search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு
    X

    செஞ்சி அருகே 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு

    • தவ்வைச் சிற்பம் பல்லவர் கால சிற்பக்கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
    • வடமொழியில் ஜேஷ்டா என்றும் அழைக்கப்படும் தெய்வமாகும்.

    செஞ்சி:

    செஞ்சி அருகே உள்ளது அப்பம்பட்டு கிராமம். இப்பகுதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், செஞ்சி வாசுதேவன் ஆகியோர் சமீபத்தில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வைச் சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதுபற்றி ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:-

    அப்பம்பட்டு ஏரிக்கரையில் பச்சையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் காளி அம்மன் சன்னதியில் உள்ள சிற்பத்தை ஆய்வுசெய்தோம். அந்தச் சிற்பம் மூத்ததேவி, தவ்வை என்றும் வடமொழியில் ஜேஷ்டா என்றும் அழைக்கப்படும் தெய்வமாகும்.

    கரண்ட மகுடம், குழையும் காதணிகள் மற்றும் கழுத்து, கைகள், கால்களில் அழகிய அணிகலன்களும் இடையை மேகலை எனும் அணிகலனும் அழகு செய்கின்றன.

    இரண்டு கால்களையும் தொங்கவிட்டு திண்டின் மீது அமர்ந்த நிலையிலும் வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரம் செல்வக் குடத்தின் மீது வைத்தும் தவ்வை காட்சியளிக்கிறாள்.

    மிகுந்த கலையம்சங்களுடன் வடிக்கப்பட்டுள்ள இந்த தவ்வைச் சிற்பம் பல்லவர் கால சிற்பக்கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

    இதன் காலம் கி.பி.8-9 ம் நூற்றாண்டு ஆகும். 1200 ஆண்டுகளைக் கடந்தும் அப்பம்பட்டு கிராமத்தில் தமிழர்களின் தாய் தெய்வமான தவ்வை (காளி அம்மன்) வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    செஞ்சிப் பகுதியில் பல்வேறு இடங்களிலும் தவ்வைச் சிற்பங்கள் காணக்கிடைப்பது இப்பகுதியில் காளி அம்மன் தெய்வத்தின் வழிபாடு பல்லவர் காலத்தில் சிறந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×