என் மலர்tooltip icon

    வழிபாடு

    குழந்தை வரம் அருளும் `பெரிய மாரியம்மன்
    X

    குழந்தை வரம் அருளும் `பெரிய மாரியம்மன்'

    • பூக்குழி திருவிழா நாளை நடக்கிறது.
    • நாளை மறுநாள் தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரின் மையப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு வடக்கு புறத்தில் இருக்கிறது.

    இந்த கோவிலில் மூலவராக பெரிய மாரியம்மன், வடக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலுக்கு விருது நகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.


    இந்த கோவிலில் கருப்பசாமி, வீரபத்திரர், துர்க்கை, பைரவர், சப்தகன்னியர், வராகி அம்மன் ஆகியோர் தனி சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    குழந்தை வரம் கேட்டு இந்தக் கோவிலுக்கு எண்ணற்ற பேர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது கணவருடன் சேர்ந்து இந்தக் கோவிலில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி அம்மனை வழிபடுகின்றனர்.

    கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களின் குறை நீங்க வேண்டும் என்பதற்காக அம்மனை வேண்டி கண்மலர் வாங்கி போட்டு தரிசனம் செய்கின்றனர். அதேபோல திருமணத்தடை, தோல் வியாதி உள்ளவர்களும் இங்குள்ள அம்மனை மனமுருக வேண்டிச் செல்கின்றனர்.

    இவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மறு வருடம், கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழாவில் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனால் ஆண்டுதோறும் தீமிதி திருவிழாவில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

    இந்தக் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வ வழிபாடு, பவுர்ணமி சிறப்பு பூஜை, பஞ்சமி திதி அன்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நவராத்திரி உற்சவம் என ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.

    இருப்பினும் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.

    இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது.

    Next Story
    ×