என் மலர்
காதலிக்க நேரமில்லை
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 12 | 50 |
Point | 4187 | 2732 |
காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்.
கதைக்களம்
நாயகன் ரவி மோகன் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள பிடிக்காது. இதனால் இவரது காதலி நிச்சயதார்த்தம் செய்யும் நாளில் ரவி மோகனை விட்டு செல்கிறார். இவர் தன் நண்பர் வினய், யோகி பாபுவுடன் இணைந்து ஒருநாள் விந்து தானம் செய்கிறார்.
மறுபக்கம் சென்னையில் வாழ்ந்து வரும் நித்யா மேனன், தனது காதலர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் அவரை விட்டு பிரிகிறார். இவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம். இதனால், டெஸ்ட் ட்யூப் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறார். ரவி மோகன் கொடுத்த விந்து மூலம் நித்யா மேனன் கர்ப்பமாகிறார்.
கர்ப்பமாக இருக்கும் நிலையில், தன் குழந்தைக்கான அப்பா யார் என்பதை தெரிந்துக் கொள்ள பெங்களூர் செல்கிறார். அங்கு ரவியுடன் நட்பு ஏற்படுகிறது. பார்த்தவுடன் இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ரவிக்கு குழந்தைகள் பிடிக்காது என்று தெரிந்தவுடன் அன்றே பிரிகிறார்.
சென்னை வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார் நித்யா மேனன். எட்டு வருடங்கள் ஆனநிலையில் ரவி சென்னைக்கு வருகிறார். நித்யா மேனனை சந்திக்கும் ரவி மீண்டும் பழக ஆரம்பிக்கிறார்கள்.
இறுதியில் ரவி, நித்யா மேனன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? நித்யா மேனனின் குழந்தை ரவிக்கு பிறந்தவர் என்று தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ரவி மோகன், துறுதுறு இளைஞனாக நடித்து கவர்ந்திருக்கிறார். இரண்டு பெண்களிடம் மாட்டி கொண்டு தவிக்கும் காட்சிகளில் பாராட்டை பெற்று இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் நித்யா மேனன், அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தை பெற்றுக் கொள்ள துடிப்பது, பெற்றோர்களிடம் சண்டை போடுவது, ரவி மீது காதல் கொள்வது என கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார் வினய். யோகி பாபு ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார். ஜான் கொக்கேன், லால் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் பானு. நித்யா மேனனின் தாய், தந்தையாக நடித்து இருக்கும் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன் இருவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்ணையும், குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்று நினைக்கும் ஆணின் மனநிலையை வைத்து திரைக்கதை அமைத்து இருக்கிறார். ஸ்டைலிஷாகவும், சுவாரஸ்யமாகவும் படத்தை கொடுத்து இருக்கிறார். நிறைய ஆங்கில வார்த்தைகள் வசனமாக வைத்து இருக்கிறார். இது அனைத்து தர ரசிகர்களுக்கும் புரியுமா என்பது கேள்விக்குறி தான். திரைக்கதை மெதுவாக செல்வது பலவீனம். லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
இசை
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் பாராட்டை பெற்று இருக்கிறார்.
ஒளிப்பதிவு
கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.