என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • அடுத்து வரும் பத்து தலைமுறை உக்ரேனியர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஜெலன்ஸ்கி மறுத்தார்.
    • அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.

    அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெட் மற்றும் உக்ரைன் துணைப் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உக்ரைனின் மதிப்புமிக்க அரிய பூமி தாதுக்களான டைட்டானியம், யுரேனியம் மற்றும் லித்தியம் ஆகியவற்றை பெற அனுமதிக்கும்.

    உக்ரைன் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடர விரும்பினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உக்ரைனை அமெரிக்கா நிர்பந்தித்து வந்தது.

    உக்ரைன் தொடர்ந்து அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது.

    கடந்த பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த சந்திப்பின் போது வாக்குவாதம் வெடித்தது.

    அடுத்து வரும் பத்து தலைமுறை உக்ரேனியர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஜெலன்ஸ்கி மறுத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைய வழிவகுத்தது.

    அதுமுதல் ரஷியாவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசி வந்தார். ஆனால் கடந்த வாரம் வாடிகனில் போப் ஆண்டவர் இறுதிச் சடங்கில் வைத்து டிரம்ப், ஜெலன்ஸ்கி பேசிக்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து கடந்த வாரம் உக்ரைனில் நடந்த ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்த டிரம்ப், ரஷிய அதிபர் புதினை விமர்சித்தார்.

    இந்நிலையில் அமெரிக்கா - உக்ரைன் இடையே கனிம ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இதனால் உக்ரைனுடனான கனிம ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  

    • 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடித்து உள்ளார்.
    • தாதா சாகேப் பால்கே திரைப்படவிழாவில் விருதை பெறுகிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதில், லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார்.

    மேலும், அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். இந்நிலையில், அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய 'ரசவாதி' படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காக அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதா சாகேப் பால்கே திரைப்படவிழாவில் விருதை பெறுகிறார். இது இப்படத்திற்காக இவர் பெறும் 2-வது விருதாகும்.

    முன்னதாக, லண்டசன் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த ஒலி மற்றும் வடிவமைப்புக்கான விருதும், நியூஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • 9 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் டாப்-4 இடத்திற்குள் உள்ளது.
    • கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 3 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மொத்தமுள்ள 70 லீக்கில் இதுவரை 50 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆனால் எந்த அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) இன்னும் உறுதி செய்யவில்லை.

    ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் ஆடுகின்றன. இதில் அதிகாரபூர்வமாக 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவை. குறைந்தது 8 வெற்றியாவது பெற வேண்டும். தற்போது லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்குவதால், இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் முக்கியத்துவம் பெறும்.

    இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மல்லுகட்டுகின்றன.

    9 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் டாப்-4 இடத்திற்குள் உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 209 ரன்கள் குவித்தும், சூர்யவன்ஷியின் 35 பந்து சதத்தால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. ஆனாலும் குஜராத்தை பொறுத்தவரை பேட்டிங்கில் மிக வலுவாக காணப்படுகிறது. கேப்டன் சுப்மன் கில் (4 அரைசதத்துடன் 389 ரன்), சாய் சுதர்சன் (5 அரைசதம் உள்பட 456 ரன்), ஜோஸ் பட்லர் (406 ரன்) அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். கடந்த ஆட்டத்தில் முதுகுவலியால் பீல்டிங் செய்ய வராத சுப்மன் கில், இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித்கான் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 3 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வென்றால் தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் சிக்கல் தான்.

    தனது கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சை 154 ரன்னில் மடக்கிய ஐதராபாத் அணி அந்த இலக்கை 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஹர்ஷல் பட்டேலின் 4 விக்கெட்டும், இஷான் கிஷனின் அதிரடியும் (44 ரன்) வெற்றிக்கு உதவின. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென், இஷான் கிஷன் ஆகிய சூறாவளி பேட்ஸ்மேன்கள் ஒருசேர மிரட்டினால் எழுச்சி பெறலாம். பந்து வீச்சில் கேப்டன் கம்மின்ஸ் முழுமையாக கைகொடுக்க வேண்டியது அவசியம். 4 ஆட்டங்களில் அவருக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை. இதே போல் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பந்து வீச்சும் (8 ஆட்டத்தில் 6 விக்கெட்) எடுபடவில்லை.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஐதராபாத்தில் சந்தித்த லீக்கில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பதம் பார்த்தது. அதற்கு அவர்களது இடத்தில் வட்டியும், முதலுமாக பதிலடி கொடுக்க ஐதராபாத் வீரர்கள் தீவிரம் காட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    மொத்தத்தில் இவ்விரு அணிகளும் 5 முறை நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 4-ல் குஜராத்தும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ராகுல் திவேதியா, கரிம் ஜனத் அல்லது ரூதர்போர்டு, ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா அல்லது அர்ஷத் கான்.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, காமிந்து மென்டிஸ் அல்லது வியான் முல்டெர், நிதிஷ்குமார் ரெட்டி, கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனட்கட், முகமது ஷமி, ஜீசன் அன்சாரி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • மைக் வால்ட்ஸ் தனது பதவியிலிருந்து விலக உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
    • மார்கோ ரூபியோ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் என்றார் அதிபர் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்து வருபவர் மைக் வால்ட்ஸ்.

    இதற்கிடையே, மைக் வால்ட்ஸ் தனது பதவியிலிருந்து விலக உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஏமனில் உள்ள எரிபொருள் சேமிப்பு வளாகத்தின் மீது அமெரிக்கப் படைகள் திட்டமிட்ட தாக்குதலை குறிப்பிட்டிருந்த சிக்னல் கேட் என்ற செய்தியிடல் பயன்பாட்டில் தற்செயலாக ஒரு பத்திரிகையாளரைச் சேர்த்ததை அடுத்து அவர் பதவி விலக முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    தற்செயலாக சேர்க்கப்பட்ட பத்திரிகையாளர் அந்தப் போர் ரகசியங்களை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

    அதிபர் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் மூத்த தலைமைக் குழுவில் நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர் மைக் வால்ட்ஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பாதுகாப்பு செயலாளராக உள்ள மார்கோ ரூபியோ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் குவித்தது.

    ஜெய்ப்பூர்:

    18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது.

    முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா- ரிக்கல்டன் ஜோடி 116 ரன்கள் சேர்த்த நிலையில் ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோகித் 53 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்து இணைந்த சூரியகுமார் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி கடைசி வரை நின்றது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    ஹர்திக் பாண்ட்யா, சூரியகுமார் தலா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    முதல் ஓவரில் அதிரடி வீரர் சூர்யவன்ஷி டக் அவுட்டானார். 2வது ஓவரில் 2 சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 4வது ஓவரில் நிதிஷ் ரானா, 5வது ஓவரில் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் அவுட்டாகினர்.

    அடுத்து வந்த ஷுபம் துபே, துருவ் ஜுரலும் நிலைத்து நிற்கவில்லை

    இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் 6-வது தொடர் வெற்றி இதுவாகும். அத்துடன், புள்ளிப்பட்டியலிலும் மும்பை அணி முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.

    • தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் அஜித் குமார் பேட்டி அளித்தார்.
    • நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது அவர்களது விருப்பம்.

    நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது அவர்களது விருப்பம், அவர்களுக்கு வாழ்த்து என தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் அஜித் குமார் பேட்டி அளித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," ஒருவர் அரசியலுக்குள் நுழைவது 100 சதவீதம் துணிச்சலான முடிவு.

    எனக்கு அரசியல் லட்சியம் எதுவும் கிடையாது. ஒரு நாட்டை அல்லது ஒரு மாநிலத்தை தனது தோள்களில் சுமப்பது உண்மையில் மிகப்பெரிய பொறுப்பு.

    நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது அவர்களது விருப்பம்" என்றார்.

    • 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது.
    • கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வரி வசூலாகியுள்ளது.என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதில் இருந்து இதுவே அதிகபட்சமாக வசூலான ஜிஎஸ்டி வரியாகும்.

    இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2.10 லட்சம் கோடியை விட 12.6% அதிகமாகும். மேலும் ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி வரி 12.6 சதவீதம் அதிகரித்து வருகிறது.

    • பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது.
    • காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம்.

    அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

    மேலும், பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார்.

    மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஆர்.ப்ரியக்குமார், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.

    • ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படும்.
    • 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டு, 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படும். அதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    இதனிடையே, இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்து இருந்தது. இதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

    இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது. 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார்.
    • தற்போது மேக்னா ராஜுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகை மேக்னா ராஜ். இவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    தற்போது மேக்னா ராஜுக்கு ஒரு மகன் இருக்கிறான். இளம்வயதிலேயே கணவரை இழந்த மேக்னா ராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் வலம் வந்தது.

    இந்த நிலையில் 2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை மேக்னா ராஜ் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன்மூலம் அவர் எப்போது இருந்தாலும் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாதான் என முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சில கன்னட படங்களில் நடித்து வரும் மேக்னா ராஜ், மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
    • வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் கடந்த 1-ந் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்தநிலையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.

    முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் சறுக்கியது. முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை பந்தாடியது. 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்டது.

    கடந்த ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 210 ரன் இலக்கை 14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம் (38 பந்தில் 101 ரன்) மற்றும் ஜெய்ஸ்வாலின் (70 ரன்) அரைசதத்தின் உதவியுடன் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.



    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (426 ரன்), ரியான் பராக், துருவ் ஜூரெல் நன்றாக ஆடுகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் 'இளம் சிங்கம்' சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி மைதானத்தை அதிர வைத்ததுடன், கிரிக்கெட் உலகை வியக்க வைத்தார். அவரது அதிரடி ஜாலம் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், ஹசரங்கா, தீக்ஷனா, சந்தீப் ஷர்மா நம்பிக்கை அளிக்கின்றனர்.

    மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற அந்த அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி சரியான தருணத்தில் நல்ல நிலைக்கு திரும்பி வலுவாக இருக்கிறது.

    மும்பை அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (427 ரன்), ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மா சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் கைகொடுக்கிறார்கள்.

    இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் ராஜஸ்தான் அணி அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். எனவே அந்த அணி உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக்காக வரிந்து கட்டும். அதே நேரத்தில் தங்களது உத்வேகத்தை தொடர மும்பை அணி முழு திறனையும் வெளிப்படுத்த முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் பலம் வாய்ந்த மும்பையின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் ராஜஸ்தான் எல்லா வகையிலும் அசத்த வேண்டியது அவசியமாகும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 15 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் தோற்றதில்லை. அந்த அணிக்கு எதிராக இங்கு நடந்த கடைசி 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் ஷர்மா, யுத்விர் சிங்.

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், கார்பின் பாஷ் அல்லது மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×