என் மலர்
வழிபாடு

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம்
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
- திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவத்திருப்பதி தலங்களில் 8-வது தலமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான தலமாகவும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் விளங்கி வருகிறது. இழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள்பாலித்த ஸ்தலமாகும். இங்கு அருள்பாலித்து வரும் வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். ஆண்டுதோறும் இக்கோவிலில் ஆவணி பெருவிழா 12 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டுக்கான ஆவணித்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி வைத்தமாநிதிப்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஐந்தாம் திருநாள் கருடசேவை நடந்தது.
தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக உற்சவர் தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தேர் கோவிலை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா' 'கோபாலா' கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். காலை 9 மணிக்கு இழுக்கப்பட்ட தேர் பகல் 11.30 மணியளவில் கோவில் நிலையை வந்தடைந்தது. இவ்விழாவில் ஏரல் தாசில்தார் கண்ணன், கோவில் நிர்வாக அதிகாரி அஜித் உட்பட சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.