என் மலர்
வழிபாடு
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- இன்று தீர்த்தவாரி நடக்கிறது.
- திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகும்.
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 8-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் தினசரி நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் திருநாளன்று நடந்தது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பி சுவாமிகள், தேவியர்களுடன் தேரில் எழுந்தருளினார். அதன் பின்னர் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விழாவையொட்டி பல வண்ண துணிகளாலும், பூக்களாலும் திருத்தேர் கண்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரதவீதிகளை சுற்றி வந்து தேர் நிலைக்கு வந்தது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 11-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.