search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
    • ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெக்ரன்கர் கிராமத்தை சேர்ந்தவர் ஜசாப்கான் (வயது 44), தொழிலாளி.

    கடந்த 20-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கணுக்காலில் கடித்துள்ளது. இதற்காக பொக்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 4 நாட்களாக அளித்த சிகிச்சையின் பலனாக அவர் பாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் மறுநாள் அவரை மீண்டும் ஒரு பாம்பு கடித்துள்ளது. இந்த முறை அவரது மற்றொரு காலில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    முதல் முறை பாம்பு கடியில் இருந்து ஜசாப்கான் மீண்ட நிலையில் 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் பாலைவன பகுதிகளில் அதிகமாக காணப்படும் வைபர் என்ற பாம்புகளின் துணை இனமான 'பாண்டி' என்று அழைக்கப்படும் பாம்புகள் தான் ஜசாப்கானை கடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    பலியான ஜசாப்புக்கு மனைவி மற்றும் 4 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். 

    • ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் வேலை செய்துள்ளது
    • மோடிக்கு கிடைத்த மரியாதை, 130 கோடி மக்களுக்குமான மரியாதை

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

    நேற்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா மத்திய பிரதேச மற்றும் சத்தீஸ்கர் பேரணியில் பேச, உள்துறை அமைச்சர் அமத் ஷா ராஜஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் பேசினார். அப்போது ஊழலில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பர் ஒன் என விமர்சனம் செய்தார்.

    மேலும் பேரணியில் அவர் பேசியதாவது:-

    ஊழலில் அசோக் கெலாட்டின் அரசு நம்பன் ஒன்-ஆக திகழ்கிறது. ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் வேலை செய்துள்ளது. இங்கே (பேரணி நடைபெற்ற மெவார் மைதானம்) கூடியிருக்கும் மக்களை பார்க்கும்போது சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் பா.ஜனதா ஆட்சியமைக்கும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

    மோடிக்கு உலகளவில் கிடைத்த மரியாதை, அது பா.ஜனதா கட்சிக்கோ அல்லது மற்ற ஒருவருக்கோ கிடைத்த மரியாதை அல்ல. 130 கோடி மக்களுக்கும் கிடைத்த மரியாதை. ராஜஸ்தானில் 43 லட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    மத்திய பிரதேசம் கார்கோனில் நடைபெற்ற பெரணியில ஜே.பி. நட்டா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை விமர்சனம் செய்து பேசினார் ''லட்லி லட்சுமி யோஜனா (பெண் குழந்தைகள் படிப்பிற்காக சிவராஜ் சவுகான் கொண்டு வந்த திட்டம்) திட்டத்தை கமல்நாத் நிறுத்தினார். தற்போது மக்கள் நவம்பர் மாதம் வரும் தேர்தலில் அவரை நிறுத்திவிடுவார்கள் (தேர்தல் தோல்வி)'' என்றார்.

    மேலும், ''மத்தியில் மோடி, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் அரசு. இரண்டு அரசுகளும் சேர்ந்து மக்களுக்கு தேவையானவற்றை உடனடியாக கொண்டு சேர்ப்பார்கள்'' என்றார்.

    • குடும்ப அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை பா.ஜனதா அழித்து விட்டது.
    • ராஜஸ்தானில் ஆளும் கெலாட் அரசின் ஊழல் கழுத்து அளவு ஆழமாக உள்ளது.

    ஜெய்ப்பூர் :

    பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராட்டி உள்ளார். ராஜஸ்தானின் பரத்பூரில் கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசியபோது, இதை அவர் தெரிவித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளையும் அவர் கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குடும்ப அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை பா.ஜனதா அழித்து விட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் குடும்பங்களின் கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பா.ஜனதாவிலோ கட்சிதான் குடும்பம் ஆகும். முன்பெல்லாம் இந்திய பிரதமர்கள் அமெரிக்காவுக்கு செல்லும்போது, பயங்கரவாதம் குறித்து மட்டுமே விவாதித்து விட்டு வந்துவிடுவார்கள்.

    ஆனால் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது, விண்வெளித்துறை, அன்னிய நேரடி முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுவிட்டு வந்து இருக்கிறார்.

    தற்போது இந்தியாவை குறித்து பேசும்போது, யாரும் பாகிஸ்தானை குறிப்பிடுவதில்லை. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் திறனை நாம் அடைந்துள்ளோம்.

    உலகம் முழுவதும் பிரதமர் மோடியை புகழ்வதை பார்த்து காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சல். எனவே அவர்கள் பிரதமரை 'பாம்பு', 'தேள்', 'டீ விற்பவன்' என்றெல்லாம் அழைக்கிறார்கள். ராஜஸ்தானில் ஆளும் கெலாட் அரசின் ஊழல் கழுத்து அளவு ஆழமாக உள்ளது. ஊழல் செய்வதற்கு தங்கள் கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் அவர்கள் வெளிப்படையாக லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்கள். எங்கும் ஊழல் பரவி இருக்கிறது.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடி வரை ஏலம் போன செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது.
    • தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் செம்மறி ஆட்டுக்கு கொடுக்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர், அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது செம்மறி ஆட்டின் உடலில் 786 என்ற எண்கள் காணப்பட்டது தெரிய வந்தது. இந்த 786 என்ற எண்கள் இஸ்லாமிய மதத்தில் புனிதம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    இதனால் அந்த செம்மறி ஆட்டை விற்பதற்கு ராஜூசிங் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    செம்மறி ஆட்டின் உடலில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என எனக்கு தெரியாது.

    இதுபற்றி இஸ்லாமிய சமூக உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசித்த போதுதான், அது 786 என்ற எண் என கூறினர். பக்ரீத்தையொட்டி இந்த செம்மறி ஆட்டை அதிக விலை கொடுத்து வாங்க சிலர் முன்வந்தனர். ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட கொடுத்தும் வாங்குவதற்கு முன்வந்தனர். ஆனால் அதனை விற்க நான் தயாராக இல்லை. ஏனென்றால் அந்த ஆடு என்னிடம் மிகவும் அன்பாக உள்ளது என்றார்.

    ரூ.1 கோடி வரை ஏலம் போன அந்த செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது. தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் கொடுக்கப்படுகிறது.

    • கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார்.
    • இளம்பெண்ணை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க தலித் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார். அவரை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் வகுப்பிற்காக அந்த பெண் சென்ற போது கஜூவாலா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மனோஜ் குமார் மற்றும் பாகீரத்குமார் என்ற 2 போலீஸ்காரர்கள் மற்றும் தினேஷ் உள்ளிட்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க கூடாது என பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு தேஜஸ்வனி கவுதம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முதல் கட்டமாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களான மனோஜ் குமார், பாகீரத் குமார் ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வரதட்சணை வழக்கில் மனைவிக்கு பராமரிப்பிற்காக 2.25 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு
    • பணம் இல்லாததால் கணவன் சிறையில் அடைப்பு. உறவினர்கள் முதல் தவணை செலுத்த முன்வந்தனர்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தஷ்ரத் குமாவாத் என்பவர் வழக்கில்தான் இந்த வினோதம் நடைபெற்றுள்ளது. இவருக்கு சுமார் 10 வருடத்திற்கு முன் சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த சில வருடங்களில் தஷ்ரத் குமாவாத் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜெய்பூராஸ் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மனைவியின் பராமரிப்பிற்காக 2.25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த தொகையை தஷ்ரத்தால் செலுத்த முடியவில்லை. இதனால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    ஜெயிலில அடைக்கப்பட்டுள்ள தஷ்ரத்தின் உறவினர்கள் அவரை வெளியில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். இதனால் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை முதல் தவணையாக நீதிமன்றத்தில் செலுத்த தொடங்கினார்.

    வரதட்சணை புகார் அளித்த தஷ்ரத்தின் மனைவி பணத்தை எண்ணிஎண்ணி சோர்வாகிட வேண்டும் என நினைத்தார்களோ என்னவோ.... முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை ஏழு பெட்டிகள் வைத்து கொண்டு வந்தனர்.

    இதனால் நீதிபதி வியப்படைந்தார். இதெல்லாம் என்னது என கேட்க...

    ஐயா... நாங்கள் தஷ்ரத்தின் உறவினர்கள். தஷ்ரத் கட்ட வேண்டிய பணத்தில் முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை நாணயங்களாக கொண்டு வந்துள்ளோம். ஏழு பெட்டிகளில் 280 கிலோ எடைகொண்டது என்றனர்.

    என்ன இருந்தாலும் இதை புறந்தள்ளிவிட முடியாது என்பதால் பணத்தை எண்ணி பாதுகாக்கும்படி உத்தரவிட்டார்.

    நாணயங்களாக வழங்குவது வேண்டுமென்றே துன்புறுத்தல் செயலாகும். இது மனிதாபிமானமற்ற செயல் என்று சீமாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். ஆனால் தஷ்ரத் சார்பில் ஆஜரான வக்கீல், நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்க இந்திய பணம ஆகும் என்றார்.

    55 ஆயிரம் ரூபாயும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக இருந்தன.

    • அசோக் கெலாட் மக்களுக்காக உழைத்திருந்தால் விளம்பர போஸ்டர் எதற்கு
    • டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து ஆம் ஆத்மி ஆட்சிதான்

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. இதற்கு முன்னோட்டமாக பஞ்சாப் மாநில முதல்வருடன் இணைந்து நேற்று ராஜஸ்தானில் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார்.

    நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆம் ஆத்மி ஆட்சியை டெல்லி மற்றும் பஞ்சாபில் யாராலும் 50 வருடத்திற்கு வீழ்த்த முடியாது. நீங்கள் வரும் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அப்படி செய்தால் ராஜஸ்தானில் இருந்தும் எங்களை 50 வருடத்திற்கு யாராலும் நீக்க முடியாது என்ற வகையில் சேவைகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்போம்.

    நாங்கள் இங்கே வரும்போது, அசோக் கெலாட் போஸ்டர்கள் கங்காநகர் முழுவதும் மற்றும் இந்த மைதானத்திலும் ஒட்டப்படிருந்ததை பார்த்தோம். அவர் கடந்த 5 வருடம் மக்களுக்காக உழைத்திருந்தால், இந்த போஸ்டர்கள் தேவையிருந்திருக்காது.

    பேரணியின்போது சிலர் இங்கே வந்து நாற்காலிகளை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். இதெல்லாம் கோழைத்தனம். அசோக் கெலாட் 5 வருடம் ஏதும் செய்யவில்லை. இதனால் ஆம் ஆத்மியின் பேரணிகளை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • என் தந்தை மற்றும் தாத்தாவின் ஊர்வலம் ஒட்டகங்களில் சென்றது.
    • ஊர்வலம் கிராமத்தை அடைந்ததும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

    ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த திருமண விழாவில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    குடமலானி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவுத்ரி என்பவருக்கும், ரோலி கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோலி கிராமத்திற்கு திருமண ஊர்வலம் புறப்பட்டது. இதில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்து அசத்தினார். ஒரு டிராக்டரை மணமகனே ஓட்டினார். மொத்தமுள்ள 51 டிராக்டர்களில் 200க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பயணித்தனர்.

    இதுகுறித்து மணமகன் கூறுகையில், "தனது குடும்பத்தின் பிரதான தொழில் விவசாயம். ஒரு விவசாயியின் அங்கீகாரமாக டிராக்டர் கருதப்படுகிறது. அவரது தந்தையின் திருமண ஊர்வலம் ஒரு டிராக்டரில் புறப்பட்டது. எனவே, எனக்கு ஏன் 51 டிராக்டர்கள் ஊர்வலத்தில் இருக்கக்கூடாது என்று அனைவரும் நினைத்தனர்" என்றார்.

    மேலும், மணமகனின் தந்தை, ஜெதாராம் கூறுகையில் "ஒரு டிராக்டர் 'பூமியின் மகன்' என்று கருதப்படுகிறது. என் தந்தை மற்றும் தாத்தாவின் ஊர்வலம் ஒட்டகங்களில் சென்றது. எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே 20-30 டிராக்டர்கள் இருந்தன. என் விவசாய நண்பர்களுடன் சேர்ந்து, அவற்றில் மொத்தம் 51 டிராக்டர்களை நான் பதிவு செய்தேன். காலையில் ஊர்வலம் புறப்பட்டபோது மேலும் 10-12 டிராக்டர்கள் சேர்ந்தன. டிராக்டர்கள் மூலம் விவசாயம் செய்கிறோம். அதற்கு ஏன் ஊர்வலம் செல்ல முடியாது? என்று நினைத்தோம்.

    ஊர்வலம் கிராமத்தை அடைந்ததும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர்" என்றார்.

    • அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

    முந்தைய பா.ஜனதா ஆட்சி மீதான ஊழல் புகார்கள் குறித்து அசோக் கெலாட் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சச்சின் பைலட் கடந்த மாதம் போராட்டம் நடத்தினார்.

    சச்சின் பைலட்டின் தந்தையும், மறைந்த முன்னாள் மத்திய மந்திரியுமான ராஜேஷ் பைலட் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சச்சின் பைலட், தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் அதை மறுத்தது.

    இந்நிலையில், ராஜேஷ் பைலட் நினைவுநாளையொட்டி, தவுசா நகரில் உள்ள ஒரு விடுதியில் ராஜேஷ் பைலட் சிலையை சச்சின் பைலட் திறந்து வைத்தார். தனிக்கட்சி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    என்னை பொறுத்தவரை, மக்களிடையே நம்பகத்தன்மை பெறுவதற்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கிறேன். மக்கள் நம்பிக்கை, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள், நம்பகத்தன்மை ஆகியவைதான் அரசியலில் மிகப்பெரிய சொத்துகள்

    நான் அரசியலில் நுழைந்து கடந்த 22 ஆண்டுகளாக, இந்த நம்பிக்கை குறைந்து போகும் அளவுக்கு எந்த காரியமும் செய்யவில்லை. இனிவரும் காலங்களிலும் அந்த நம்பிக்கைதான் எனக்கு மிகப்பெரிய சொத்து. அது எப்போதும் குறைந்துபோக விட மாட்டேன். இது சத்தியம்.

    எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும், மக்களுக்காக போராடி அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வேன். கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

    நான் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ஆட்சியில் இருந்த பா.ஜனதாவை துணிந்து எதிர்கொண்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார்.
    • காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல் இன்று வரை உட்கட்சி பூசல் ஓயவே இல்லை.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை.

    முதல் மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட்டும் அறிவிக்கப்பட்ட போதும் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை.

    அசோக் கெலாட், காங்கிரஸ் மேலிடத்தின் முழுமையான ஆதரவால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஓரம் கட்டினார். ஒருகட்டத்தில் கொந்தளித்துப்போன சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

    இப்படி ஒவ்வொரு முறையும் பைலட் கலகக் குரல் எழுப்பும் போதெல்லாம் டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது. ஆனால் தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிற ஆதங்கம் சச்சின் பைலட் கோஷ்டியிடம் இருந்து வந்தது.

    இதற்கிடையே, காங்கிரசில் இருந்து சச்சின் பைலட் வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும், நாளை மறுதினம் தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவல் வதந்தி. ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

    • அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
    • நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்.

    ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் டெல் ஃபேக்டரி பகுதியைச் சேர்ந்த காஸ்கிரஸின் பரான் நகரப் பிரிவுத் தலைவர் கவுரவ் சர்மா (43) தலவாரா சாலையில் வீட்டு மனை காண சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராஜூ என்கிற ராஜேந்திர மீனா என்பவர் கவுரவ் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    இருவருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சண்டையாக மாறியது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுரவ் சுருண்டு விழுந்தார்.

    பின்னர், கவுரவை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம்.
    • நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் எதுவும் இல்லை என தகவல்.

    ராஜஸ்தா் மாநிலம், பிகானேர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது.

    பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் எதுவும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    ×