என் மலர்
பணி
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 412 | 362 |
Point | 12 | 12 |
ஒரு கேங்ஸ்டரின் பழிவாங்கும் கதை
கதைக்களம்
திருச்சூரில் கதாநாயகனான ஜோஜு ஜார்ஜ் ரியல் எஸ்டேட் மற்றும் பில்டர்ஸ் தொழிலுடன் இவரது குடும்ப உறுப்பினர்களுடன் மாஃபியா சின்டிகேட் கேங்காவும் (பிரசாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன், சுஜித் சங்கர்) செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரியில் இருந்து நண்பர்களாக இருந்து அதற்கு பின் குடும்பங்களாக மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஜு ஜார்ஜுக்கு அழகான மனைவியாக அபிநயா இருக்கிறார்.
மறுப்பக்கம் மெக்கானிக்காக வேலை பார்க்கும் இரண்டு இளைஞர்கள் திருச்சூரில் உள்ளனர். இவர்களுக்கு அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதனால் பணத்துக்கு ஆசைப்பட்டு கூலிப்படையாக மாறி பட்டப்பகலில் ஒருவரை கொலை செய்கிறார்கள். இதற்கு சன்மானமாக 10 லட்ச ரூபாய் கிடைக்கிறது. குறுகிய காலத்தில் அதிகம் பணம் கிடைக்கிறது என்பதால் இவர்களுக்கு இந்த கூலிப்படை வாழ்க்கை பிடித்துப் போகிறது. இதனால் தொடர்ந்து இம்மாதிரியான குற்ற செயலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் ஜோஜு ஜார்ஜின் மனைவியான அபிநயாவை பார்த்து அவரை கிண்டல் மற்றும் சீண்டி விடுகின்றனர் அந்த இரண்டு இளைஞர்கள். இது தெரிந்த ஜோஜு அந்த இரண்டு பேரையும் அடி வெளுத்து வாங்கி விடுகிறார்.
ஜோஜுவிடம் அடிவாங்கிய பிறகு அந்த இளைஞர்களுக்கு மிகவும் அவமானம் ஆனது மட்டுமல்லாமல் ஜோஜு ஜார்ஜ் யார் என்று தெரியாமல் அவரையும் அவரது குடும்பத்தினரையும் பழிவாங்க திட்டம் தீட்டுகின்றனர். அதில் ஜோஜு ஜார்ஜுக்கு ஏற்படும் இழப்புகள் என்ன... அந்த இரண்டு இளைஞர்களை ஜோஜு ஜார்ஜ் எப்படி பழிவாங்கினார் என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
ஜோஜு ஜார்ஜ் அவரது அசாதாரண உடல்மொழியை கொண்டு ஒரு கேங்ஸ்ட3ர் தோற்றத்தில் பக்காவாக பளிச்சிடுகிறார். ஜோஜு ஜார்ஜுக்கு வசனம் குறைவென்றாலும் அவரது கண்களாலும் , உடல் மொழியாலும் சொல்ல வந்த உணர்வை பார்வையாளர்களிடம் கடத்தி நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
இளைஞர்களாக நடித்த சாகர் மற்றும் ஜுனைஸ் அவர்களின் சிறு சிறு மேனரிசங்களை கூட நேர்த்தியாக நடித்து பார்வையாளர்களின் மனதை கவர்ந்துள்ளனர். சில காட்சிகளில் அவர்களின் சைக்கோ தனத்தை பார்க்கும் போது பயத்தை உண்டாக்குகிறது.
அபிநயா அழகான மற்றும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜோஜு ஜார்ஜின் நண்பர்களாக நடித்த சீமா, சுஜித் சங்கர், பிரஷாந்த் அலெக்ஸ்சாண்டர், பாபி குரியன் அவர்களது பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.
இயக்கம்
இயக்கத்தில் களம் இறங்கி ஒரு பழிவாங்கும் கதையை கேங்க்ஸ்டர் பின்னணி களத்தில் வைத்து சுவாரசியமான திரைக்கதையில் கூறியதற்கு இயக்குனர் ஜோஜு ஜார்ஜ்-க்கு பாராட்டுகள். படத்தின் முதல் பாதி சிறப்பாக செல்கிறது . அடுத்தடுத்து இளைஞர்கள் என்ன செய்ய போகிறார்கள் என சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளாக அமைந்தது படத்தின் ப்ளஸ். இரண்டாம் பாதியில் கதை ஓர் இடத்தில் தேங்கியது போல் ஒரு உணர்வு. ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளது.
இசை
விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி.எஸ் இன் இசை படத்திற்கு பெரிய பலம்
ஒளிப்பதிவு
வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜின் ஒளிப்பதிவு மிரட்டல். குறிப்பாக இரவு நடக்கும் சேசிங் காட்சிகள் பார்வையாளர்களிடம் கைத்தட்டலை பெற்றது.
தயாரிப்பு
அப்பு பது பப்பு ப்ரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.