என் மலர்
வழிபாடு
அவினாசி கோவிலில் நடராஜ பெருமானுக்கு 32 திரவியங்களால் மகா அபிஷேகம்
- இன்று அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடராஜப்பெருமான்-சிவகாமி அம்மையாருக்கு 32 திரவியங்களால் அபிஷேகம் நடத்தி ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் இன்று அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவில் நேற்று மாலை 6 மணிக்கு திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் மற்றும் மாங்கல்ய நோன்பு பூஜையும் நடைபெற்றது.
விழாவையொட்டி இன்று காலை மயில் இறகு, கல் ஆபரணம், பாக்குப்பூ, மரிக்கொழுந்து, விருச்சிப்பூ, சம்பங்கி, மனோரஞ்சிதம், செண்பகம், வில்வம், ரோஜா உள்ளிட்ட மலர்களால் மயிலிறகு பாவாடை, கிரீடம், நெத்தி அட்டி, ஒட்டியானம், குஞ்சிதபாதம் ஆகிய ஆபரணங்கள் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு அம்மையப்பருக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் 32 திரவியங்களால் நடராஜப்பெருமான்-சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.