என் மலர்
கோழிப்பண்ணை செல்லதுரை
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 154 | 141 |
Point | 409 | 544 |
அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் படம்.
கதைக்களம்
ராணுவத்தில் பணியாற்றும் தந்தையும், எல்.ஐ.சி. முகவரான தாயும் தங்களை பிரிந்து சென்றுவிட சிறிய வயதிலேயே தனது தங்கையுடன், ஆதரவற்றோர் ஆக இருக்கிறார் ஏகன். பசியோடு அலைந்து திரியும் அவர்களை கோழிப்பண்ணைக்காரரான யோகிபாபு பராமரித்து பாதுகாக்கிறார்.
யோகிபாபுவின் கடையிலேயே வேலைபார்க்கும் ஏகன், கோழிப்பண்ணை வைக்கவும், தங்கையின் திருமண செலவுக்காகவும் பார்த்து பார்த்து பணம் சேகரித்து வருகிறார். இந்நிலையில் ஏகனின் தங்கை காதல் வலையில் விழ, காதலனை புரட்டி எடுக்கிறார் ஏகன்.
இறுதியில் தங்கையின் காதலுக்கு ஏகன் மறுப்பு தெரிவிக்க காரணம் என்ன? ஏகனின் தாய் தந்தை பிரிய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஏகன், முழு கதையையும் தன் தோளில் தாங்கி நடித்து இருக்கிறார். எதார்த்தமாக நடித்து மனதில் பதிந்து இருக்கிறார். தங்கைக்காக வாழ்வது, அவர் மீது பாசம் காட்டுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
பானை விற்கும் பெண்ணாக வரும் பிரிகிடா, அழகான நடிப்பால் கவர்கிறார். ஏகனை காதலில் விழ வைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது. அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
தங்கையாக வரும் சத்யாதேவியின் நடிப்பு பாராட்டும் படி இருக்கிறது. அண்ணன் மீது பாசத்தை பொழிந்து கவர்ந்து இருக்கிறார். பெரியப்பாவாக யோகிபாபு நகைச்சுவை தாண்டி, குணச்சித்திர நடிப்பிலும் கவனம் பெற்று இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவகுமார், நவீன், கதாநாயகிக்கு தந்தையாக வரும் சுரேஷ் என அனைவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. சில காட்சிகள் யூகிக்கும் படி அமைந்து இருப்பது பலவீனம். அதுபோல் ஒரு சில காட்சிகள் நாடகம் போல் அமைந்து இருக்கிறது. தனக்கே உரிய பாணியில் எதார்த்த வாழ்வியலை சொல்லி இருக்கிறார். தேவையில்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
அசோக்கின் கேமரா ஒட்டுமொத்த தேனியையும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
இசை
என்.ஆர்.ரகுநந்தனின் இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
தயாரிப்பு
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.