என் மலர்
உள்ளூர் செய்திகள்
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை: 3 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
- தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது புதிய ரெயில் பாதை அமைக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
- சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு ரெயில் விடப்பட உள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே தினமும் 252 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் 5 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சென்னையின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலை நிமித்தமாகவும், கல்லூரிகளுக்கு செல்லவும், சொந்த வேலை காரணமாகவும் மின்சார ரெயில்களில் பயணிக்கிறார்கள்.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 31 கி.மீ. அகல ரெயில்பாதை கொண்ட 3-வது ரெயில்பாதை திட்டம் கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது புறநகர் ரெயில் சேவைக்கு பிரத்யேகமாக ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ளது. மேலும் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது புதிய ரெயில் பாதை அமைக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. வழக்கமாக இந்திய ரெயில்வேதான் இது போன்ற திட்டங்களை மேற்கொள்கிறது.
ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் புறநகர் பயணிகளுக்கு தடையில்லாத பயண சேவையை வழங்கவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இந்த முயற்சியை எடுத்துள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு ஆலோசகரை நியமிக்க விரைவில் டெண்டர் வெளியிடப்பட உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 4-வது ரெயில் பாதையை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் பாதை அமைக்கப்பட்டவுடன் புறநகர் சேவைகளுக்காக 2 பிரத்தியேக ரெயில்பாதைகள் இருக்கும்.
இதன்மூலம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு ரெயில் விடப்பட உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே செய்தி தொடர்பாளர் கூறுகையில், "தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில் பாதைக்கு ரெயில்வே வாரியம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. தமிழக அரசு முன் மொழிந்தால் நாங்கள் அதை பரிசீலிப்போம்" என்றார்.