என் மலர்
கர்நாடகா
- கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
- ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டது.
இந்நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், டீசல் விலை உயர்வை விமர்சிக்கும் விதமாக கர்நாடக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையாவின் புகைப்படத்துடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சித்தராமையாவை காஸ்ட்லீ டீசல் என்று கிண்டலடித்த பாஜக, வின் டீசல் என்றால் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் (Fast & Furious), சித்தராமையா ஸ்கேம் அண்ட் இன்ஜுரியஸ் (scam and injurious)" பாஜக விமர்சித்துள்ளது.
- நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.
- 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ். 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜ் கூறியதாவது:
நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். நான் 7 வருடங்கள் இங்கு இருந்தேன். ஜெர்சியை சிவப்பு நிறத்தில் இருந்து நீலமாக மாற்றினேன். உணர்ச்சிவசப்பட்டேன், ஆனால் பந்து கிடைத்ததும் எனக்கு நன்றாக இருந்தது. நான் ரொனால்டோவின் ரசிகன், அதனால் கொண்டாட்டம்.
நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். இடைவேளையின் போது என் தவறுகளை சரிசெய்து, என் உடற்தகுதியை மேம்படுத்த முயற்சித்தேன்.
குஜராத் டைட்டன்ஸ் அணி என்னை அழைத்துச் சென்றதும் நான் ஆஷிஷ் பாயிடம் பேசினேன். நெஹ்ரா எனது பந்துவீச்சை அனுபவிக்கச் சொல்கிறார். இஷாந்த் பாய் என்ன லைன் அண்ட் லென்த் பந்து வீசவேண்டும் என்று சொல்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். பிட்ச் எனக்கு ஒரு பொருட்டல்ல என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 169 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய குஜராத் 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் லிவிங்ஸ்டன்-சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடியது.
லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார். சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.
குஜராத் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. சுப்மன் கில் 14 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் சாய் சுதர்சன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 31 பந்தில் அரை சதம் கடந்தார். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் குஜராத் பெறும் 2-வது வெற்றி இதுவாகும். இது ஆர்சிபி அணி பெற்ற முதல் தோல்வி ஆகும்.
- இந்த மனுக்கள் இன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
- 6 வாரத்திற்கு பின் பைக் டாக்சிகள் இயக்கம் நிறுத்தப்பட்டதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்
ஓலா, ரேபிடோ, உபேர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகளை நிறுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக அங்கீகரிப்பதற்காக 2022 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு உபர் இந்தியா மற்றும் பிற நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் இன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும் வரை, பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தார்.
மேலும் மாநில அரசு மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் பொருத்தமான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் இயற்றும் வரை இந்த சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைகளை 6 வாரங்களுக்குள் தடை செய்ய உத்தரவிட்ட அவர், 6 வாரத்திற்கு பின் பைக் டாக்சிகள் இயக்கம் நிறுத்தப்பட்டதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
- இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் சல்லகேர் மற்றும் பல்லாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மௌலா, சமீர் மற்றும் ரெஹ்மான் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள். அனைவரும் கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில் அதிவேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 15 முறை பல்டி அடித்தது. பல்டி அடிக்கும் போதே காரில் இருந்த ஒருவர் கிழே விழுந்த அதிர்ச்சி காட்சியும் அதில் தெரிகிறது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
சித்தராமையா தலைமையிலான இந்த அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதுபோல் பெங்களூருவில் குப்பை கழிவுகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய நிதி ஆண்டு தொடங்கிய முதல் நாளான நேற்று முதலே விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு-மைசூரு, பெங்களூரு-திருப்பதி, பெங்களூரு-தேவனஹள்ளி சாலைகளில் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலையை உயர்த்திய பிறகும் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.
பால் விலை, மின்சார கட்டணம், குப்பைக்கு வரி விதிப்பு ஆகியவை நேற்று அமலுக்கு வந்த நிலையில் அரசு தற்போது டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.
கர்நாடகாவின் பெலகாவியில் நடைபாதையில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் வியாபாரியின் மூக்கை சக வியாபாரி நறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெலகாவி நகரின் காடே பஜாரின் காஞ்சர் கல்லி என்கிற பகுதியில் தனது கடையை அமைக்க 42 வயதான சுஃபியான் பதான் விரும்பினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, மற்றொரு வியாபாரியான அயன் தேசாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இது வாக்குவாதமாக தொடங்கி பின்னர் இருவருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
சண்டையின்போது, அயன் தேசாய் திடீரென கத்தியை எடுத்து சுஃபியானின் மூக்கை நறுக்கினார். இதில், சுஃபியான் பலத்த காயமடைந்தார். மேலும், இந்த கைகலப்பின்போது சமீர் பதான் என்ற நபரும் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.
- பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர்.
பெங்களூரு:
தெலுங்கு வருட பிறப்பான யுகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதே போல் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக பெங்களூரு பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஹூப்ளி, தார்வாட், பெலகாவி, பீதர், ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, கலபுரகி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெங்களூரு மெஜஸ்டிக் கெம்பேகவுடா பஸ்நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் திரண்டனர். அவர்கள் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களிலும் ஏறி இடம்பிடித்துக் கொண்டனர். இதனால் முன்பதிவு செய்தவர்கள் இடம் கிடைக்காமல் தவித்தனர்.
சாளுக்யா வட்டம், ஆனந்த்ராவ் வட்டம், மைசூரு சாலை, யஷ்வந்த்பூர், ஆர்.எம்.சி. யார்டு, தும்கூர் சாலை மற்றும் ஓசூர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மெதுவாக நகர்ந்தன.
பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர். மேலும் தனியார் பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றது. குறிப்பாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 17 பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரூ.9 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.
- 70 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.
- நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்.
பெங்களூரு:
இந்தியாவை சேர்ந்த ஒரு தனியார் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து ஒரு ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வு அறிக்கையில் ஒவ்வொரு இந்தியரும் தினமும் சராசரியாக 5 மணி நேரம் செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் சமூக ஊடகங்களிலும், மற்றவர்கள் விளையாட்டு மற்றும் பல்வேறு வீடியோக்களை பார்ப்பதில் நேரத்தை செலவிடுவது தெரிய வந்துள்ளது.
ஒருவர் தினமும் செல்போனில் செலவிடும் நேரத்தை பொறுத்தவரை, இந்தோனேசியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது தெரியவந்தது. அதே நேரம் செல்போன் பயன்படுத்துவதில் மொத்த மணி நேரங்களை பொறுத்தவரை இந்தியா உலகின் மிகப்பெரிய பயனர் நாடாக இருப்பது தெரியவந்தது.
மேலும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இதில் 5ஜி பயன்பாட்டிலும் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இது கடந்த 2024-ம் ஆண்டில் 27 மில்லியனாக உயர்ந்துள்ளது. இணைய சந்தாதாரர்களில் 40 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார்.
- சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.50 கோடியை இழந்த வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் (82) மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா (79) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசாரை கண்டுபிடித்தனர்.
அக்கடிதத்தில் "இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள்ள யாரும் தேவையில்லை. யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை, அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய போலீசார், "சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் டியோக்ஜெரோனை தொடர்பு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அவரது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். ஆனாலும் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ராகேஷ் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
- புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு கேட்கேஸில் அடைத்து நடந்ததை மாமியார் வீட்டாருக்கு போன் செய்து கணவர் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொட்டகண்ணஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி உள்ளார். தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி கௌரி அனில் சம்பேகர். இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.
இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் ராகேஷே அவரது மனைவி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்றுமுன்தினம் தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ், மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் முழு உடலையும் மடித்து ஒரு டிராலி பையில் (சூட்கேஸ்) அடைத்து குளியலறையில் வைத்துவிட்டு மாமியார் வீட்டாருக்கு போன் செய்து உங்கள் மகளைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதன்பின் புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளியலறையில் இருந்த கௌரி அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இததையடுத்து புனேவுக்கு தப்பி செல்ல முயன்ற ராகேஷையும் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கூறுகையில், உடல் துண்டுகளாக வெட்டப்படவில்லை. அது அப்படியே இருந்தது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும் என்றனர்.