என் மலர்
இராவண கோட்டம்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 221 | 196 | 126 |
Point | 184 | 254 | 65 |
அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இருவேறு சமூகத்தினரிடையே ஏற்படும் பிரச்சனை குறித்த படம் இராவண கோட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் மேலத் தெருவை சேர்ந்த சாந்தனுவும், கீழத்தெருவை சேர்ந்த சஞ்சய் சரவணனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து ஊருக்கு வரும் ஆனந்தியை சாந்தனு காதலிக்கிறார். இது தெரியாத சஞ்சய் சரவணன் ஆனந்தியை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் சாந்தனு, ஆனந்தி காதல் சஞ்சய் சரவணனுக்கு தெரியவர நட்புக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்நிலையில் அரசியல் சுயலாபத்துக்காக ஏனாதி கிராமத்தில் உள்ள இருவேறு சமூகத்தினரிடையே பிரிவினை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமெடுக்கின்றன.
இறுதியில் சாந்தனு ஆனந்தி காதல் என்ன ஆனது? அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இருவேறு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்து இருக்கும் சாந்தனு, ஆக்ரோஷம் கலந்த யதார்த்த நடிப்பில் தனித்து தெரிகிறார். நட்பு, காதல், தைரியம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகியாக வரும் ஆனந்தி, வெகுளித்தனமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். காதல் காட்சிகளில் துறுதுறு பெண்ணாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார்.
மேலத்தெரு மக்களுக்காக பிரபுவும் கீழத்தெருவினருக்காக இளவரசும் ஊர்த் தலைவர்களாக இருந்து வழிநடத்துகிறார்கள். இவர்கள் தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்கள். சஞ்சய் சரவணன் புதுமுக நடிகர் போல் இல்லாமல் நடித்திருப்பது சிறப்பு.
அமைச்சர் தேனப்பன், எம்.எல்.ஏ. அருள்தாஸ், தீபா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. ஒத்த கையுடன் வரும் முருகன், அவருக்கு உதவியாளராக வரும் சத்யா ஆகியோர் சிறந்த கதாபாத்திர தேர்வு. இருவரின் நடிப்பையும் வெகுவாக பாராட்டலாம்.
சீமைக் கருவேல மர பிரச்சினை, கார்ப்ரேட் மாஃபியா, அரசியல், காதல், நட்பு என படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். கதாபத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் காட்சிகளுக்கான விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். மனிதர்களையும், கருவேல மரங்கள் சூழ்ந்த நிலப்பரப்பினை அழகாக காட்சி படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன்.
மொத்தத்தில் இராவண கோட்டம் சிறப்பு.