என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
நீதியுடன் வாழ்வோம்!
- நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.
- ஒருவன் தன்னுடைய உடல் உறுப்புகளில் நாவை அடக்குவது மிகவும் கடினமான காரியம்.
கர்த்தரிடத்தில் ஒருபோதும் அநீதி இல்லை. (சங்கீதம் 92:14).
நீதியுள்ள ஜனங்களை கர்த்தர் ஒருபோதும் அழிய அனுமதித்தது இல்லை. இதற்கு உதாரணம் ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த அபிமெலேக்கு என்பவன். இந்த அபிமெலேக்கு, கேரார் என்ற இடத்தில் ராஜாவாக இருந்தான்.
கானான் தேசத்திற்கு தென்புறத்தில், இருந்த பெலிஸ்தியர்களின் எல்லையின் விளிம்பில் மத்தியத்தரை கடல் பட்டணமான காசாவுக்கும், வறண்ட நிலப்பரப்பின் வடக்கே இருந்த பெயர்செபாவுக்கும் நடுவிலே ஆபிரகாம் குடியிருந்தான். அப்போது அவனுடைய மனைவியாகிய சாராளை அபிமெலேக்கு தனக்கென வரவழைத்துக் கொண்டான். இதை கர்த்தர் அபிமெலேக்குவின் கனவில் தோன்றி எச்சரித்தார்.
கர்த்தரின் பார்வையில் அபிமெலேக்கு நீதியுள்ளவனாக காணப்பட்டபடியால் கர்த்தர் அவனை அழிக்கவில்லை. எச்சரித்து திருத்தினார். ஆபிரகாம் கர்த்தரிடம் வேண்டுதல் செய்த போது, அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவனுடைய வேலைக்காரிகளையும் குணமாக்கி பிள்ளை பெறும்படி அனுக்கிரகம் செய்து அவர்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 20).
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம். ஒருவன் சொல் தவறாதவனாக இருந்தால், அவன் பூரண புருஷனும் தன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினால் அடக்கிக் கொள்ளக் கூடியவனுமாய் இருக்கிறான்.
ஒருவன் தன்னுடைய உடல் உறுப்புகளில் நாவை அடக்குவது மிகவும் கடினமான காரியம். தன்னுடைய நாவை ஒருவன் அடக்கி விட்டான் என்றால் தன்னுடைய வாழ்க்கையின் எல்லாவிதமான காரியங்களிலும் அவன் நல்லவனாக வாழ முடியும்.
நெருப்பு போன்றது இந்த நாவு. அநீதி நிறைந்த உலகத்தைப் போன்றது இந்த நாவு. நம்முடைய அவயங்களில் நாவானது முழு சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தை கொளுத்தி விடுகிறது. இந்த நாவு அடங்கப்படாத ஒரு உறுப்பு, பொல்லாங்கானது, மரணத்தை தரும் விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது.
ஆண்டவரைத் துதிக்கும் நாம், சபிக்கிறதுக்கும் அநீதி நிறைந்த வார்த்தைகளை பேசுவதற்கும் இந்த நாவை உபயோகிக்கவே கூடாது (யாக்கோபு 3:10).
அநீதியினால் சகலவித வஞ்சகம் உண்டாகி மனிதனை கெடுத்துவிடும். சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற மனிதனுக்கு ஆக்கினை தான் முடிவாக அமையும். (2 தெசலோனிக்கேயர் 2:11).
அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்கு கூலி கொடாமல், அவனை சும்மா வேலை வாங்குகிறவனுக்கு ஐயோ! என்று எரேமியா தீர்க்கதரிசி கிறிஸ்துக்கு முன் 604-ல் இஸ்ரவேலில் இருந்த தீய அரசர்களுக்கு விரோதமான நியாய தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லும் போது இவ்வாறு சொல்லுகிறார் (எரேமியா 22:14).
இயேசுவானவர் தம்முடைய ஊழிய நாட்களிலே தம்முடைய சீடர்களை பார்த்து, ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுடைய ஒரு உக்கிராணக்காரன் (மேனேஜர்) அநீதியான உலக பொருளை எப்படி தனக்கு நீதியாக சம்பாதித்து கொண்டான் என்பதை அவர்களுக்கு விளக்கும் விதமாக சொன்னார். தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து அவரவர் கடன்களை பாதியாக குறைத்து அவர்களை விடுவித்தான். இந்த அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய் செய்தான் என்று எஜமான் கண்டு அவனை மெச்சி கொண்டான். அவன் தன் ஆஸ்திகளை அழித்து போடுகிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டதின் நிமித்தமாக கணக்கு எல்லாம் ஒப்புவிக்க சொல்லும் சமயத்தில் அந்த உக்கிராணக்காரன் புத்தியாய் செய்தான் என்று சொல்லி அநீதியான உலகப் பொருளால் உங்களுக்கு சினேகிதரை சம்பாதியுங்கள் என்று இயேசுவானவர் சீடர்களுக்கு அறிவுறுத்தினார். (லூக்கா 16:9).
கடனாக கொடுக்கிற பணத்திற்கும், ஆகாரத்துக்கும், கடனாக கொடுக்கிற வேறு எந்த பொருளுக்கும் உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. (உபாகமம் 23:19)
மோசே மூலமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த கட்டளைகளில் ஒன்றான வட்டி வாங்கக் கூடாது என்பதை அந்த உக்கிராணக்காரன் கடைப்பிடித்தது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவனது இந்த செயல் கடன்பட்டவர்களிடத்தில் மட்டும் அல்ல தன்னுடைய எஜமான் இடத்திலும் அவனுக்கு ஒரு நல்ல பெயரை உண்டாக்கினது. இந்த உக்கிராணக்காரன் தனக்கு கிடைத்த அநீதியான உலக பொருளை நீதியை சம்பாதிப்பதற்கு உபயோகித்துக் கொண்டது போல நாமும் அநீதியான உலகப் பொருளுக்கு ஆசைப்பட்டு கொண்டு இராமல் அநீதியை செய்வதிலிருந்து வெளியே வந்து நீதியை செய்கிறவர்களாக வாழ்வோம்.
சூரியனுக்கு கீழே நியாயஸ்தலத்தில் அநியாயமும், நீதி ஸ்தலத்தில் அநீதியும் இருக்கிறது. சகல எண்ணங்களையும் சகல செய்திகளையும் நியாயம் தீர்க்கும் காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் (பிரசங்கி 3:16,17).
இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால் நாம் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டுள்ளோம். எனவே நம்மை நீதிக்கு அடிமைகளாக மாற்றிக் கொள்வோமாக. அக்கிரமத்தை நடப்பிக்கும்படி நம்முடைய அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுக்காமல் பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நம்முடைய அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுத்து பாவத்திற்கு நீங்கி, நீதியை செய்கிறவர்களாக மாற்றுருவாக்கம் பெறுவோம்.
முனைவர் இந்திரா கெட்சி டேவிட், நெல்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்