என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
மெய்ஞானம் தரும் சூரசம்ஹாரம்
- கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.
- நாளை குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் கடைபிடித்த பலனை பெறுகின்றனர். கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. 'சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு உண்மையான பொருளானது, சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் அகப்பையான கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
'மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் எந்தநாளும் ஈரெட்டாய் வாழ்வர்' என்ற கந்தசஷ்டி கவச வரிகள் மூலம் குழந்தை செல்வம் உள்பட அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம் என அறியலாம். கந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி வளர்பிறையில் 6 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
முருகன் அவதாரம்
சூரபத்மன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவபெருமானிடம் சில வரங்களை பெற்றான். அதன்படி, இந்த உலகில் தன்னை எவரும் வெல்லக்கூடாது, ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளையால் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என்ற வரங்களை பெற்றிருந்தான்.
வரங்களை பெற்ற சூரபத்மன் ஆணவம் கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனை பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலை கேட்ட ஈசன், சூரபத்மனை வதம் செய்ய தனது ஐந்து முகம் மற்றும் அதோ முகம் என்ற ஆறுமுகத்துடன் தோன்றி தனது நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகளால் 6 குழந்தைகளை உருவாக்கினார்.
பார்வதி தேவி அந்த குழந்தைகளை கண்டு மகிழ்ந்து தனது திருக்கரங்களால் ஒரு சேர தழுவி ஒரு குழந்தை ஆக்கினார்.
அந்த குழந்தை அழகாக இருந்ததால் அழகன் முருகன் என்றும், ஆறுமுகத்துடன் இருந்ததால் ஆறுமுகம் என்றும், கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் தெய்வீகம், இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு என்ற 6 தன்மைகளுடன் திகழ்கிறார்.
சூரசம்ஹாரம்
ஆணவம் மிகுந்த சூரனை முருகபெருமான் 6 நாள் போருக்குப்பின் சம்ஹாரம் செய்தார். சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரபத்மனுடன் முருகன் 6 நாட்கள் போர் புரிந்தபோது, அவரது பக்தர்கள் திருச்செந்தூரில் விரதம் இருந்து தியானித்தனர். அதன்படி, தற்போதும் கந்தசஷ்டியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்.
சூரசம்ஹாரத்தின்போது சூரபத்மன் மீது முருகபெருமானின் வேல் பாய்ந்ததும், அவனிடம் இருந்த அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம் வரப்பெற்றான். உடனே அவனை அழிக்காமல் சேவலாகவும், மயிலாகவும் முருகபெருமான் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும் மயிலை வாகனமாகவும் மாற்றினார்.
பகைவனை கொல்வது சஷ்டி விரதம் அல்ல. பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு. யானைமுக சூரனை வெல்வது மாயையை ஒழிப்பதாகவும், சிங்கமுக சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகவும், சூரபத்மனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகவும் கருதப்படுகிறது. உண்ணா நோன்பு இருந்தால் ஆணவம் அடங்கும். ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் இந்த உயரிய தத்துவத்தை விளக்குவதே கந்த சஷ்டி ஆகும்.
லட்சக்கணக்கான பக்தர்கள்
இந்த நிகழ்வினை அனைவரும் அறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை தரிசிக்க தலையா? கடல் அலையா? என்று பிரமித்து கூறும் வகையில் பல லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடுகின்றனர்.
நாளை, திருக்கல்யாணம்
சூரசம்ஹாரம் முடிந்ததும் 6 நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்கின்றனர். 7-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) இரவில் கோவில் ராஜகோபுரம் முன்பாக சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
அன்னையிடம் வேல் வாங்கிய முருகபெருமான்
திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்கு முன்பாக முருகபெருமான் தனது அன்னை பார்வதி தேவியிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றார். அப்போது பார்வதி தேவி முருகபெருமானிடம் வேல் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினார். பார்வதிதேவி முருகபெருமானுக்கு வேல் வழங்கிய இடம் சிக்கல் என்ற திருத்தலம் ஆகும். இது நாகப்பட்டினத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீநவநீதீஸ்வரர், வேல்நெடுங்கண்ணி அம்பாள் அருள்பாலிக்கின்றனர்.
முருகபெருமான் அன்னையிடம் வேல் வாங்க வந்தபோது ஆவேசமாக இருந்ததால் அவரது முகத்தில் வியர்வை துளிகள் அரும்பின. இந்த நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் தீமைகளை வியர்வை துளிகள் போன்று முருகபெருமான் துடைத்து எறிவார் என்பதை இது உணர்த்துகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்