என் மலர்
குரங்கு பெடல்
- 0
- 1
- 1
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 184 | 161 | 186 |
Point | 289 | 431 | 8 |
1980-களில் கோடை விடுமுறையை சிறுவர்கள் எப்படி கொண்டாடினார்கள் என்பதை கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கும் படம்.
கதைக்களம்
கிராமத்தில் மனைவி மகனுடன் வாழ்ந்து வருகிறார் காளி வெங்கட். இவருடைய மகள் திருமணம் ஆகி வேறொரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். காளி வெங்கட்டின் மகன் கோடை விடுமுறையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான்.
சொந்த சைக்கிள் இல்லாததால் வாடகை சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள். சைக்கிள் ஓட்ட தெரியாத காளி வெங்கட், தனது மகனின் சைக்கிள் ஆசையை புரிந்துக்கொள்ளாமல் காசு கொடுக்க மறுக்கிறார். ஆனால், எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவரது மகன் திருடுதல், ஏமாற்றுதல் என பல வேலைகள் செய்கிறான்.
வாடகைக்கு சைக்கிள் எடுத்த காளி வெங்கட்டின் மகன், அதை திருப்பி விட காசு இல்லாமல் தவிக்கிறான். ஒரு கட்டத்தில் காளி வெங்கட்டுக்கு மகன் திருடுவது தெரிய வருகிறது.
இறுதியில் காளி வெங்கட்டின் மகன் வாடகை சைக்கிளை திருப்பி கொடுத்தாரா? மகன் திருடுவதை தெரிந்து கொண்ட காளி வெங்கட் மகனை என்ன செய்தார்? காளி வெங்கட்டின் மகன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தன்னுடைய எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்பவர் காளி வெங்கட். இந்த படத்தில் கிராமத்து மனிதராக நடித்து மனதில் பதிந்து இருக்கிறார். சைக்கிள் ஓட்ட தெரியாததால் தன்னை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கிண்டல் செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், மகன் பேசும் போது அதன் வலியை உணரும் விதத்தில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.
காளி வெங்கட் மகனாக நடித்து இருக்கும் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது நண்பர்களாக வரும் மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் அதிஷ் ஆகியோர் உடல் மொழி, வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்கள்.
சிறுவனின் அக்காவாக நடித்த தக்ஷனா, அம்மாவாக நடித்த சாவித்திரி, வாத்தியார் வேடத்தில் நடித்த செல்லப்பா, மிலிட்டரியாக வரும் பிரசன்னா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பனின் சைக்கிள் சிறுகதையை மையமாக கொண்டு கமலக்கண்ணன் மற்றும் பிரபாகர் சண்முகம் திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். சைக்கிள் வைத்துக்கொண்டு கிராமத்து சிறுவர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன். 80களில் உள்ள கிராமத்து மக்களை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார். முதல் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது வருத்தம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரன், கோடைக்காலத்திற்கு ஏற்ப நேர்த்தியாக படம் பிடித்து இருக்கிறார்.
இசை
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு வலிமை சேர்த்து இருக்கிறார்.
தயாரிப்பு
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன், சவிதா ஷண்முகம் மற்றும் சுமி பாஸ்கரன் இணைந்து குரங்கு பெடல் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
my old memories came back,thanks,director and producer