என் மலர்
வழிபாடு

தக்கலை அருகே காட்டாளம்மன் கோவிலில் புனர் பிரதிஷ்டை விழா இன்று தொடங்குகிறது
- தக்கலை அருகில் காட்டாலை என்னுமிடத்தில் காட்டாளம்மன் கோவில் உள்ளது.
- நாளை கணபதி ஹோமம், மிருத்திஞ்சய ஹோமம் நடக்கிறது.
தக்கலை அருகில் உள்ள குமாரபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் காட்டாலை என்னுமிடத்தில் காட்டாளம்மன் கோவில் உள்ளது. புராண காலத்தில் மகாபாரத போரில் கவுரவர் படையை வெல்வதற்காக சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்காக அர்ஜுனன் தவம் செய்ததாகவும், அப்போது காட்டாளன், காட்டாளத்தி வேடத்தில் வந்த சிவபெருமானும், பார்வதிதேவியும் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது.
காட்டாலை பகுதியில் உள்ள காட்டாலை சிவன் கோவில் அருகிலேயே காட்டாளம்மன் கோவிலும் உள்ளது, இங்கு காட்டாளம்மன், கண்டன் சாஸ்தா, நாக கணங்களுடன் வலம்புரி, இடம்புரி பிள்ளையார் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்,
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் 41-வது புனர்பிரதிஷ்டை விழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. காலை 5 மணிக்கு சுத்திகலச பூஜை, இரவு தீபாராதனை, நள்ளிரவு பலிபூஜையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி ஹோமம், மிருத்திஞ்சய ஹோமம், கலசபூஜை, உஷபூஜை, தீபாராதனை, அபிஷேகம் நடக்கிறது. 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, தொடர்ந்து நவ நாகங்களுக்கு பால் வைத்து வழிபாடு, நாகரூட்டு, மதியம் உச்சி கால பூஜை, தீபாராதனை, அன்னதானம் ஆகியவையும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சரஸ்வதி அம்மா, நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அய்யப்பன் பிள்ளை, ராமசந்திரன், ரவிச்சந்திரன், ஜனார்தனன், நீலகண்ட பிள்ளை, அய்யப்பன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.