search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் தி.நகரில் 17-ந்தேதி நடக்கிறது
    X

    ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் தி.நகரில் 17-ந்தேதி நடக்கிறது

    • இன்று மாலை பூஜைகள் தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை ஹோமங்கள் காலை, மாலை நடக்கும்.
    • 10-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

    சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில், வருகிற 17-ந்தேதி கும்பாபிஷேக விழா நடை பெற உள்ள பத்மாவதி தாயார் கோவிலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி பார்வையிட்டார். பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    கடந்த 13 ஆண்டுகளாக பல பிரச்சினைகளை கடந்து தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்மாவதி தாயார் கோவில் தேவஸ்தானம் சார்பில் 2021 பிப்ரவரி 13-ந்தேதி தொடங்கப்பட்டு கோவில் பணிகள் நடந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பூஜைகள் தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை ஹோமங்கள் காலை, மாலை நடக்கும்.

    வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 7.44 மணிக்குள் பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. 16 மற்றும் 17-ந்தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொள்கிறார்.

    குட முழுக்கு முடிந்த பின்பு 10-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை திருக்கல்யாணம் நடக்க உள்ளது. பொது மக்களுக்கு 11 மணி முதல் சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த ராமகிருஷ்ணா பள்ளியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி முதல் காசி வரை பிரமாண்டமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில்களை கட்டி வருகிறோம் , உளுந்தூர்பேட்டையில் அடுத்த ஆண்டு கட்டுமானப் பணி முடிவடையும். வேலூரிலும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலும் புதுப்பிக்கப்பட உள்ளது.

    ரூ.10 கோடி செலவில் இந்த கோவில் கட்டப்பட்டு ள்ளது. தற்போது கோவிலில் இலவச தரிசனத்திற்கு அனைவரும் அனுமதிக்கப்படுவர். சிறப்பு பூஜை தரிசனங்களுக்கு டோக்கன் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தேவஸ்தானம் முடிவு செய்யும்.

    முன்னாள் நடிகை காஞ்சனாவின் சகோதரி கிரிஜா பாண்டே, கர்நாடகா மாநில முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர். அவர் குடும்பத்துக்கு சொந்தமான இடம் தான் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×