search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் ஐம்பொன் சிலை, போலி மரகத கற்கள் விற்க முயன்ற 6 பேர் கைது
    X

    தேனியில் ஐம்பொன் சிலை, போலி மரகத கற்கள் விற்க முயன்ற 6 பேர் கைது

    • ரோந்து சென்ற போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • போலி சாமி சிலை மற்றும் மரகத கற்களை விற்க முயன்ற கும்பல் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேனி:

    தேனியை அடுத்த அரண்மனைபுதூரில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் சாலையில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த பொருட்களை சோதனை நடத்தினர். அப்போது ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சாமி சிலையும், பச்சை நிறத்தில் கற்களும் இருந்தன.

    இதனால் சந்தேகமடைந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் எழுமலை ஆத்தங்கரை பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த சுருளி மகன் தங்கமணி (வயது 41). எம்.கள்ளுப்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் சம்பழகு (29). விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு கூமாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (35) என தெரிய வந்தது. இவர்கள் தங்களிடம் உள்ளதை ஐம்பொன் சிலை மற்றும் மரகத கற்கள் என கூறி தேனியில் உள்ள சிலரிடம் விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட சிலை பழமையான தோற்றத்துடன் காணப்பட்டதால் இந்த சிலை அவர்களுக்கு எப்படி கிடைத்தது? என விசாரித்தனர். புத்தர் வடிவில் இருந்த இந்த சிலையை அவர்களாகவே தயாரித்து ஐம்பொன் சிலை என்றும், இதனை வீட்டில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும் தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி தேனி சுக்குவாடன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டவர் (வயது 47) என்பவர் கடவுள் பக்தி மிகுந்தவர் என்பதால் சுவாமி சிலைகளை வாங்க விரும்பியுள்ளார். அவரிடம் டிரைவராக வேலைபார்த்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மூலம் மேற்படி நபர்கள் சாமி சிலை மற்றும் போலி மரகத கற்களை விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

    இதற்காக குறிப்பிட்ட தொகையை வாங்கி விட்டு சாமி சிலை மற்றும் போலி மரகத கற்களை விற்க வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தங்கமணி, பாலமுருகன், சம்பழகு, டிரைவர் சிவா மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ரவிந்திரன் (50), திண்டுக்கல் சாணார்பட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் போலி சாமி சிலை மற்றும் மரகத கற்களை விற்க முயன்ற கும்பல் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கும்பல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்னர்.

    Next Story
    ×