என் மலர்
மலேசியா
- விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பை இழந்தது
- காரில் பயணித்த ஒருவர் மற்றும் பைக்கில் பயணித்தவர் உயிரிழந்தனர்
ஆசிய நாடான மலேசியாவின் மேற்கு கரையோரம் உள்ள மாநிலம் செலங்கோர்.
இன்று மலேசியாவின் லங்காவி பகுதியிலிருந்து 6 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்களுடன் செலங்கோரிலுள்ள சுபங்க் விமான நிலையம் நோக்கி ஜெட் வேலட் எனும் தனியார் ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் பறந்து கொண்டிருந்தது.
இவ்விமானத்திற்கு மதியம் 02:48 மணியளவில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மதியம் சுமார் 02:10 மணியளவில் தரையிறங்கும் சற்று நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்தின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஷா ஆலம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.
இவ்விபத்தில், விமானம் நெடுஞ்சாலையில் அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் பைக் மீது விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இதோடு விமானத்தில் பயணம் செய்த எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சமூக வலைதளங்களில் இவ்விபத்து குறித்து வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களிலில் ஷா ஆலம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தீயுடன் புகை வந்து கொண்டிருப்பதும், விமானத்தின் பாகங்களும் தெரிகிறது.
சாலையில் விழுந்த விமானம் உடனடியாக வெடித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தில் உயிரிழந்த பயணிகளில் ஜொஹாரி ஹாருண் எனும் அந்நாட்டின் அரசியல்வாதியும் ஒருவர். விபத்து குறித்து வருத்தம் தெரிவித்திருக்கும் பல முக்கிய பிரமுகர்களும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
- ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் பரிசு
- இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி
மலேசியாவில் தனது அன்பு மனைவிக்கு ஒரு தொழிலதிபர் பொது இடத்தில் வழங்கியிருக்கும் பரிசு குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
அந்த வீடியோவில் காணப்படுவது:-
அந்த தொழிலதிபர் மலேசியா நாட்டின் பெடாலிங் ஜெயா பகுதியில் 128 ஸன்வே சாலையில், ஸன்வே பல்கலைகழகம் அருகில் காஃபி ஷாப் நடத்தி வருகிறார். அவர் தனது மனைவியை ஒரு சிகப்பு நிற துணியால் மூடப்பட்ட ஒரு காரை நோக்கி அழைத்து செல்கிறார்.
அந்த கார் முழுவதும் சிகப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காரின் பிராண்ட் அந்த துணியில் தெரிகிறது. இருவரும் அந்த காரை நெருங்கும்போது அந்த தொழிலதிபர், காரிலிருந்து அந்த துணியை மெதுவாக விலக்குகிறார்.
அதில் ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் தெரிகிறது. அதன்விலை சுமார் ரூ. 3.68 கோடிகளாகும் (Singapore Dollar 351,800).
இக்காட்சிகளை பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் படம் பிடித்தனர். இந்த காட்சிகளுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்துக்கள் வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.
"எனக்காக இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி. உனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்" என அவர் மென்மையாக மனைவியிடம் தெரிவித்ததாக ஒரு சமூக வலைதள பயனாளி தெரிவித்தார்.
சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரும் தொழிலதிபரான அவர்கள் இருவரின் ஒற்றுமையை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி கருத்து தெரிவிக்கின்ற அதே வேளையில், அவரது பகட்டான செயலை விமர்சித்தும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த கடை இருக்கும் முழு தெருவும் போக்குவரத்து தடையால் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இரு நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார்.
- இரு நாட்டு அதிபர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் 18 ஆண்டு கால மலேசிய, இந்தோனேசிய எல்லை பிரச்சனை முடிவுக்கு வருகிறது.
கோலாலம்பூர்:
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தன் மனைவி மற்றும் கேபினட் அமைச்சர்களுடன் 2 நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடல்வழி எல்லை பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும், பாமாயில் வர்த்தகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவூட்டும் வகையில் ஒன்றுபட்டு போராட மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் சுலாவேசி கடற்பகுதிகளில் உள்ள எல்லை நிர்ணயம் சம்பந்தமான இரு ஒப்பந்தங்கள், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தங்கள் குறித்து அதிபர் ஜோகோ கருத்து தெரிவிக்கையில், 18 ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கடவுள் அருளால் கடல்வழி எல்லை பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது என கூறினார்.
அதன்பின், இருநாட்டு அதிபர்கள் அளித்த கூட்டறிக்கையில், கையெழுத்தான இந்த ஒப்பந்தம், கடல்வழி எல்லை சார்ந்த எதிர்கால பேச்சுவார்த்தைக்கு ஒரு நல்ல அடித்தளமாக அமையும். இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மற்ற நில எல்லை பிரச்சனைகளையும் 2024 ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வரவுள்ளோம்.
பாமாயில் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து, வலுவாக போராட உள்ளோம். இதுசம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியம் நடுநிலையான, நியாயமான தீர்வு ஏற்பட ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
காடுகளை அழித்து உருவாக்கப்படும் பண்டங்களை பயன்படுத்துதலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய பண்டங்களை இறக்குமதி செய்வதை தடைசெய்ய சட்டம் இயற்றியுள்ளது. உலக பாமாயில் வர்த்தகத்தில் 85 சதவீதம் உற்பத்தி செய்து வரும் மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு, இது பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதற்கு தீர்வு காண, ஒருங்கிணைந்த பிரதிநிதிக் குழுவை ஐரோப்பிய ஒன்றியத்தின் புருசெல்ஸ் நகருக்கு கடந்த வாரம் அனுப்பியுள்ளது. எனினும் ஐரோப்பாவுடன் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் குறித்தும் ஒரு வரைமுறை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என அதிபர் ஜோகோ தெரிவித்தார்.
மலேசியாவில் தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு வேலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இந்தோனேசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரனோய் சீன வீரருடன் மோதினார்.
- இதில் இந்தியாவின் பிரனோய் வென்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனோய், சீனாவின் வெங் ஹாங்யாங்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் 21-19 என்ற கணக்கில் முதல் சுற்றை பிரனோய் கைப்பற்றினார். 2வது சுற்றை 21-13 என சீன வீரர் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது சுற்றில் 21-18 என பிரனோய் வென்றார். இதன்மூலம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
- தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.
- மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொலை, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா உருவாக்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த புதிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.
இதற்கு முன்பு கொலை, போதைப்பொருள் கடத்தல், தேசத்துரோகம், கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின்படி, கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சில ஆயுத வழக்குகளில், மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம்.
இந்த சட்டம் தொடர்பாக சட்டத்துறை இணை மந்திரி ராம்கர்பால் சிங் கூறுகையில், 'இந்த சீர்திருத்தங்கள் மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மரண தண்டனை நடைமுறையில் இருக்கும். அதேசமயம், சில குற்றங்களுக்கு தண்டனையை மறுஆய்வு செய்து 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், குற்றவாளிகள் தங்கள் தண்டனையை மறுஆய்வு செய்யும்படி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்' என்றார்.
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய கடந்த ஆண்டு சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. ஆனால் பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மலேசியாவின் கோலாலம்பூரில் மார்ச் 12 அன்று நடந்த யோங் ஜுன் கேஎல் ஸ்பீட் க்யூபிங் 2023 நிகழ்ச்சியில் சாதனை.
- ஐந்து முறை முடிவுகளின் கணக்கில், யிஹெங் 4.35, 3.90, 4.41, 5.31 மற்றும் 6.16 வினாடிகளில் போட்டியைப் பதிவு செய்தார்.
சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, 4.86 வினாடிகளில் கூட்டாக சாதனை படைத்த க்யூபிங் வீரர்களான மேக்ஸ் பார்க் (அமெரிக்கா) மற்றும் டைமன் கொலாசின்ஸ்கி (போலந்து) ஆகியோரை யிஹெங் வீழ்த்தியுள்ளார்.
கின்னஸ் உலக சாதனையின்படி, ஸ்பீட் க்யூபிங் பிராடிஜி யிஹெங் வாங் (சீனா) 3x3x3 என்கிற சுழலும் புதிர் கன சதுரத்தை 4.69 வினாடிகளில் முடித்து வேகமான சராசரி நேரத்திற்கான சாதனையை முறியடித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் மார்ச் 12ம் தேதி அன்று நடந்த யோங் ஜுன் கேஎல் ஸ்பீட் க்யூபிங் 2023 நிகழ்ச்சியில், அரையிறுதி போட்டியில் யிஹெங் தனது சாதனை நேரத்தை பதிவு செய்தார்.
இப்போட்டியில், ஐந்து முறை முடிவுகளின் கணக்கில், யிஹெங் 4.35, 3.90, 4.41, 5.31 மற்றும் 6.16 வினாடிகளில் போட்டியைப் பதிவு செய்தார். உலக கியூப் சங்கம் விதிகளின்படி, சராசரியைக் கணக்கிடும்போது வேகமான மற்றும் மெதுவான நேரங்கள் தள்ளுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
- ஊழல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பதவியை விட்டு விலகிய பின்னர் குற்றம் சுமத்தப்படும் 2-வது பிரதமர் முகைதீன் யாசின் ஆவார்.
கோலாலம்பூர்:
மலேசியாவில் 2020 முதல் 2021 வரை பிரதமராக பதவி வகித்தவர் முகைதீன் யாசின். இவர் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முகைதீன் யாசின் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஊழல் வழக்கில் முகைதீன் யாசினை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் ஊழல் வழக்கில் 20 ஆண்டுகளும், பணமோசடி செய்ததற்காக 15 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
பதவியை விட்டு விலகிய பின்னர் குற்றம் சுமத்தப்படும் 2-வது பிரதமர் முகைதீன் யாசின் ஆவார். ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார்.
- இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோலாலம்பூர் :
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார்.
அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் 1எம்.டி.பி. ஊழல் தொடர்பான முதல் வழக்கில் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே 1எம்.டி.பி. ஊழல் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை மாற்றியமைக்க நஜீப் ரசாக், பிரதமர் மற்றும் நிதிமந்திரியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் நஜீப் ரசாக் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதரங்கள் இல்லை என கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
மேலும் நஜீப்புக்கு உடந்தையாக இருந்ததாக கூட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியாக ஆஜரான 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அருள் கந்தசாமியும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
- மண்ணுக்குள் புதைந்துள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது.
கோலாலம்பூர்:
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பதங்கலி நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்தப் பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கிருந்தனர்.
இதற்கிடையே, இன்று அதிகாலை இந்தப் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 79 பேர் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர்.
நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 79 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 பேர் மீட்கப்பட்டனர். மாயமானோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
- நிலச்சரிவில் சிக்கிய 23 பேர் உயிருடன் மீட்பு, 9 பேர் உயிரிழந்தனர்.
- மண்ணுக்குள் மேலும் புதைந்துள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.
கோலாலம்பூர்:
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பதங்கலி நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கிருந்தனர். இந்நிலையில்,இன்று அதிகாலை இந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 79 பேர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 79 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் 400 பேர் ஈடுபட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
- அன்வார் இப்ராகிம் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.
- முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது.
மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார்.
ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து மொகிதீன் யாசினி பிரதமராக பதவி ஏற்றார்.
அவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி விலகினார். அதன்பிறகு புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாசோப் பதவி ஏற்றார். இதற்கிடையே ஆளும் கூட்டணியின் பெரிய கட்சியான அம்னோ கட்சி அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உத்தரவிட்டார். இதற்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா ஒப்புதல் அளித்தார். அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியான நிலையில், அன்வர் இப்ராஹீம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.
முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால், மற்ற சிறிய கட்சிகள் ஐக்கிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது. மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்படுகிறார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்றுமாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.
- இன்று நடந்த சர்வதேச ஜூனியர் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
- ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்ததால் ஷூட் அவுட் முறைக்கு சென்றது.
ஜோஹார்:
6 அணிகள் பங்கேற்ற 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஹாக்கி போட்டி மலேசியாவில் நடந்தது.
லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா அணி 13 புள்ளிகளுடன் (4 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், இந்தியா 8 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிச்சுற்றை எட்டின.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்தியாவின் சுதீப் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் ஹாலண்ட் 29வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து ஷூட் அவுட் முறைக்கு சென்றது.
இதில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
போட்டியை நடத்திய மலேசியா புள்ளிப்பட்டியலில் (1 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.