என் மலர்
இந்தோனேசியா
- இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர்.
- உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது.
இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர். 2 மில்லயனில் 1 முறையே இதுபோன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை இரட்டையர்களுக்கு இசோபேகஸ் த்ரிபஸ் (Ischiopagus Tripus) என்று மருத்துவப் பெயர் உள்ளது. இந்த வகை இரட்டையர்களை 'சிலந்தி இரட்டையர்கள்' என்றும் அழைக்கின்றனர்.
இந்தோனேசியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அமெரிக்க மருத்துவ இதழ் இவர்களைக் குறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பிறகே இந்த அரிய வகை இரட்டையர்களின் பிறப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் அந்த இதழில் குறிப்பிட்டுள்ளபடி, உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது. இந்த வகை இரட்டையர்களில் ஏதேனும் ஒரு குழந்தை உயிரிழப்பதற்கே 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த இரட்டையர்கள் இன்னும் நலமுடன் இருக்கின்றனர். இருப்பினும், அவர்களது உடல் அமைப்பின் காரணமாக முதல் 3 வருடங்களுக்கு அவர்களால் உட்கார முடியாத சூழல் இருந்ததால் அவர்கள் படுத்தே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் மருத்துவர்கள் செய்த சிறிய அறுவை சிகிச்சை காரணமாக தற்போது அவர்களால் அமர முடிகிறது என்று மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாக இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விமான நிலைய ஊழயர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிரான்ஸ்நூசா நிறுவனத்தின் ஏர்பஸ் A320 என்ற விமானத்தின் உள்ளே ஆய்வு செய்துவிட்டு இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள் இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த ஏணியை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
இதனால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி அந்த ஊழியர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். விமான கதவு மூடப்படுவதற்கு முன்பே ஏணியை எதற்கு ஊழியர்கள் அகற்றினார்கள் என்றும் இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.
கவனக்குறைவு காரணமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் விமான நிலையங்களில் நடப்பது தொடர்கதையாகி வருவதாகவும் நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர். இந்த சம்பவத்துக்கு நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறது என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது.
- விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த பாண்டுங் பகுதியில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிந்ததும் பேருந்து ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜகார்தா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 61 பேர் பயணம் செய்தனர்.
மலைகள் நிறைந்த பகுதியில் பேருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தபோது திடீரென பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது.
இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேர் உயிர் இழந்தனர். பலியானவர்களில் 9 பேர் மாணவர்கள், ஒரு ஆசிரியர், மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
- பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
மேலும், வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 28 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்டவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
- எரிமலை வெடிப்பை தொடர்ந்து கண்காணித்து வரும்நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதற தொடங்கியது. பின்னர் அது அமைதியான நிலையில் கடந்த சில நாட்களாக அந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கி உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். எரிமலை வெடிப்பை தொடர்ந்து கண்காணித்து வரும்நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையை தவிர்க்கும் வகையில் சர்வதேச விமான நிலையமான சாம் ரதுலங்கி உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
- நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள நகரங்களிலும் உணரப்பட்டுள்ளன.
- நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை இல்லை.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா அருகே சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளதாகவும், இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இல்லை எனவும் அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் மையம் கருட் ரீஜென்சிக்கு தென்மேற்கே 151 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தலைநகர் மற்றும் அருகிலுள்ள பான்டென் மாகாணம் மற்றும் மத்திய ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களிலும் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அமைப்பால் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட ஹூவாங், பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்தார்.
- வெளிநாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை இழந்த சோகத்தில் செய்வதறியாது துயரத்தில் மூழ்கினார் அவரது கணவர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்கா உள்ளது. இங்கு சீனாவை சேர்ந்த ஹூவாங் என்ற பெண், தனது கணவருடன் சுற்றுலா வந்திருந்தார்.
பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட அவர், பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்தார். 'புளூ பயர்' என்று அழைக்கப்படும் ஒரு எரிமலை சீற்ற நிகழ்வை படம் பிடிப்பதற்காக அவர் ஒரு குன்றின் உயரமான இடத்திற்கு சென்றார். அங்கிருந்து எரிமலை பின்னணியில் தன்னை மறந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். 75 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
வெளிநாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை இழந்த சோகத்தில் செய்வதறியாது துயரத்தில் மூழ்கினார் அவரது கணவர். இதுபற்றிய செய்திகள் ஊடகங்களையும், வலைத்தளங்களையும் ஆக்கிரமித்தது. பலரும் விமர்சன கருத்துகளை பதிவு செய்தனர்.
- எரிமலையை சுற்றியுள்ள 4 கிலோ மீட்டர் தூரம் வரை வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
- எரிமலை வெடிப்புக்கான அபாயம் குறைந்துள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜகார்த்தா:
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. இதில் ஜாவா தீவு அருகே உள்ள ருவாங் எரிமலை கடந்த வாரம் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீக்குழம்புகள் வெளியேறின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனையடுத்து எரிமலையை சுற்றியுள்ள 4 கிலோ மீட்டர் தூரம் வரை வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கையாக அதன் அருகில் உள்ள ரதுலங்கி விமான நிலையமும் மூடப்பட்டது.
தற்போது எரிமலை வெடிப்புக்கான அபாயம் குறைந்துள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே ஒரு வாரத்துக்கு பிறகு ரதுலங்கி விமான நிலையம் திறக்கப்பட்டு மீண்டும் தனது சேவையை தொடங்கியது.
- எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
- சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் தீவில் எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலையானது நள்ளிரவில் இருந்து 5 முறை பயங்கரமாக வெடித்தது. அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.
ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. எரிமலை வெடிப்பையடுத்து சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2,378 அடி உயரமுள்ள ருவாங் எரிமலையில் இருந்து குறைந்தது 6 கி.மீ. தொலைவில் இருக்குமாறு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
மேலும் எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலையின் வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்தியது. அதன்பின் மலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து 430 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் கரும்புகை பல அடி உயரத்துக்கு எழும்பியது. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை. இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான வெடிமருந்துகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட பகுதியில் தீப்பிடித்தது என்றும் காலாவதியான வெடிமருந்துகளில் நிலையற்ற ரசாயனங்கள் உள்ளன. அதில் ஏற்பட்ட உராய்வுகள் மூலம் தீ பிடித்திருக்கலாம் என்றும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- இந்தோனேசியாவில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
ஜகார்த்தா:
பல்வேறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
- 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
- இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மியுபோபா:
நமது பக்கத்து நாடான வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து வருகின்றனர். இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
இதனால் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்.