என் மலர்


காழ்
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 389 |
Point | 30 |
ஆஸ்திரேலியாவில் இருக்கும் தமிழர்களின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை சொல்லும் படம்.
கதைக்களம்
தமிழரான யுகேந்திரன், ஆஸ்திரேலியாவில் மனைவி மிமி லியோனர்டுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி விட வேண்டும் என்ற கனவு. அதற்காக கடுமையாக உழைத்து வங்கியில் கடன் வாங்கி அதை கட்டி முடிக்க திட்டமிடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் போலி ஆதாரங்களை வைத்து கடன் வாங்கி தருவதாக சொல்லி ஒரு தமிழர் யுகேந்திரனை மோசடி செய்து விட்டுப் போகிறார். வீடு கட்டப்படாமல் அடிப்படை வேலைகளோடு நின்று விடுகிறது.
இன்னொரு புறம் ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்து வரும் சித்தார்த் அன்பரசு, தன்னுடைய விசா காலம் முடிவடையும் நிலையில் இருக்க, அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிக்கிறார். அதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. அவருடைய காதலி நித்யா பாலசுப்ரமணியம் அவருக்கு உதவி செய்கிறார். ஆனால், நண்பர் மூலமாக அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் யுகேந்திரன் வீடு கட்டும் கனவு நிறைவேறியதா? சித்தார்த் நிரந்தர குடியுரிமை பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன் கதையின் நாயகனாக மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். வீடு நின்று போன கவலை, ஏமாற்றப்பட்ட விரக்தி, அதையும் தாண்டி எப்படியும் கனவை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எல்லாவற்றையும் தாங்கி சீனு என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அவரின் மனைவியாக வரும் மிமி லியானர்ட் இலங்கை தமிழ் பேசி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். யுகேந்திரனுக்கு பக்கபலமாகவும், அவர் சோர்ந்து போகும் போது உறுதுணையாக பேசியும் கவனம் பெற்றிருக்கிறார்.
சித்தார்த் அன்பரசு சராசரி வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களை பிரதிபலித்துள்ளார். யாரையும் நம்பி விடும் அப்பாவித்தனம், தான் உழைத்து சேர்த்த தன் பணம் தனக்கு வேண்டும் என நிற்பது, தான் ஆசைப்பட்ட வேலை கிடைத்த சந்தோஷம், தன்னை அறியாமல் செய்த தவறால் குற்ற உணர்ச்சியில் தவிப்பது என நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்.
அவரின் காதலியாக வரும் நித்யா பாலசுப்ரமணியம் ஈர்க்கிறார். ஸ்வாமி என்ற கதாபாத்திரத்தில் உள்ளுக்குள் சாதிய உணர்வை வைத்துக் கொண்டு வாழும் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் அஷ்வின் விஸ்வநாதன். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜ். வெளிநாட்டு வாழ்க்கை என்பது கார், பங்களா, ஆடம்பர சொகுசு வாழ்க்கை என்பது போல் இல்லாமல், தினமும் பல சவால்களையும், மன உளைச்சலையும் எதிர்கொள்ளும் ஒரு போராட்ட களமாகவே உள்ளது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
இந்தியாவில் மக்கள் படும் எல்லாவித கஷ்டங்களையும் வெளிநாட்டு வாழ் மக்களும் அனுபவிக்கிறார்கள், பணத்துக்காக ஓடி ஓடி வேலை செய்வது, கிடைத்த வேலையை செய்வது என எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். எல்லோர் வாழ்விலும் ஆசை, லட்சியம். ஏமாற்றம் எல்லாமே இருக்கும் என்பதையும் கதையின் போக்கில் உணர்த்துகிறார்.
ஆர்ப்பாட்டம் இல்லாத காட்சிகள், தெளிவான திரைக்கதை என இருந்தாலும் இரண்டு கதைகளாக திரைக்கதை நகர்கிறது. வேகமாகவும், கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
இசை
ஹெல்வின், சஞ்சய் அரக்கல் ஆகியோரின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையும் கவர்ந்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
வசந்த் கங்காதரன் ஒளிப்பதிவு ஆஸ்திரேலியாவை ரசிக்க வைக்கிறது.
தயாரிப்பு
ஜி.என் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் ’காழ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.