என் மலர்
வழிபாடு

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
- சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன உற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 9-ம் நாள் நிகழ்ச்சியாக பிரணாம்பிகை-தர்பாரண்யேஸ்வரர் பொன்னூஞ்சல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவுநாளான நேற்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், பிரம்ம தீர்த்த கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், கோபூஜையும் நடத்தப்பட்டு,அலங்காரம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.
பின்னர், சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. பின்னர் நடராஜர் பிரம்ம தீர்த்தத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்வாரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம், தீர்த்தவாரி மற்றும் ஊடல் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத் தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.