என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
    • வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார்.

    ஜப்பானில்  இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் தந்தையின் சடலத்தை 2 ஆண்டுகளாக வீட்டு அலமாரியில் ஒளித்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்ற நபர், உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக உணவகம்  திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நோபுஹிகோ சுசுகி  வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது.

    இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார், ஆனால் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், அதை தவிர்க்க தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாக சுசுகி தெரிவித்தார்.

    எனினும் தந்தையின் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளாக பெற்று வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜப்பானில், இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.7.60 லட்சம்) ஆகும் என மதிப்பிடப்படுகிறது.  

    • ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.
    • முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மரத்தால் ஆன பழைய கட்டிடம் அகற்றப்பட்டது. பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.

    இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரெயில் நிலையம் ஆகும். அதேசமயம் இந்த முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என ஜப்பான் வீட்டு வசதி நிறுவனமான செரெண்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்த முப்பரிமாண ரெயில் நிலையம் வருகிற ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஜப்பான் மேற்கு ரெயில்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • நாகசாகி மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
    • விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர்

    ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில், ஒரு நோயாளி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    நேற்று நாகசாகி மாகாணத்தில் உள்ள  விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு வயதான நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதைத்தொடர்ந்து இரண்டு கடலோர காவல்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் மருத்துவர், நோயாளி மற்றும் பராமரிப்பாளர் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர். 

    • கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

    மியான்மருக்குப் பிறகு, இப்போது ஜப்பானிலும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஜப்பானின் கியூஷு பகுதியில் இந்திய நேரப்படி இரவு 7:34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) படி, கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கத்தின் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலஅதிர்வு உணரப்பட்டது.

    இதுவரை பெரிய அளவிலான சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. மூன்றாவது பெரிய தீவு கியூஷு அடிக்கடி நில அதிர்வுவுக்கு உள்ளாகும் இடமாகும்.

    தற்போதைய நிலநடுக்கத்திற்கு பின்னர், உள்ளூர் நிர்வாகம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

    முன்னதாக, மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தை தாண்டியுள்ளது.

    • பியூஜி மலையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
    • இணையம் மூலம் முன்பதிவு செய்வதற்கான அதிகபட்ச வரம்பையும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பியூஜி எரிமலை அமைந்துள்ளது. நாட்டின் மிக உயரமான இந்த எரிமலை மலையேற்றத்துக்கு சிறந்த இடமாகவும் உள்ளது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த சாகச வீரர்களும் இங்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டனர். எனவே பியூஜி மலையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

    இதன் காரணமாக அங்கு சுற்றுச்சூழலும் வெகுவாக மாசடைந்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த பியூஜி மலையில் ஏறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி மலையேற்றத்தில் ஈடுபடும் சாகச வீரர்களுக்கு ரூ.2,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இணையம் மூலம் முன்பதிவு செய்வதற்கான அதிகபட்ச வரம்பையும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.

    • 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின.
    • தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சிடித்து வருகின்றனர்.

    டோக்கியோ:

    ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்தன. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    அதேபோல் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

    எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சிடித்து வருகின்றனர்.

    • நியூயார்க்கில் அணுஆயுத தடை ஒப்பந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
    • பார்வையாளராக கலந்து கொண்டு ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி கூறுகையில் "ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

    "கடுமையான பாதுகாப்பு சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தித் தடுப்பு இன்றியமையாதது" எனவும் தெரிவித்துள்ளார்.

    இந்த மாநாடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.

    ஐ.நா.வின் 2017-ம் ஆண்டு அணுஆயுத தடை ஒப்பந்தத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. இது 2021-ம் ஆண்டு நடைமுறைக்கு கொணடு வரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதேபோன்று மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஐ.நா. இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.

    அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மட்டும் இன்னும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக் கூறி ஜப்பான் கையெழுத்திட மறுத்துவிட்டது.

    • கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
    • குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை.

    ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதையடுத்து குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அந்த நாட்டில் தொடர்ந்து 9-வது ஆண்டாக மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்று ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிமசா ஹயாஷி தெரிவித்தார். அங்கு திருமண வாழ்க்கை நடைமுறையை இளைஞர்கள் விரும்பாததே குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

    • ஹொண்டா மோட்டார் நிறுவனம், நிசான் மோட்டார் நிறுவனமும் வணிக ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிப்பு.
    • இரு நிறுவனங்களும் தாங்களும் இணைவது குறித்து பரிசீலனை செய்வதாக மிட்சுபிஷி தெரிவித்திருந்தது.

    ஜப்பானின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹோண்டா, நிசான், மிட்சுபிஷி ஆகியவை வணிகத்தில் ஒருங்கிணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்த நிலையில், இந்த பேச்சுவார்த்தையை கைவிட்டுள்ளன.

    ஹொண்டா மோட்டார் நிறுவனம், நிசான் மோட்டார் நிறுவனமும் கடந்த டிசம்பர் மாதம் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தது.

    ஹோண்டா, நிசான் நிறுவனத்துடன் நாங்களும் தாங்களும் இணைவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தை கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

    • ரஷியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஓகோட்ஸ்க் கடற்பகுதியில் டுபோலேவ்-95 என்ற ரஷிய போர் விமானங்கள் பறந்து சென்றது கண்டறியப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலாக அந்த குண்டுவீச்சு விமானங்கள் வானில் வட்டமிட்டன.

    ரஷியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதமும் ரஷிய விமானங்கள் இதேபோல் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இதனால் இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.
    • 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது.

    டோக்கியோ:

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது. ஜப்பானின் ஒசாகா நகரில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 நடைபெற இருக்கிறது. இதில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பராம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த உள்ளனர்.

    ஒசாகாவில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025-க்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க அந்த நகர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்ததாண்டு முழுவதும் தடை அமலில் இருக்கும் என்றும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பிளாட்டை வாடகைக்கு விட்டு சுமார் ரூ.2 லட்சம் வரை சம்பாதித்த பிறகு ரூ.24 லட்சத்துக்கு விற்றுள்ளார்.
    • சுமார் 200 வீடுகளை வாங்கி விற்று லாபத்தை கண்டுள்ளார்.

    எத்தனை காலம் ஒருவரிடம், கடின உழைப்பை கொடுத்து குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தும் பதவி உயர்வு இல்லை.. பணி அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் வாழ்க்கையை தொலைப்பது என முடிவு எடுத்த ஒருவர் தற்போது ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். அது குறித்து பார்ப்போம்....

    ஜப்பானின் ஒசாகாவை சேர்ந்த 38 வயதான ஹயாடோ கவாமுரா. இவர் சிறு வயதில் இருந்தே பலவகையான வீடுகளின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கல்லூரி பருவத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த நேரத்தில் அவருக்கு ரியல் எஸ்டேட் கை கொடுக்கவில்லை.

    அதன்பின், படிப்பை முடித்து வாடகைக்கு வீடு பிடித்து கொடுக்கும் நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். அங்கேயும் அவரால் நீண்ட காலம் பணிபுரிய முடியவில்லை. நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை அடுத்து வேறொருக்கு வேலை செய்வதில் உள்ள ஆபத்தையும், பதவி உயர்வு என்பது திறனைப் பற்றியது அல்ல, மேலதிகாரி உங்களை விரும்புகிறாரா என்பதைப் பற்றியது என்பதை உணர்ந்துள்ளார் கவாமுரா.

    இதை தொடர்ந்து ரூ.10 லட்சத்துக்கு ஒரு பிளாட்டை வாங்கியுள்ளார். இதன்பின் அந்த பிளாட்டை வாடகைக்கு விட்டு சுமார் ரூ.2 லட்சம் வரை சம்பாதித்த பிறகு ரூ.24 லட்சத்துக்கு விற்றுள்ளார்.

    இதையடுத்து தொலைதூரப் பகுதிகளில் உள்ள பாழடைந்த வீடுகளை குறிவைத்து குறைவான விலைக்கு வாங்கி சீரமைத்து அதன்பின் விற்று லாபத்தை கண்டுள்ளார். அதன்பின் சொந்த ரியஸ் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி தற்போது வரை சேதமடைந்த சுமார் 200 வீடுகளை வாங்கி விற்று லாபத்தை கண்டுள்ளார். இதன் மூலம் அவர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.7.72 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    நான் ஒரே இரவில் பணக்காரர் ஆகணும் என்று எதிர்பார்க்கவில்லை. ரியல் எஸ்டேட் முதலீடு என்பது பொறுமை மற்றும் கவனம் மற்றும் ஒரு நீண்ட கால விளையாட்டு என்று கவாமுரா கூறினார்.

    இதுதொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயனர்கள் பாராட்டி வருகின்றனர். பயனர் ஒருவர் கூறுகையில், அவர் மிகவும் அற்புதமானவர்! என்றும் தனித்துவமான முதலீட்டு நுண்ணறிவு, துல்லியமான நிதி கட்டுப்பாடு, வலுவான தொடர்புகள் மற்றும் சரியான அதிர்ஷ்டம் அனைத்தும் அவசியம்" என்று மற்றொருவர் கூறினார்.

    ×