search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பிறரை மன்னிக்கும் கலையை வளர்த்துக்கொள்ள...
    X

    பிறரை மன்னிக்கும் கலையை வளர்த்துக்கொள்ள...

    • தவறு செய்தவர்களை மன்னிப்பது ஒரு கலை.
    • யாராவது உங்களை காயப்படுத்தினால், நீங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் அனுபவிக்கலாம்.

    நம் வாழ்க்கையில் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் என யாராவது ஒருவர், நம்மை உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ காயப்படுத்தி இருக்கலாம். நாம் அதை நினைத்து வெறுப்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு உள்ளாவது, தவறு செய்தவர்களுக்கு கேடு விளைவிப்பதை விட, நமக்குத் தீங்கு விளைவிக்கும். தவறு செய்தவர்களை மன்னிப்பது ஒரு கலை. பிறரை மன்னிப்பதால், நம் உடல் நலமும், மன நலமும் மேம்படும்.

    பிறர் செய்த தவறுகளை எளிதில் மன்னிக்கும் திறன் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வரக்கூடிய அபாயம் குறைகிறது. தூக்கம், வலி, ரத்த அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் பாதிப்பு குறையும். பிறரை மன்னிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள கீழ்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

    ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர், சிறப்பு வாய்ந்தவர் மற்றும் ஈடுசெய்ய முடியாதவர் என்பதை அங்கீகரிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். இதனால் உங்களுக்குத் தீங்கு செய்தவரை வெறுக்கும் மனப்பான்மை குறைந்துவிடும்.

    ஒருவர் நமக்கு தீங்கு செய்திருந்தால், அந்த அனுபவம் மோசமானதாக இருக்கும். ஆனால், இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்களை காயப்படுத்தியதற்காக அந்த நபரிடம் நீங்கள் கோபப்படுவது குறையும். அன்றாட சந்திப்புகளில் மற்றவர்களிடம் சிறிய வழிகளில் அன்பை காட்ட முயலுங்கள். மளிகைக் கடைக்குச் செல்லும் போது, தெரிந்தவர்களை பார்த்து புன்னகைப்பது அல்லது குழந்தையின் பேச்சைக் கேட்க நேரம் ஒதுக்குவது போன்ற, சின்னச் சின்ன அன்பை பகிரும் செயல்களில் ஈடுபடுங்கள்.

    இதனால் மன்னிக்கும் பக்குவம் உண்டாகும். உங்களால் பிறரை எளிதில் மன்னிக்க முடியவில்லை என்றால், நீங்கள் மன்னிப்பதில் தோல்வியுற்றவர் என்று அர்த்தமல்ல. மன்னிப்பு என்பது நேரம், பொறுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் செயல்முறையாகும். உங்கள் மீது நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களிடம் நீங்கள் மென்மையாக இருங்கள் மற்றும் உள்ளுக்குள் அமைதியான உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆழமாக நேசிக்கும் ஒருவருக்கு பதிலளிப்பது போல், உங்களுக்கு நீங்களே பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

    யாராவது உங்களை காயப்படுத்தினால், நீங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் அனுபவிக்கலாம். இந்த உணர்ச்சிகள் தவறானவை அல்ல. ஒருவர் செய்த செயல் உங்களை எப்படி உணரவைத்தது என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடந்து கொள்வது முக்கியம். ஒருவர் செய்த தவறை அல்லது தீங்கை முதலில் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதுங்கள். பிறகு, அதில் உங்களை காயப்படுத்திய நேரத்தில் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை எழுதுங்கள். இதன் மூலம் உங்களுடைய உணர்வை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதை எழுதும் போது மனம் அமைதியடையும். இதனால் மன்னிக்கும் தன்மை அதிகரிக்கும்.

    Next Story
    ×