என் மலர்
கர்நாடகா தேர்தல்
- எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம்.
- நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.
பெங்களூரு :
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க நான், சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் டெல்லி செல்கிறோம். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து முதல்கட்ட மந்திரிசபை அமைப்பது குறித்து முடிவு எடுக்க உள்ளோம். முதலில் நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்போம். புதிய மந்திரிகள் யார் என்பதை நாங்கள் விரைவில் அறிவிப்போம். எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம். யூகங்களுக்கு இடம் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.
எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். எங்களின் முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
எங்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். விழாவில் பங்கேற்க வருகிறவர்கள் விழாவுக்கு சற்று முன்னதாகவே வந்துவிட வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்காமல் இருக்கலாம். அதே போல் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
உத்தரவார திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதாவது விதிக்கப்படுமா?, என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் முடிவு எடுத்ததும் அதுகுறித்து உங்களுக்கு தெரிவிக்கிறோம். ஆனால் நாங்கள் சொன்னபடி நடந்து கொள்வோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
அவர் டெல்லி புறப்படும் முன்பு கன்டீரவா அரங்கத்திற்கு நேரில் வந்து விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றார்.
- கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார்.
- அந்த காரின் ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சித்தராமையாவுக்காக கர்நாடக அரசு சார்பில் புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயட்டோ நிறுவனத்தின் தயாரிப்பான டொயட்டோ வெல்பயர் என்பது அந்த காரின் பெயர். இதன் விலை பெங்களூருவில் ரூ.96 லட்சம். வாகன பதிவெண், இதர உதிரிபாகங்கள் பொருத்துதல் உள்பட ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அப்படி இந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று பார்ப்போம்...
ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் உள்ளன. பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்குகளும் இருக்கிறது. பனிமூட்டமாக இருக்கும் சமயத்தில் ஒளிரும் பாக் விளக்கு வசதியும் இதில் உள்ளது. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடல் காராகும். 150 எச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினை கொண்டது. இத்துடன் 143 எச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது.
இவை ஒன்றிணைத்து 145 எச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியவை. இதில் டிரைவர் உள்பட 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இருக்கைகள் ஒவ்வொன்றும் இடைவெளியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இருக்கையும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வசதிக்கு ஏற்ப முன், பின் நகர்த்தும் வசதியும். கால்களை வைக்க கீழ் பகுதியில் சிறிய மெத்தை போன்ற பகுதி இருக்கிறது. அத்துடன் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி கொள்ளும் வசதி உள்ளது.
இந்த காரின் பக்கவாட்டில் சாத்தக்கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான சீதோஷ்ண நிலை கன்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்ட்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது மிகசிறந்த பொழுதை நமக்கு தரும். அதுபோல் பின் இருக்கைகளில் 10.2 அங்குல எல்.சி.டி. டி.விக்களும் உள்ளன. இந்த கார் 2020-ம் ஆண்டு தான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
- கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
- பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியுடன் சேர்த்து 8 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, புதிதாக பதவியேற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளர். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.
மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.
ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமத்கான் ஆகியோரும் கர்நாடகா அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
- கன்டீரவா ஸ்டேடியம் முழுவதும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
- பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு :
கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். அத்துடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். மந்திரிகளின் பெயர் பட்டியலை இறுதி செய்வதற்காக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேற்று காலை 9 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மந்திரிசபையில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. இதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு தலா 10 இடங்களும், காங்கிரஸ் மேலிடத்திற்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மந்திரி பதவியை பெறும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை டெல்லி சென்றனர்.
அதாவது எம்.எல்.ஏ.க்கள் வீரேந்திரா, கோவிந்தப்பா, டி.சுதாகர், ரகுமூர்த்தி, அஜய்சிங், யஷ்வந்த்ராஜ் கவுடா பட்டீல், எம்.சி.சுதாகர், பிரதீப் ஈஸ்வர், கிருஷ்ண பைரேகவுடா, என்.ஏ.ஹாரீஷ், சீனிவாஸ் மானே, ரிஸ்வான் ஹர்ஷத், ஈஸ்வர் கன்ட்ரே, ரகிம்கான், சிவராஜ் தங்கடகி, சி.எஸ்.நாடகவுடா, அசோக் ராய், கே.என்.ராஜண்ணா, கே.ஆர்.ராஜேந்திரா, விஜயானந்த் காசப்பன்னவர் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தங்களுக்கு மந்திரி பதவி வழங்குமாறு கேட்டு கொண்டனர். அவர்கள் கட்சியின் இதர மேலிட தலைவர்கள் சிலரையும் சந்தித்து மந்திரி பதவிக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன், தினேஷ் குண்டுராவ், பி.கே.ஹரிபிரசாத், யு.டி.காதர், ஜமீர் அகமதுகான், வினய் குல்கர்னி, தன்வீர்சேட் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தராமையா பதவி ஏற்கும் விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த விழாவில் அகில இந்திய அளவில் முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 6 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாா்க்கப்படுகிறது. பெங்களூருவுக்கு வருகை தரும் இந்த தலைவர்களுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விழா நடைபெறும் கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த ஸ்டேடியமே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தின் உள்ளே வெடிகுண்டு பிரிவு போலீசார் அங்குலம், அங்குலாக சோதனை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை தலைமை செயலாளர் வந்திதா சர்மா கவனித்து வருகிறார். இந்த பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா நடைபெறும் ஸ்டேடியத்திற்குள் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள், தீ பற்றும் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், கூர்மையான ஒளியை ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது.
- காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல.
ராமநகர் :
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததாக நினைக்க வேண்டாம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எந்த கவலையும் வேண்டாம். பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது. அதில் புதியதாக எதுவும் நடக்கப்போவதில்லை. யாரை எங்கே எப்படி தடுப்பது என்பது எனக்கு தெரியும். நான் போராட தயாராக இருக்கிறேன். நான் யாரிடமும் உதவி கேட்க மாட்டேன்.
காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. அவர்களுக்கு எப்படி அந்த நிதி கிடைக்கும்?.
இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினால் எப்படி சாலைகள், நீர்ப்பாசனம், உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும். காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளை எப்படி மேற்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆட்சியில் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்பதை எதிர்பார்க்க வேண்டாம்.
ஜனதாதளம் (எஸ்) கட்சி இந்த முறை 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சிலரின் சதி மற்றும் பொய் குற்றச்சாட்டுகளால் சமுதாயத்தின் 3 சதவீத வாக்குகள் நமது கட்சிக்கு கிடைக்கவில்லை. பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கைகோர்க்கும் என்று தவறான தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பரப்பினார்கள். பா.ஜனதா தலைவர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை அழிக்க திட்டமிட்டனர்.
எங்கள் குடும்பம் இதை விட பல அதிர்ச்சிகளை தாங்கியுள்ளது. கடவுள், மக்களின் அருள் எங்களுக்கு உள்ளது. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம். வரும் காலத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கர்நாடகத்தில் நவம்பர் மாதத்திற்குள் அரசியல் மாற்றம் நிகழும். பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காங்கிரஸ் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- கர்நாடகம் சுபிட்சமாக இருக்கும் மாநிலம்.
பெங்களூரு :
தற்காலிக முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டசபை தேர்தல் முடிவு வெளிவந்து 6 நாட்களுக்கு பிறகு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியை காங்கிரஸ் தேர்ந்தெடுத்துள்ளது. புதிய முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். அரசியலில் யாருக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.
பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்ற மக்கள் ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர். காங்கிரஸ் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த கட்சி அளித்த வாக்குறுதிகள் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, நமது மாநிலத்தின் நிதிநிலையை சீர்குலையாமல் பார்த்து கொள்வதும் அவர்களின் கடமை. இந்த விஷயத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எதிர்க்கட்சியாக நாங்கள் பொறுப்புடன் பணியாற்றுவோம். நிலம், நீர் விவகாரங்களில் அரசியல் இல்லாமல் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு அநீதி ஏற்படும் அரசை எச்சரிக்கை பணியை நாங்கள் செய்வோம். மாநிலத்தை வளர்ப்பதில் பெரிய சவால்கள் உள்ளன. கர்நாடகம் சுபிட்சமாக இருக்கும் மாநிலம். மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.
பா.ஜனதாவின் தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்து வருகிறோம். இந்த பணி பல்வேறு மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் 2, 3 நாட்களில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதே கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். பா.ஜனதாவில் தலைமை பண்பு உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
சில பகுதிகளில் அரசின் திட்டங்களை கொண்டு செல்வதில் பின்னடைவு ஏற்பட்டது. தேர்தலுக்கு தயாராவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அதனால் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. நாங்கள் மீண்டும் வீறு கொண்டு எழுவோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
- குமாரசாமி மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பார்த்து வியந்தேன்.
- நான் தேர்தலில் தோற்றாலும், உங்களுடன் எப்போதும் இருப்பேன்.
ராமநகர் :
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் சென்னப்பட்டணாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் குமாரசாமி, நிகில் குமாரசாமி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நிகில் குமாரசாமி பேசியதாவது:-
என் தந்தை உங்களை நம்பி போட்டியிட்டார். அவரை நீங்கள் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். குமாரசாமி மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பார்த்து வியந்தேன். ராமநகர் மாவட்டத்திலேயே இங்கு தான் அதிக விசுவாசிகள் உள்ளனர். நான் தேர்தலில் தோற்றாலும், உங்களுடன் எப்போதும் இருப்பேன். எங்களுக்கு தோல்வி புதிதல்ல. குமாரசாமி கடந்த 2004-ம் ஆண்டு முதல் ராமநகர் தொகுதியில் வெற்றி பெற்று வளர்ச்சி பணிகளை செய்து வந்தார்.
ஆனால் இந்த முறை மக்கள் வேறு முடிவை எடுத்துவிட்டனர். இதனால் நான் தோல்வி அடைந்துள்ளேன். மண்டியா நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படி தான் நான் தோற்கடிக்கப்பட்டேன். ராமநகர் தொகுதியில் ரூ.3 ஆயிரம் பரிசுக்கூப்பன்களை மக்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் கொடுத்து என்னை தோற்கடித்தார். வருங்காலத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நான் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்தேன்.
- காங்கிரஸ் மீது தலித் மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.
பெங்களூரு :
கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவா்கள் நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது கா்நாடக சட்டசபையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று இருப்பது குறித்து கடிதம் கொடுத்தார். பதவி ஏற்பு விழா நடைபெறும் நாள் உள்ளிட்ட தகவல்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கவர்னரை சந்தித்த பிறகு பரமேஸ்வர் கூறுகையில், "புதிய முதல்-மந்திரியை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சி மேலிடம் ஒருவருக்கு மட்டுமே துணை முதல்-மந்திரி பதவி வழங்குவதாக கூறியுள்ளது. இது சரியல்ல. நான் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்தேன்.
குறைந்தபட்சம் துணை முதல்-மந்திரி பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். காங்கிரஸ் மீது தலித் மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் துணை முதல்-மந்திரி பதவியை அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டியது அவசியம். நான் மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து இதுபற்றி வலியுறுத்துவேன்" என்றார்.
- காங்கிரஸ் கட்சி எங்களை விட பெரிய கட்சி.
- ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் உண்மையாகியுள்ளது.
ராமநகர்
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவுக்கு வந்த ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் கட்சிக்கு தோல்வி என்பது புதியதல்ல. எச்.டி.தேவகவுடா தலைமையில் இருமுறை தேர்தலில் தோல்வியை தழுவிய போதும் ஜனதாதளம் (எஸ்) கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதுபோல் மீண்டும் ஆட்சியை பிடிப்போம். கடந்த 6 மாதங்களாக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் எனது எதிர்பார்ப்பு பொய்யானது. ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் உண்மையாகியுள்ளது. தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து வரும் நாட்களில் கட்சியினருடன் சேர்ந்து கட்சியை பலப்படுத்துவோம்.
ராமநகர் தொகுதியில் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தது பற்றி எந்த விவாதமும் செய்யவில்லை. அது முடிந்துபோன அத்தியாயம். இன்று தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், வருங்காலத்தில் வெற்றி பெறுவார்கள். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பழைய மைசூரு பகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை பா.ஜனதா தனது அதிகார பலம், பண பலத்தால் அழிக்க முயன்றது. இதனால் இந்த தேர்தலில் எங்கள் கட்சி தோற்றுவிட்டது.
காங்கிரஸ் கட்சி எங்களை விட பெரிய கட்சி. அவர்கள் உத்தரவாத திட்டங்கள் இலவசம் என கூறினர். இப்போது அவர்கள் உத்தரவாத திட்டங்களுக்கு நிபந்தனை என கூறுகிறார்கள். அடுத்து என்ன சொல்ல போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
எங்கள் சமுதாயத்திற்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும். முதல்-மந்திரி பதவியை யார் வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த மக்களின் முதல்-மந்திரியாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது.
- சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் போட்டி இருந்து வருகிறது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தாலும் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதில் அக்கட்சி திணறி வருகிறது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் போட்டி இருந்து வருகிறது.
இருவரும் பிடிவாதமாக இருப்பதால், கட்சி மேலிடம் திணறி வருகிறது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தனித்தனியாக சந்தித்து பேசி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்க அவர் கூறியதாக தகவல் வெளியானது.
சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்க உள்ளனர்.
இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பெங்களூருவிலும், அவரது சொந்த ஊரான மைசூரு மாவட்டம் சித்தராமய்யனகுந்தியிலும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள், அவரது உருவப்படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும், இனிப்பு ஊட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது.
- சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.
புதுடெல்லி:
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதல்-மந்திரி பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறது.
கடந்த 13-ந்தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்-மந்திரி பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார்.
இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பு ஏற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சித்தராமையாதான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று எழுதி கொடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பேரில் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
ஆனால் சோனியா, பிரியங்கா ஆகியோர் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை அறிந்ததும் கார்கேவும் தனது நிலையை மாற்றிக்கொண்டு டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக பேசி வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ரன்தீப்சுர்ஜிவாலாவும் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததாக தெரியவந்துள்ளது.
சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரில் யார் முதல்-மந்திரியாக தேர்வு பெறுவது என்ற விவகாரம் கர்நாடகா மாநில காங்கிரசை இரண்டு கோஷ்டிகளாக பிளவுபடுத்தி இருக்கிறது. அதன் எதிரொலி டெல்லி காங்கிரசிலும் கேட்க தொடங்கி உள்ளது. டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் இந்த விவகாரத்தில் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.
பெரும்பாலான மூத்த தலைவர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்களின் விருப்பபடி சித்தராமையாவை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
டி.கே.சிவகுமார் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அது எதிர்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்றாலும் சோனியா, பிரியங்கா இருவரது ஆதரவும் இருப்பதால் டி.கே.சிவகுமார் தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறார்.
மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தேர்தலில் வெற்றி பெற வைத்து இருப்பதால் தனக்கே முதல்-மந்திரி பதவி தரப்பட வேண்டும் என்று டி.கே.சிவகுமார் தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறார். தனது பிடிவாதத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.
சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுப்பதால் 4 நாட்களாக புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடிக்கிறது.
புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கார்கேவிடம் ஒப்படைத்து இருந்தனர். ஆனால் அவரால் இறுதி முடிவு எடுத்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது பேச்சை டி.கே.சிவகுமார் மற்றும் கர்நாடகா மாநில தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
இதையடுத்து இன்று (புதன்கிழமை) 4-வது நாளாக டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்தே தீர வேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டுடன் களத்தில் இறங்கினார்.
தன்னை வந்து சந்திக்கும்படி சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவருக்கும் அழைப்பு விடுத்தார்.
அதன்படி 11.30 மணிக்கு சித்தராமையா ராகுலை சந்தித்து பேசினார். கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு தனது பங்களிப்பை அப்போது அவர் விளக்கி கூறினார். ராகுல் தெரிவித்த சில திட்டங்களை ஏற்றுக்கொண்டு சித்தராமையா முதல்-மந்திரி பதவியை தனக்கே தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவரை தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு ராகுல் காந்தியை டி.கே.சிவகுமார் வந்து சந்தித்தார். 75 வயதாகும் சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்து விட்டார். எனவே காங்கிரசை வெற்றி பெற வைத்த தனக்கே முதல்-மந்திரி பதவி தர வேண்டும் என்று தெரிவித்தார்.
இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்ட ராகுல் காந்தி அடுத்தகட்டமாக சோனியா, கார்கேவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகு கர்நாடகா புதிய முதல்-மந்திரி யார் என்பதில் தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது. வெற்றி பெற்று 4 நாட்கள் ஆன பிறகும் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாததால் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.
- இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர்.
- பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர்.
பெங்களூரு :
தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகதீஷ் ஷெட்டர். இவர் தனக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தார்வார்-உப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
லிங்காயத் தலைவரான எடியூரப்பா கடந்த பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். ஆனால் அவரை வலுக்கட்டாயப்படுத்தி பா.ஜனதா பதவி விலக வைத்தது. மேலும் அவரை அக்கட்சி ஓரங்கட்டியது. எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை உயர்மட்ட குழு கூற வேண்டும்.
நான் காங்கிரசில் இணைந்ததால் தான் வடகர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர். தம்மய்யா, லட்சுமண் சவதி உள்பட பல லிங்காயத் தலைவர்களை பா.ஜனதா மதிக்கவில்லை. அவர்களை யாரும் சமாதானப்படுத்தவில்லை. பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர். பி.எல்.சந்தோஷ் பா.ஜனதா தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார். இதனால் என்னை ஓரங்கட்டினர். தற்போது என்னை குறிவைத்து பா.ஜனதாவினர் தோற்கடித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.