search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தமிழ் புத்தாண்டு: சென்னை கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு
    X

    தமிழ் புத்தாண்டு: சென்னை கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு

    • இன்று காலை முதலே இங்கு பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • இன்று இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    தமிழ் புத்தாண்டான இன்று வேப்பம்பூ ரசம், மாங்காய் பச்சடி, பானகம், நீர்மோர், பருப்பு வடை, பாயாசம் என இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உப்பு, காரம், புளிப்பு என அறுசுவை உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் விருந்து சாப்பிடுவது வழக்கம். மேலும் கோவில்களுக்கு சென்றும் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள கோவில்களில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சிறப்பு வழிபாடு செய்தனர். இதையொட்டி சென்னையில் உள்ள கோவில்கள் இன்று மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் கோ பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. அதன்பிறகு பாலாபிஷேகம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு உச்சிகால உயர்தர சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு முருகருக்கு ராஜ அலங்காரம் நடந்தது. இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், தமிழ் புத்தாண்டு என்பதாலும் காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள் .

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இன்று மதியம் நடை அடைக்கப்படவில்லை. இன்று இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும்.

    பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி கோவிலில் இன்று காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அஷ்ட லட்சுமி சன்னதிகள், நரசிம்மர் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10.30 மணிக்கு சோபகிருது வருட பஞ்சாங்கம் வாசித்தல், சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 9 மணிக்கு சயன பூஜை நடக்கிறது.

    இன்று காலை முதலே இங்கு பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்து வருகிறார்கள்.

    பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அனைத்து சாமிகளுக்கும் புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. காலையில் சிவனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.

    காலை 6.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 5 மணி முதல் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.

    கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் காலை 7 மணி முதல் 8 மணி வரை பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதேபோல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், கந்தகோட்டம் முருகன் கோவில், தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோவில், பத்மாவதி தாயார் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    Next Story
    ×