என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் யார்?
- நாம் அனைத்திலும் எளிமையாய் இருக்க முடியுமானால் அது ஆசிர்வாதமே.
- நம் பேச்சிலும், நடத்தையிலும் நம் பார்வையிலும் எளிமையோடு இருப்போம்.
இன்றைய உலகில் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அதற்காக தான தர்மங்களை செய்கிறோம்; பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறோம். நம்முடைய ஏக்கம், அனைத்திலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட ஆசிர்வாதத்தை நாம் எப்படி அடைவது என்ற தேடலிலேயே பலருடைய வாழ்க்கை முடிவடைந்து விடுகிறது.
நம்முடைய பார்வையில் ஆசிர்வாதம் என்பது, உலக அந்தஸ்துடன் வாழ்க்கை வாழுவது, பெரிய வீடு, கார்கள், இருசக்கர வாகனங்கள், அடுக்கு மாடி குடியிருப்பு, வங்கியில் சேமிப்பு பணம், நகைகள், பெரிய தோட்டம், பெரிய பிரபலமான கல்லூரியில் படிப்பு, அரசாங்க வேலை, புகழ் பெற்ற குடும்பப் பின்னணி என்று நீண்டு கொண்டே செல்கிறது.
ஆனால் இறைவனின் பார்வையில் யார் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தெரியுமா?
நாம் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்யும்போது, நம்முடைய மனசாட்சி 'அது கடவுளுக்கு பிடிக்காது. நீ செய்வது பாவம், அதைச் செய்யாதே' என்று நம்மை உணர்த்துவித்தால் அதுவும் ஒரு ஆசிர்வாதமே (2 சாமுவேல் 12:13). ஏனென்றால் பாவம்செய்யும் பலரும், எந்த குற்ற உணர்வும் இல்லாமல் துணிகரமாய் தவறு செய்கின்றனர். தாவீது பாவம் செய்த போது, இறைவனால் அனுப்பப்பட்ட நாத்தான் என்ற தேவ மனிதனால் குற்றத்தை உணர்ந்து கடவுளின் மன்னிப்பையும் பெற்றான்.
கடவுளுடைய வார்த்தைகளை கேட்கவும், அதன்படி நடக்கவும் நமக்கு உணர்வுள்ள இருதயம் இருக்குமானால் அதுவும் ஆசிர்வாதமே. (மத்தேயு 13:23) (சங்கீதம் 119:1). 'கடவுளின் வார்த்தை கேட்டு அதன்படி நடந்த அனைவரும், தேவனால் ஆசிர்வாதத்தையும் சமாதானத்தையும் பெற்றார்கள்' என்று பைபிள் நமக்கு தெளிவாக காண்பிக்கிறது. கடவுளின் பிள்ளையாய் வாழ்வதும், அவரின் சத்தத்தை கேட்பதும் எல்லோராலும் முடியாத ஒன்று தான். நாமும் அவருடைய சத்தத்தை கேட்க உணர்வுள்ள இருதயம் உள்ளவர்களாய் இருக்க முயற்சிப்போம்.
நமக்கு நல்ல பெற்றோர், நல்ல பிள்ளைகள், நல்ல உடன்பிறப்புகள், நல்ல குடும்பம், நல்ல சமூகம் கிடைக்குமானால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தான். வேதம் சொல்லுகிறது 'என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோசத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை' (III யோவான் 1:4). ஆகவே சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்ற வசனத்தின் படி அவருடைய சத்தியத்தில் மாத்திரம் நிலைநிற்போம்.
கடன் இல்லாமல் வாழ்வதும், மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய மனதுடையவர்களாய் இருப்போமானால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான் (லூக்கா 6:35). ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்ப கொடுப்பார் ( நீதிமொழிகள் 19:17). ஆகவே கடன் பாரத்தால் தவிக்கும் மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளையும், ஆறுதலையும் தெரிவிப்போம்.
நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதும், வியாதிப்பட்டவர்களின் கஷ்டங்களை உணர்ந்து அதற்காக பிரார்த்தனை செய்வதும் ஆசிர்வாதமே. ஏனென்றால் அநேகர் தங்கள் வாழ்க்கையில் வியாதினால் அதிக பணம் செலவழித்தும் சுகம் பெறாமல் வருத்தத்தோடும், மனசஞ்சலத்தோடும் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் (யாத் 23:25) (யாத்15:26) (யாக் 5:14). நாம் அவர்களுக்காக அனுதினமும் ஜெபிக்க மறவாதிருப்போம்.
நாம் அனுபவிப்பதற்கு எல்லாம் இருந்தும் நாம் அனைத்திலும் எளிமையாய் இருக்க முடியுமானால் அது ஆசிர்வாதமே. ஆவியில் எளிமையுடையவர்கள் பாக்கியவான்கள் என வேதம் நமக்கு கூறுகிறது (மத்தேயு 5:3) (பிரசங்கி 3:20) (I கொரிந்தியர் 10:23). ஆகவே நம் பேச்சிலும், நடத்தையிலும் நம் பார்வையிலும் எளிமையோடு இருப்போம்.
நம்மோடு நம் வாழ்க்கையில் நம் பிரச்சினைகளில் நம் விருப்பங்களில் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தான் (தானி யேல்3:17).
இறைவனிடம் இருந்து கிடைக்கப்பெறும் நீதி - நியாயத்திற்கு காத்திருப்பதும் ஆசிர்வாதமே. அது எப்படி என்றால் இன்றைய நாட்களில் அனைத்து விஷயங்களிலும் நேர்மையான, வெளிப்படையான நீதி கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் சில நேரங்களில் வேறு வழிகளில் நீதியை பெற முயற்சித்து பிரச்சினையில் முடிகிறது (சங்கீதம் 10:18).
பரலோகத்தில் உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியாவது துரும்பாவது கெடுக்கிறதும் இல்லை (மத்தேயு 6:20) என்று சொல்லப்பட்டபடி, நாம் இம்மைக்குரிய ஆசிர்வாதத்தை மட்டும் நாடாமல், முதலில் மறுமைக்குரியதை தேடி நன்மையை பெற்றுக் கொள்வோம்.
குருபாதம், தவசிமடை, திண்டுக்கல்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்