என் மலர்
வழிபாடு
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு
- தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்றது.
- மஞ்சள் நீராட்டு நிகழச்சி நடந்தது.
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பால்குட விழா, வேடபரி விழா ஆகியவை நடைபெற்று முடிந்த நிலையில் இறுதி விழாவான விடையாற்றி எனும் காப்புகளைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, காப்பு உள்ளிட்டவைகளை மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராஜவீதியின் வழியாக வாகைக்குளம் அருகில் உள்ள கோவில் கிணற்றை அடைந்ததும், அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் நீரில் கரைக்கப்பட்டன. அதேபோல் முளைப்பாரிகளும் நீரில் விடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழச்சி நடந்தது. அதில் மஞ்சள் மற்றும் வண்ணப்பொடிகள் கலந்த நீரால் ஒருவருக்கொருவர் ஊற்றிக்கொண்டு மகிழ்சியை வெளிப்படுத்தினர்.