என் மலர்tooltip icon

    வழிபாடு

    சனி பகவான் பரிகார தலங்கள்!
    X

    சனி பகவான் பரிகார தலங்கள்!

    • சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர்.
    • நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.

    திருநள்ளாறு

    புதுச்சேரி அருகே உள்ள காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அமைந்துள்ளது. புராதான சிறப்பு கொண்ட இந்த கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும்.


    பக்தர்கள் முதலில் நள தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு அதன் பிறகே சனீஸ்வர பகவானை தரிசனம் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் தான் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ, அல்லது கிழக்கு முகமாகவோ 9 முறை ஸ்நானம் செய்து தலை குளிக்க வேண்டும். அதன்பின்பு பிரம்மதீர்த்தம், சரஸ்வதி குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.

    தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கர்ப்ப கிரகத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் திரு நாமம் கொண்டு எழுந் தருளியள்ள சிவ பெருமானை வழிபட வேண்டும்.


    அவரை தரிசித்து வலம் வரும் போது கட்டை கோபுரச்சுவரில் சிறிய மாடத்தினுள் எழுந்தருளியுள்ள சனிபகவானை தரிசிக்கலாம். இவரை வழிபடத்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள்.

    இத்தலம் பேரளம் காரைக்கால் ரெயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. அரிசொல் நதிக்கும். வாஞ்சை நதிக்கும் இடையில் இத்தலம் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாக போற்றப் படுகின்றது.

    இத்தலத்திற்கு ஆதிபுரி, தர்பிபராண்யம் நகவிடங்கபுரம், நாளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல்+ஆறு திருநள்ளாராயிற்று.

    இறைவன் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர். இத்தலத்தில் சனீஸ்வர பகவானுக்கென தனி ஆலயம் உள்ளது. இது வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் உகந்த தலமாகும்.

    இறைவி ஸ்ரீபிராணாம்பிகை, போகமார்த்த பூண் முலையாள். தல விருட்சம் தர்ப்பை. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நளதீர்த்தம்.

    சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பது பழமொழி. அதனால் அனைவரும் இவரை பயபக்தியுடன் வணங்குவர்.

    இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக விளங்கும் இவருக்கு தனியே அஷ்டோத்ரம், சஹஸ்ர நாம அர்ச்சனைகள் உண்டு. திருமால், பிரம்மன், இந்திரன், தசை பாலர்கள், அகத்தியர், புலங்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகும்.

    இச்சன்னதியின் முன்புறம் மகர, கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் போடும் பிரார்த்தனை இங்கு விஷேசம். நளதீர்த்தம் கோவிலுக்கு சற்று தள்ளியுள்ள இத்தீர்த்ததில் எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. இதில் நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.

    கோவில் முகவரி:

    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளார் (அஞ்சல்), காரைக்கால், புதுவை மாநிலம்.


    குச்சனூர்

    திருநள்ளார் சனீஸ்வர பகவானுக்கு சாப விமோசனம் அளித்தவர் குச்சனூர் சனிபகவான். இந்தியாவிலேயே சனீஸ்வரருக்கு என்று கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டு விளங்கிவரும் தலம்.

    சனிபகவான் சுயம்புவாக உள்ளது கூடுதல் விசேஷம். அட்டமத்துச் சனி, கண்டசனி, அர்த்தாஷ்டம சனி பிடித்தவர்கள் குச்சனூர் சென்று சுயம்பு சனி பகவானை வழிபட்டு சுகம் பெறலாம். மேலும் மூர்த்தியான குச்சனூர் சனிபகவானை வழிபட்டால் தீராத வயிற்று வலி தீரும்.

    திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மந்தமான வியாபாரம் லாபத்தில் இயங்கும். நிலங்களில் அமோக விளைச்சல் இருக்கும். தேனியிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் குச்சனூர் உள்ளது.


    திருகொல்லிக்காடு

    மங்கு சனியால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு 30 வயதிலிருந்து 60 வயதிற்குள் பொங்குச்சனி கண்டிப்பாக வரும். அப்படிப்பட்டவர்கள் சனிபகவானை மனதார வணங்கி வரக்கூடிய தலம்தான் பொங்கு சனி தலம்.

    திருக்கொள்ளிக்காடு சென்று வணங்கி வாருங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். செல்லும் வழி திருவாரூர். விக்கிரவாண்டியத்தில் இருந்து 2½ கிலோமீட்டர் தொலைவில் கோவில் உள்ளது.

    Next Story
    ×