என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன
    • 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

    இந்தோனேசியாவை சேர்ந்த தீவு பிரதேசம், சுமத்ரா (Sumatra island).

    மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வந்த கடும் மழையால், திடீர் வெள்ளமும், அதை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேரை காணவில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (National Disaster Management Agency) தெரிவித்துள்ளது.

    இந்த சரிவினால் மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இவற்றால் நதிக்கரையோர கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கோடோ XI டருசான் (Koto XI Tarusan) பகுதியில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.


    80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 14 வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன.

    20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    மின்சாரத் தடை, சாலைகளில் ஓடும் வெள்ள நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கிடையே சிக்கியுள்ள மக்களை மீட்க முயன்று வருகின்றனர்.

    பெருமளவு மலைப்பிரதேசங்களை கொண்ட இந்தோனேசியாவில் வெள்ள அபாய பகுதிகள் ஏராளமாக உள்ளன.

    அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் மழையால் ஏற்படும் வெள்ளம் போன்றவற்றால் லட்சக்கணக்கான மக்கள் துன்பப்படுவது அங்கு தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த 2023 டிசம்பர் மாதம் திடீர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், டோபா எனும் ஏரிக்கருகே ஒரு ஓட்டல் முற்றிலும் சேதமானது.

    • பிரபோவோவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
    • புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புகிறேன்.

    இந்தோனேசியாவில் சில நாட்களுக்கு முன்புதான் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற பிரபோவோ சுபியாண்டோ அந்நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


    இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர், "அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததற்கு இந்தோனேசிய மக்கள் மற்றும் அதிபராக தேர்வாகி இருக்கும் பிரபோவோ சுபியாண்டோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த இந்தோனேசிய அதிபர் தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


    "எங்களது தேர்தல் குறித்த உங்களின் வாழ்த்து செய்திக்கு நன்றி பிரதமர் மோடி. இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் உங்களின் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
    • அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தோனேசியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாதுகாப்பு மந்திரி பிரபோவோ சுபியாண்டோ முன்னாள் மாகாண கவர்னர்கள் அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவியது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

    இந்நிலையில் அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். அதே வேளையில் தேர்தல் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரபோவோ, தனது வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்றார்.

    • தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    • அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    ஜகார்த்தா:

    உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேசியா. 20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு இன்று அதிபர் தேர்தல் நடந்தது. மேலும் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடி மையங்களில் குவிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

    தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    பாதுகாப்புத்துறை மந்திரியாக பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2-வது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

    கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு மந்திரி பிரபோலோ வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 52 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இவர் தற்போதைய அதிபரின் ஆதரவை பெற்றவர் ஆவார். துணை அதிபர் பதவிக்கு அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று மாலை ஓட்டுப் பதிவு முடிந்ததும் அதில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்படுகின்றன.

    • சுமத்ரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
    • எரிமலை வெடிப்பினால் அருகில் உள்ள கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி மலை இன்று மீண்டும் வெடித்தது. எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால், அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 150க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    அதிகாலை 6.21 மணிக்கு எரிமலை வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மராபியின் சிகரத்திற்கு கீழே உள்ள பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றங்கரைக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு, சுமத்ரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

    மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எரிமலைக்குழம்புகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும், எரிமலை ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    எரிமலை ஆய்வு நிறுவனத்தின் பரிந்துரையின்படி, 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு தங்குமிடம் அந்நாட்டு அரசாங்கத்தால் தயார் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் எரிமலை சாம்பலால் ஏற்படும் சுவாச நோய்த் தொற்றுகளை தவிர்க்க இலவச முககவசம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் மராபி மலையில் வெடிப்பு ஏற்பட்ட போது, எரிமலையில் நடைபயணம் மேற்கொண்ட 75 பேரில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. 

    • உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இந்தோனேசியா தீவுகளில் நிலநடுக்கம் என்பது வழக்கமான ஒன்றதாகிவிட்டது. அடிக்கடி அங்குள்ள தீவுகள் அதிர்ந்த வண்ணமே உள்ளன.

    • பயணிகள் ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • ரெயில் பயணிகளின் பல பெட்டிகள் தரம் புரண்டதால் பலர் காயம்

    இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகள் ஒன்றான ஜாவாவில் இன்று இரண்டு ரெயில்கள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

    தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரெயில், சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த ரெயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதில் குறைந்தது 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    • இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் ஆய்வுமையம் தெரிவித்தது.

    ஜகார்த்தா:

    பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகளின் வளைவான ரிங் ஆப் பயர் மீது இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு வடக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள அபேபுராவிற்கு வடகிழக்கே 162 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் எச்சரித்துள்ளது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது.இதில் 2.30 லட்சம் பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடதக்கது.

    • ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது.
    • சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. இது கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சுனாமி ஆபத்து இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்ப வெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது. நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது. ஆனால் மக்களிடம் சுனாமி பீதி ஏற்பட்டது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை, இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது. இதில் 2.30 லட்சம் பேர் பலியானார்கள். இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணத்தில் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 19-வது நினைவு தினம் முடிந்த 3 நாட்களுக்கு பிறகு இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது.
    • மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவசரமாக திரும்பினர். மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் அங்கு சென்றிருந்திருந்தனர்.

    அவர்களில் 46 பேர் கீழே இறங்கி வந்துவிட்டனர். மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இதில் 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் 12 பேரும் பலியானது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.

    • உலகின் ஒல்லியான ஓட்டல் என்று இந்தோனேஷியாவில் உள்ள ஒரு ஓட்டல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    • குறுகிய இடத்தின் காரணமாக கட்டிடத்தை வடிவமைப்பதில் சவாலை எதிர் கொண்டதாக கட்டிட வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரமாண்டமான ஓட்டல்கள், அதில் உள்ள வசதிகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

    இந்நிலையில் உலகின் ஒல்லியான ஓட்டல் என்று இந்தோனேஷியாவில் உள்ள ஒரு ஓட்டல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரிஇந்திரா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம் 5 தளங்களை கொண்டுள்ளது. 9 அடி அகலத்துடன் 7 அறைகள் மட்டும் கொண்டுள்ள இந்த ஓட்டலில் ஒரு ஓய்வு அறையும் உள்ளது. குறுகிய இடத்தின் காரணமாக கட்டிடத்தை வடிவமைப்பதில் சவாலை எதிர் கொண்டதாக கட்டிட வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், வசதியாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் உண்மையில் எவ்வளவு சிறிய இடம் தேவை என்று விருந்தினர்கள் வியக்கும் வகையில் இந்த ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

    • நிலநடுக்கத்தை தொடர்ந்து, சாத்தியமான பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு.
    • இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் அறிவிப்பு.

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    6.0 என்கிற ரிக்டர் அளவில் நிலநடுக்கம், இந்தோனேசியாவின் வட மலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு டோபெலோ என்கிற பகுதியில் இருந்து 94 கி.மீ., தொலைவில் 116 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் கூறுகையில், "சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. ஆனால் சாத்தியமான பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றது.

    கடந்த ஆண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×