search icon
என் மலர்tooltip icon

    மிசோரம்

    • இங்குள்ள மைதேயி இனத்தவர்கள் மீது ஏதேனும் வன்முறை நடந்தால், அதற்கு அவர்களே பொறுப்பு என எச்சரித்துள்ளது.
    • மணிப்பூரில் இருந்து இடம்பெயர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 12000 குகி இனத்தவர்கள் மிசோரத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே மாதம் தொடங்கி இரு இனத்தவர்களிடயே மோதல் உருவாகி பெரும் கலவரமாக மாறியது. மே மாதம் கலவரத்தின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதனால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு உருவாகியிருக்கிறது.

    இந்நிலையில் மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரத்திலும் இந்த இனமோதலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

    மிசோரம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் உருவான மிசோரம் தேசிய முன்னணி (Mizoram National Front) என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு, அரசாங்கங்களின் முயற்சியால் ஏற்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையின்படி அமைதி வாழ்விற்கு திரும்பியது.

    இம்முன்னணியை சேர்ந்தவர்களை கொண்டது மிசோரம் மாநிலத்தின் பாம்ரா (Peace Accord MNF Returnee's Association) சங்கம்.

    இந்த அமைப்பு, மணிப்பூரின் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களை "மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்" என எச்சரித்துள்ளது.

    இது குறித்து அந்த அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், இரு பெண்களை ஆடையின்றி அணிவகுத்து அழைத்து சென்ற சம்பவத்தை கேள்விப்பட்டதும் மிசோரம் இளைஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் மிசோரத்திலுள்ள மைதேயி சமூகத்தினர் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும். மணிப்பூரில் உள்ள குகி இன சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறையால் மிசோ உணர்வுகள் ஆழமாக புண்பட்டுள்ளன. இதனால் இங்குள்ள மைதேயி இனத்தவர்கள் மீது ஏதேனும் வன்முறை நடந்தால், அதற்கு அவர்களே பொறுப்பு.

    இவ்வாறு அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

    இந்த முறையீடு மணிப்பூரைச் சேர்ந்த மைதேயி மக்ககளுக்கு மட்டுமே என்றும், வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர்கள் கூறினர்.

    இதனை தொடர்ந்து, மிசோரம் அரசு, தலைநகர் ஐசாலில் மைதேயி சமூகத்தினருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    எந்த மைதேயி இனத்தை சேர்ந்தவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மிசோரம் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மைதேயி இனத்தவரின் பாதுகாப்பு குறித்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா உறுதியளித்தார்.

    மணிப்பூர் அரசு, மிசோரம் மற்றும் மத்திய அரசாங்கத்துடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

    பெரும்பாலும் மணிப்பூர் மற்றும் அசாமைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மைதேயி சமூகத்தினர் மிசோரமில் வாழ்கின்றனர்.

    மணிப்பூரில் இருந்து இடம்பெயர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 12000 குகி இனத்தவர்கள் மிசோரத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    • மணிப்பூரில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து வன்முறை நீடித்து வருகிறது
    • வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக மணிப்பூரிலிருந்து பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து அண்டை மாநிலமான மிசோரத்திற்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி தடையின்றி கிடைக்க மிசோரம் மாநிலம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    இடம்பெயர்ந்த குடும்பங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மிசோரம் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மிசோரம் கல்வி இயக்குநர் லால்சங்லியானா, "இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டதாகவும், மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, தேவையான ஆவணங்களை அவர்களால் சமர்ப்பிக்க முடியாவிட்டாலும், பள்ளிகளில் சேர அனுமதிக்கப்பட்டனர்," என்றார்.

    இதற்கிடையில், மணிப்பூரில் இருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த 11,800-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மாநில அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியுதவி கிடைக்கும் என மிசோரம் மாநில உள்துறை ஆணையரும், செயலாளருமான ஹெச் லாலெங்மாவியா நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும் அவர், மணிப்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான செயற்குழு கூட்டத்தில், தான் பிற அதிகாரிகளுடனும், சுற்றுலா அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்ட்டுடனும் மாநில அரசுக்கு நிதியுதவி கோருவதற்காக புதுடெல்லிக்கு சென்றதாகவும், இதற்காக மத்திய அரசிடம் மாநில அரசு ரூ.10 கோடி கோரியுள்ளது என்றும் தெரிவித்தார்.

    இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமை மற்றும் நிவாரணம் குறித்து மீளாய்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

    பருவமழை நெருங்கி வருவதால், இடம்பெயர்ந்த மக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைப்பதற்கு பதிலாக, பொருத்தமான அரசு கட்டிடங்களில் வைக்க வேண்டும். அதற்காக பொருத்தமான அரசு கட்டிடங்களை காலி செய்ய வேண்டும்.

    இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி திரட்டப்பட வேண்டும். ஒத்த கருத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்தும் நன்கொடை வசூலிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை 11,870 பேர், மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிகிறது.

    வடக்கு மிசோரம் பகுதியின் கோலாசிப் மாவட்டத்திற்கு 4,292 பேர் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். இந்த மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான இடப்பெயர்வு நடைபெற்றுள்ளது.

    இதற்கு அடுத்ததாக ஐஸ்வால் மாவட்டத்தில் 3,866 பேரும், சைட்டுவல் மாவட்டத்தில் 2,905 பேரும் புகலிடம் தேடி வந்துள்ளனர். மீதமுள்ள 816 பேர் சம்பாய், லுங்லேய், மமித், கவ்சால், ஹ்னாதியால், செர்ச்சிப், சியாஹா மற்றும் லாங்ட்லாய் ஆகிய மாவட்டங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.

    அரசாங்கமும், கிராம அதிகாரிகளும், ஐஸ்வால், சைட்டுவல் மற்றும் கோலாசிப் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 35-க்கு குறையாமல் நிவாரண முகாம்களை அமைத்துள்ளனர்.

    மாநில அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள் மற்றும் கிராம மக்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

    • தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
    • விபத்தில் மீதமுள்ள ஒருவரை தேடும் பணி நீடிப்பதாக கூடுதல் துணை ஆணையாளர் சாய்ஜிக்புய் கூறியுள்ளார்.

    மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்துள்ளன.

    இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கினர். இதுபற்றி தகவல் அறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்களை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று காலை அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். இரண்டு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய அந்த குழு விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை நேற்று மீட்டன.

    எனினும், மீதமுள்ள 4 தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

    மேலும், மீதமுள்ள ஒருவரை தேடும் பணி நீடிப்பதாக கூடுதல் துணை ஆணையாளர் சாய்ஜிக்புய் கூறியுள்ளார்.

    • மிசோரம் கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் சிக்கினர்.
    • விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.

    அய்ஸ்வால்:

    மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது திடீரென குவாரியில் கற்கள் அதிகளவில் சரிந்து விழுந்தன. இதில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டது. மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

    மேலும், காணாமல் போன 4 தொழிலாளர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    • எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பற்றியது.
    • பெட்ரோல் பிடித்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தீயில் சிக்கி கருகினார்கள்.

    ஐஸ்வால்:

    மிசோரம் மாநிலம் அங்காவர்மா மாவட்டம் துங்கிலா கிராமத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டேங்கரில் இருந்து திடீரென பெட்ரோல் கசிந்து ஒழுகியது.

    இதை பார்த்ததும் டிரைவர் லாரியை நிறுத்தினார். இந்த நிலையில் லாரி டேங்கரில் இருந்து பெட்ரோல் வெளியேறுவதை பார்த்த கிராம மக்கள ஓடி வந்து பாத்திரங்களில் பெட்ரோலை பிடித்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பற்றியது. இதில் பெட்ரோல் பிடித்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தீயில் சிக்கி கருகினார்கள்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். 18 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபபட்டு வருகிறது.

    இதில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மிசோரமில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது.

    அய்சால்:

    மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 40 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 39 பட்டியல் பழங்குடியினருக்கும், ஒன்று பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மிசோரமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட உள்ளது என மாநில பா.ஜ.க. தலைவர் வன்லால்முகா அறிவித்துள்ளார்.

    • மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் இருந்து வருபவர் ஜோரம்தங்கா.
    • டாக்டரை மகள் தாக்கியதற்கு முதல் மந்திரி பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    ஐஸ்வால்:

    மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

    மிசோரம் முதல் மந்திரியின் மகள் மிலாரி சாங்டே. இவர் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.

    முன் அனுமதி இல்லாததால் மருத்துவர் முதல் மந்திரியின் மகளைச் சந்திக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மகள் டாக்டரை தாக்கியுள்ளார். இதனை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்த வீடியோ வைரலானதால் முதல் மந்திரி மற்றும் மகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், முதல் மந்திரி ஜோரம்தங்கா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஐஸ்வாலை சேர்ந்த தோல் நிபுணரிடம் தனது மகள் தவறாக நடந்ததற்கு மன்னிப்பு கேட்பதாகவும், அவரது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

    • மிசோரமில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.

    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தின் சம்பால் பகுதியில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×