என் மலர்
வழிபாடு

நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம் நடப்பதாக ஐதீகம்: வருகிற 6-ந்தேதி திருமழபாடியில் ஏற்பாடு
- திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது.
நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள்.*
அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.
ஆம், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நந்திகேஸ்வரரின் தெய்வீக திருமணம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வரக்கூடிய புனர்பூச நட்சத்திரத்தன்று இந்த சிறப்பு வாய்ந்த திருமணம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற பங்குனி மாதம் 23-ந்தேதி புனர்பூசம் நட்சத்திரம் 06-04-2025 ஞாயிறு அன்று நந்தி கல்யாணம் நடக்கிறது. அரியலூர் மாவட்டம் திருமழபாடி திருசுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் இந்த தெய்வீக திருமணம் வருடாவருடம் நடைபெறுகிறது.
மணமகன்: பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான்
மணமகள்: வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகை.
இந்த ஸ்தலமானது திருமால் இந்திரன் ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியோரால் திருப்பதிகங்கள் பாடியும் வழிபாடு செய்யப்பட்ட ஸ்தலமாகும்.
தஞ்சாவூர் மற்றும் லால்குடியில் இருந்து 28 கி.மீ. தூரத்திலும் மற்றும் திருவையாறில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புள்ளம்பாடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. தலவிருட்சமாக பனை மரம் உள்ளது. நடராஜர் மண்டபம் அருகில் *திரு நந்திகேஸ்வரர் தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார்.
திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது. அன்று மாலை திருவையாறு கோவிலில் அவருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
திருமணம் நடைபெறும் நாளன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும் நந்தியம்பெருமான் பட்டுச் சட்டை அணிந்து கையில் செங்கோல் ஏந்தி வெள்ளியில் ஆன தலைப்பாகை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வானவேடிக்கை இன்னிசை கச்சேரி உடன் புறப்படுகின்றனர்.
அன்று மாலை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழபாடி வந்தடைகின்றனர். அங்கு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அவர்களை வரவேற்று கோவில் முன் உள்ள திருமண மேடைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
திருமண மேடையில் சுயசாம்பிகை தேவிக்கும் நந்தியம் பெருமானுக்கும் அனைத்து விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றது.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாரப்பர் முன்னிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையிலும் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுகிறார்.
திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இறைவனே முன்நின்று திருமணத்தை நடத்தி வைப்பதால் நந்தியம்பெருமான் திருமணத்தை காணும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடைகள் நீங்கி காலத்தே திருமணம் கைகூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இத்திருமணத்தில் கலந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்.