என் மலர்
வழிபாடு

சனிதோஷம் நீங்க பிரதோஷ விரதம் இருங்கள்!
- சனிப் பிரதோஷம் மிக மிக விசேஷமானது.
- எள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ காலம் என்பது - வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு காலங்களிலும், "திரயோதசி திதி" வருகிறது அல்லவா! இவை சனிக் கிழமைகளில் வருமாயின் சனி பிரதோஷம் என்பர். இது, கிருஷ்ணபட்ச திரியோதசி எனின் மகாப் பிரதோஷம் என வழங்கப்படும்.
பிரதோஷ கலம் பரமேஸ்வரனை வழிபட உகந்த காலம் ஆகும். "திருப்பாற்கடலில் பொங்கி வந்த ஆலகால விஷத்தை அமரர்களுக்கும் அடியார்களுக்கும் எவ்வித தோஷமும் ஏற்படா வண்ணம் வேண்டி, சிவபெருமான் பருகிய வேளை தான் பிரதோஷ வேளை" ஆகும். அவ்வாறு பாம்பணிந்த பரமன் நஞ்சுண்ட நாள் சனிக்கிழமை தான். எனவே சனிப் பிரதோஷம் மிக மிக விசேஷமானது ஆகும்.
இது போல திங்கட்கிழமை வரும் திரயோதசியை "சோம பிரதோஷம்" என்றும், "செவ்வாய் பிரதோஷம்" என்றும், வியாழக்கிழமைகளில் வரும் திரயோதசியை "குரு பிரதோஷம்" என்றும் கூறுவது மரபு.
திரயோதசி தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி நித்ய பூஜையில் பக்தியோடு ஈடுபட்டு உபவாச மிருந்து சனி பகவானை ஆத்ம சுத்தியுடன் ஆராதித்து எள் முடிச்சுடன் நல்லெண்ணைய் விளக்கேற்றி எள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
மாலையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் பிரதோஷ கால பூஜையில் கலந்து கொண்டு சிவபெரு மானை உளமாற ஆராதிக்க வேண்டும். அன்றைய தினம் மௌன விரதமிருத்தல் மிக விசேஷமானது ஆகும்.
பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் நமது ஈடுஇணையற்ற பக்திக்கு திருவுள்ளம் கசிந்து சிவபெருமான் சனீஸ்வர பகவான், நந்திதேவர், முருகன், விநாயகர் போன்றோர் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வும் தகமை சால் சிவஞான பக்தியும், புத்தியும் அளித்து சர்வ மங்களமுடன் வாழ அருள்பாலிப்பர்.