திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
    அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
    எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்: அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம்.

    கி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.

    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப 
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் 
    ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் 
    ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் 
    தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் 
    மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் 
    ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே 
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்: வள்ளலைப் போல கேட்டதும் பாலைப் பொழியும் பெரும் பசுக் கூட்டத்தைக் கொண்ட நந்தகோபரின் திருமகனே, அடியவர்களைக் காக்கும் அக்கறை உடையவனே, பெருமைகளைக் கொண்டவனே. இந்த உலகின் நிலையான சுடர் ஒளியே. நீ உறக்கத்தை விட்டு எழுந்து வருவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள்.

    அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள்வாயாக.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று 
    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் 
    செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு 
    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் 
    செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் 
    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் 
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை 
    இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்.

    விளக்கம்: கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள். முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! 

    பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! நீயும் விரைந்து துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக. கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். 

    கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
    எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
    தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்.

    விளக்கம்:

    நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். 

    முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து கவலைப்படாதே என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். 

    இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. 

    தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
    நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
    கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
    பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்;
    செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள் :
     
    "நந்தகோபலன் மருமகளே! நப்பின்னையே! கதவைத் திற" என நப்பின்னையிடம் வேண்டும் பாடல்.
     
    நப்பின்னையே! மதங்கொண்ட யானைகளை, சர்வசாதாரணமாகத் தள்ளக் கூடியவர்; (ஏராளமான யானைகளைக் கட்டி வாழக் கூடியவர் என்பதும் உண்டு) எதிரிகளைக் கண்டு பயப்படாத தோள் ஆற்றலை உடையவர்; நந்த கோபர்.

    அப்படிப்பட்ட நந்தகோபரின் மருமகளே! வாசம் கமழும் கூந்தலைக் கொண்டவளே! கதவைத்திற. இதோபார், கேள். சேவல்கள் எல்லாத் திசைகளிலும் கூவுகின்றன. அந்த அழைப்பைக் கேளாயோ? குயிலிணங்கள் கூவுகின்றன. அதுவும் கேட்கவில்லையா? பொழுது விடிந்து விட்டது. பந்தை அணைத்தபடி படுத்திருப்பவளே! உன் கணவனான கண்ணனை போற்றிப் பாட வந்திருக்கிறோம். வளையல்கள் சப்தமிட, தாமரை மலர் போன்ற உன் கைகளால் கதவைத் திற. வா. 
     
    இப்பாடலின் பெருமை: ஸ்ரீ இராமானுஜர், திருப்பாவையைப் பாடிய படியே பிக்‌ஷைக்குப் போவது வழக்கம். ஒரு நாள் அவர் தன் குருநாதர். பெரியநம்பிகள் திருமாளிகைக்கு, பிக்‌ஷைக்குப் போன போது, இப்பாடலைப் பாடினார்.

    பெரிய நம்பியின் திருமகளான அத்துழாய் என்னும் பெண் ஒடிவந்து கதவைத் திறந்தாள். அப்போது இராமானுஜர் 'செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்மாவாய்' என்னும் வரிகளைப் பாடிக் கொண்டிருந்தார்.

    கதவைத் திறந்த அத்துழாயைக் கண்ட ஸ்ரீராமானுஜர், அவளை நப்பின்னையாகவே நினைத்து வணங்கினார். அத்துழாய் உள்ளே ஓடிப்போய், "அப்பா! ஸ்ரீராமானுஜர் என்னைக் கண்டு, மயக்கமடைந்து விட்டார்" என்றார். பெரியநம்பிகளோ", அவர் வந்து மதகளிறு என்னும் பாசுரத்தைப் பாடியிருப்பார்" என்றார். ஸ்ரீராமானுஜரைப் போன்ற மகான்களையே சொக்க வைத்த பாடல் இது.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
    கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
    அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்;
    செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய். 
     
    பொருள் :
     
    நந்தகோபாலர், யசோதை, பலராமன் ஆகியவர்களை எழுப்பி கண்ணனையும் எழுப்பும் பாடல். 
     
    நந்தகோபாலா! ஆடைகளையே, சோற்றையே தர்மம் செய்கின்ற எம்பெருமானே! எழுந்திரு.
     
    யசோதையே! எம்பெருமாட்டியே! பூங்கொம்பு போன்ற எங்களுக்கெல்லாம், குலத்துக்கு உண்டான மங்கள தீபம் போன்றவளே எழுந்திரு.
     
    திருவடியால் கண்ணா! திரிவிக்ரமனாகி ஆகாயத்தையும், பூமியையும் அளந்த சுவாமியே! எழுந்திரு.
     
    பலராமா! தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்ட வீரக்கழல்களை அணிந்த திருவடிகளை உடையவனே! உன் தம்பியான கண்ணனும், நீயும் துயில் நீங்கி எழுவீராக.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
    கோவில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
    வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
    ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
    நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

    நாங்கள் போற்றி வழிபடும் இறைவன், நந்த கோபாலனின் திருக்கோவிலை காக்கின்ற காவலனே! இறைவன் புகழ் எட்டு திக்கும் பரப்பும் வண்ணம், உயரத்தில் பறக்கின்ற, கொடி விளங்கும், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்ட வாயிலைக் காப்பவனே! மணிகள் பதிக்கப்பட்ட திருக்கதவை திறப்பாயாக! 

    ஆயர்குடி சிறுமிகளுக்கு விரும்பி வேண்டி நிறைந்த செல்வங்களை கொடுப்பதாக, கிருஷ்ணன் நேற்றைய தினம் வாக்கு அளித்துள்ளான். அவனை துயில் எழுந்தருளுமாறு கூறி திருப்பள்ளியெழுச்சி பாட வந்துள்ளோம் நாங்கள். அதனால் மேன்மை பொருந்திய திருக்கதவினைத்திறப்பாயாக! 

    திருக்கோவில் வாயில் காப்போனே, கதவினை திறந்துவிட்டால் நாங்கள் உள்ளே சென்று இறைவனைப்பாடி, துயில் எழுப்பி, அவன் வழங்கும் செல்வத்தை பெற்று இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வோம்.

    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    'எல்லே இளங்கிளியே; இன்னம் உறக்குதியோ?'
    'சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்'
    'வல்லை உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!'
    'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'
    'ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை?'
    'எல்லாரும் போந்தாரோ?' போந்தார், போந்தெண்ணிக்கொள்;
    வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய். 
     
    பொருள்: ''ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! ''நாங்கள் அழைத்தும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ''இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள். 

    தோழிகள், ''உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது.'' என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ''சரி..சரி... நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்,'' என்கிறாள்.

    ''அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?'' என்று கடிந்து கொள்கிறார்கள்.

    அவளும் ''என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்து விட்டார்களா?'' என்கிறாள். தோழிகள், ''நீயே வெளியே வந்து எண்ணிப்பார். குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்க வருவாய்,'' என்கிறார்கள்.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
    செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;
    எங்களை முன்னம் எழும்புவான் வாய்பேசும்
    நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். 
     
    பொருள் :
     
    "உங்களையெல்லாம் நானே எழுப்புவேன்" என்று சொன்ன பெண், அதை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றாள். அவளை எழுப்பும் பாடல்.
     
    இ‌னிமையாகப் பேசக்கூடிய நாக்கைக் கொண்டவளே! "உங்களை எல்லாம் நானே எழுப்புவேன்" என்று சொன்னாய். ஆனால், அதைச் செயலில் காட்ட மறந்துவிட்டாய். அத்துடன் அதைப்பற்றி வெட்கப்படவும் இல்லை. பெண்ணே! எழுந்திரு.
     
    இதோ பார். உங்கள் புறங்கடையில் செங்கழு நீர்ப்பூக்கள் மலர்ந்துவிட்டன. (காலைப் பொழுதில் குவிந்து கொள்ளும்) ஆம்பல் பூக்கள் குவிந்து (மூடிக்) கொண்டுவிட்டன. காவி உடை அணிந்தவர்களும், தூய்மையான பற்களை உடையவர்களுமான துறவிகள் அவர்களது திருக்கோவிலில், சங்கை முழக்குவதற்காகப் போகின்றார்கள்.
     
    சங்கு, சக்கரம் முதலியவைகளைக் கொண்ட பரந்த திருக்கரங்களை உடையவனும், தாமரை போன்ற திருக்கண்களை உடையவனுமான கண்ணனைப் பாடு.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 
    கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய் 
    பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார் 
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று 
    புள்ளும் சிலம்பினகாண்; போது அரிக் கண்ணினாய் 
    குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே 
    பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ 
    நன்னாளால் கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!

    பொருள்: நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர். விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழம் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
    செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
    குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
    புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
    சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

    பொருள் :
     
    குலத்திற்கே கொடியாக இருக்கும் பெண்ணை எழுப்பும் பாடல் இது.
     
    கன்றுகளுடன் கூடியவை; இளமை மாறாமல் இருப்பவை; இப்படிப்பட்ட பசுக் கூட்டங்கள் பலவற்றைக் கறந்த கோபாலர்கள், தங்கள் பகைவர்களின் வலிமை அழியும்படியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று போர் செய்வார்கள். அப்படிப்பட்ட கோபாலர்களின் குலத்தில் தோன்றிய பொற்கொடியைப் போன்றவளே!
     
    காட்டில் வாழும் மயிலைப் போன்ற சாயல் கொண்டவளே! வீதியில் நின்று இறைவன் புகழைப்பாட வேண்டிய நாங்கள், இப்போது உன் வீட்டின் முன் வாயிலில் வந்து பாடிக்கொண்டிருக்கிறோம். கார்மேகத்தைப் போல வடிவழகும், கருணையும் கொண்ட கண்ணனது திருநாமங்களைப் பாடிக்கொண்டிருக்கிறோம்.
     
    ஆனால் நீயோ-உன் உடம்பைக்கூட அசைக்க மாட்டேன் என்கிறாய், வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டேன் என்கிறாய். செல்வமும், உத்தமமான குணங்களும் வாய்க்கப்பெற்ற நீ, எதை நினைத்து இப்படித் தூங்கிக் கொண்டிருக்கின்றாய். இப்படித் தூங்கலாமா? எழுந்து வா.
    ×