என் மலர்
வழிபாடு

அம்மாபட்டியில் தேர் திருவிழா மக்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.
சமுக ஒற்றுமையை ஏற்படுத்திய அம்மன் சப்பரத் திருவிழா: 7 கிராம மக்கள் பங்கேற்பு
- சப்பர திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் இன்று வரை நடைபெற்றது.
- மாவிளக்கு பூஜை, முளைப்பாரி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியை சுற்றி உள்ள ஏழு கிராமத்தினர் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் சப்பர திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் இன்று (10-ந் தேதி) வரை 3 நாட்கள் நடைபெற்றது.
இதையொட்டி 6 ஊர் சப்பரங்கள் அம்மாபட்டியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது பரவசப்படுத்தியது. இந்த திருவிழா முத்தாலம்மன் கோவில் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா சப்பர திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு அம்மாபட்டியை தவிர மற்ற 6 கிராமங்களிலும் சப்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது.ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊர் சப்பரத்தை இரவு, பகல் பாராது செய்து வந்தனர். வண்ண, வண்ண காகிதங்கள், மூங்கில் கொண்டு சப்பரத்தை அலங்கரித்தனர்.
ஒவ்வொரு சப்பரமும் 33 அடி முதல் 40 அடி வரை இருந்தது.கட்டப்பட்ட சப்பரத்தை திருவிழாவின் முக்கிய நாளான இன்று அந்தந்த கிராம மக்கள் தலை சுமையாகவே சுமார் 2 கிலோமீட்டர் அம்மாபட்டிக்கு சுமந்து கொண்டு வந்தனர்.
கிளாங்குளம்,சத்திரப்பட்டி,சப்பரங்கள் வயல் வெளியில் பக்தர்களால் சுமந்து கொண்டு வரப்பட்டது. அம்மா பட்டியில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி திரண்டு இருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊர் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவர் கிராமத்துக்கு திரும்பினர். தொடர்ந்து சப்பரங்கள் அவர்கள் கிராமத்திற்கு திரும்பியது.பல ஊர்களில் சப்பரங்கள் மற்றும் தேர்களை, வடம் பிடித்து,அல்லது சக்கரங்கள் உதவிகொண்டு இழுத்து வருவார்கள். ஆனால் இங்கு மட்டும் கிராம மக்கள் தங்கள் தலை சுமையாக தூக்கி வருவது சிறப்பாகும்.இந்த சப்பர திருவிழாவை பார்த்து,அம்மன்கள் அருள்பெற வேண்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
தொடர்ந்து மாவிளக்கு பூஜை, முளைப்பாரி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு சமுகத்தினர் ஒன்று கூடி தங்கள் ஒன்றுமையை திருவிழாவின் மூலம் வெளிபடுத்தினார்கள்.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் டி.எஸ்.பி. இலக்கியா தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.