என் மலர்
வழிபாடு

சனிதோஷத்தை குறைக்க எளிய பரிகாரங்கள்!
- ஒன்பது கிரகங்களில் அனைவரும் பயப்படக்கூடிய கிரகம் சனி.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.
ஒன்பது கிரகங்களில் அனைவரும் பயப்படக்கூடிய கிரகம் சனி. ஜாதகரீதியாக இருந்தாலும் சரி, தசாபுக்தி கிரக பெயர்ச்சிகள் இப்படி எதனால் சனிதோஷம் ஏற்பட்டிருந்தாலும் சரி, பாதிப்புகள் நிச்சயம் கடுமையாகத்தான் இருக்கும்.
கெடுக்கும் சனியே கொடுக்கவும் செய்வார் என்றாலும் ஏனோ இவர் பெயரைச் சொல்வதில் பலருக்கும் தயக்கம் உண்டு ஏன்றாலும் இவர்தான் ஆயுள்காரன். உங்களுக்கு சனி தோஷ பாதிப்பு இருந்தால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், பணியிடத்தில் அதீத அலைச்சல், பணிச்சுமை அதிகரிப்பு, அரசு வழியில் எதிர்ப்புகள், செய்யும் தொழிலில் முடக்கம், விளைச்சல் பாதிப்பு, சோம்பல் அதிகரிப்பு, விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு உடல் உறுப்புகளுக்கு ஊறு ஏற்படுதல் இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் ஏற்படலாம்.
உடல் நலத்தில் அடிக்கடி காயம்படுதல், வெட்டுக்காயம், தீக்காயம் ஏற்படுவது, தோல் நிறமாற்றம் ஏற்படுதல், நரம்புப்பிரச்சினைகள், வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய் மானம், சர்க்கரை நோய் போன்ற உபாதைகள் ஏதாவது வரக்கூடும்.
சங்கடம் தரும் சனிதோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்தால் பிரச்சனைகள் பெரிதாக வாட்டாமல் இருக்கும்?
தினமும் ஒரு கைப்பிடி அன்னம் சிறிதளவு எள் சேர்த்து காகத்திற்கு வைப்பது மிக மிக நன்மை தரும்.
சனிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபம் நல்லெண்ணை விட்டு ஏற்துவதும்,
சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது.
தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன் காயத்ரிகளைச் சொல்வதோடு, சனிபகவான் காயத்ரியையும் சொல்லுங்கள்.
சனிப்பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.
திருநள்ளாறு போய் நளதீர்த்தத்தில் நீராடி அங் குள்ள வழக்கப்படி சனிபகவானை வழிபடுவதும், திருக் கொள்ளிக்காடு திருத்தலத்தில் உள்ள பொங்கு சனி பகவானை அர்ச்சனை செய்து ஆராதிப்பதும் நற்பலன் தரும். (திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது திருக்கொள்ளிக்கோடு. இங்கிருப்பவர் பொங்கு சனி பகவான் என்பதால், இவரது பிரசாதத்தை எடுத்து வரலாம்).
இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணை நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இருப்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது.
வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக்கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். கோவில்களில் பக்தர்களுக்கு புளியோதரை பிரசாதம் கொடுங்கள்.
அடிக்கடி சிவாலயம் செல்வதும் அங்குள்ள பார்வதியை வழிபட்ட பின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்துவிட்டு வருவதும் நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் உள்ள ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது சிறந்தது. இவற்றுள் உங்களால் இயன்ற பரிகாரத்தினைச் செய்யுங்கள். சனிபகவானால் சங்கடம் ஏதும் வராது.