என் மலர்
உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 67 சதவீதம் கூடுதலாக பதிவு
- பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்தது.
- சென்னையில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை:
ஆண்டுதோறும் தென் மேற்குப் பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கி செப்டம்பா் இறுதி வரை நீடிக்கும். இந்த காலக் கட்டத்தில் தமிழகத்துக்கு பெரிதளவு மழை இருக்காது. இருப்பினும் மேற்குத்தொடா்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.
இந்த நிலையில், இந்த ஆண்டில் தமிழக கடலோர பகுதிகளில் உருவாகிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஜூன் 1 முதல் நேற்று (8-ந் தேதி) வரையிலான தென்மேற்கு பருவமழை இயல்பாக 137.6 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், இந்த ஆண்டில் 230 மி.மீ. (92.4 மி.மீ. அதிகம்) மழை பதிவா னது. இது இயல்பைவிட 67 சதவீதம் அதிகமாகும்.
அதிகபட்சமாக நீலகிரியில் 1,015 மி.மீ., கோவையில் 754.2 மி.மீ., காஞ்சிபுரத்தில் 473.1 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 12.9 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் பல இடங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஜூன் 1 முதல் நேற்று வரை இயல்பாக 205.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், இந்த ஆண்டில் 430.3 மி.மீ. (225 மி.மீ.அதிகம்) பெய்துள்ளது.
அதாவது இயல்பைவிட 112 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.