search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருமண தடையை நீங்கும் ஆடவல்லீஸ்வரர்
    X

    திருமண தடையை நீங்கும் ஆடவல்லீஸ்வரர்

    • மவுன யோக நிலையில் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தருகிறார்.
    • குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிருஹன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில். இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300-வது சிவன் கோவில் ஆகும். அதனால் தான் இந்த ஊரின் பெயரும் முன்னூர் என்று அழைக்கப்படுகிறது. முன்னூருக்கு வந்தால் முன்னேற்றம் உண்டு என்பது வாக்காக உள்ளது.

    ஆடவல்லீஸ்வரர் இந்த கோவிலில் தெற்கு திசையை நோக்கி சுயம்பு ரூபமாக லிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். இதற்கான காரணம் பசு, புற்றுகளிலே பால் சுரந்து, அந்த புற்றுகளில் இருந்து சிவபெருமான் தோன்றியதாக புராணத்தில் உள்ளது. இந்த கோவில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது என்பதை குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ளது.

    இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு, பார்வதி சிவனுடன் நடனமாடிய காட்சி கிடைக்கப்பெற்றதை அடுத்து இங்குள்ள சிவனுக்கு ஆடவல்லீஸ்வரர் என பெயர் வந்துள்ளது, இந்த இடம் தென் கயிலாயம் என்றும் பூஜிக்கப்படுகின்றது.

    கி.மு. 1700-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 44 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஆடவல்லீஸ்வரர், அம்பாள் ப்ருஹன்நாயகி தவிர ஆறுமுகங்களுடன் அருளும் சுப்பிரமணிய சுவாமியும் முக்கியமானவர்.

    இவர் நல்லியக்கோடான் மன்னனுக்கு போரில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயத்தில் பிரதோஷங்கள், சங்கடஹர சதுர்த்தி, மகா சிவராத்திரி, கிருத்திகை வழிபாடு என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    மாதந்தோறும் வரக்கூடிய பிரதோஷ தினங்களில் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகார தலமாக மேற்கு நோக்கி இருக்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    நவக்கிரகங்களில் சுப கிரகமாகத் திகழ்பவர் பிருகஸ்பதி என்று வணங்கப்படும் குரு பகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆசிரியராக விளங்கும் இவர், நான்கு வேதங்களிலும் புலமை மிக்கவர். ஒழுக்கத்தினாலும், கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர்.

    முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம், குரு பகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது. தேவர்களேயானாலும் கர்வம் கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும், தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

    சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு, படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார்.

    குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி, அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம் என உபாயம் கூறியருளினார்.

    குருபகவான், ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற, அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன், அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தார்.

    நவக்கிரகங்களில் முழுமையான சுபபலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து 'தென் திருக்கயிலாயம்' என்றும், 'பூவுலகின் கயிலை' என்றும் போற்றப்படுவதாக தல புராணம் சொல்கிறது. இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென்திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.

    ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷம் இருப்பவர்களுக்கும், கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும், அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது.

    மேற்கு திசை நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு மவுன யோக நிலையில் இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாகவும், தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவ வலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்திசை நோக்கி அருள்பாலிப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த ஆலயம் மிகச் சிறந்த ஒரு குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. பொதுவாக தட்சிணாமூர்த்தியானவர், தென்திசை நோக்கிதான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய தட்சிணாமூர்த்தி மேற்கு திசை நோக்கி இருப்பது காணக்கிடைக்காத காட்சியாகும்.

    வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

    Next Story
    ×