என் மலர்
உள்ளூர் செய்திகள்
தாராபுரம் அருகே விபத்து: ஒருவர் பலி, 5 பேர் காயம்
- பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும்.
- விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
தாராபுரம்:
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடு துறையை சேர்ந்த 80 பக்தர்கள் நேற்று பழனிக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலை வழியாக வரப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் தாறுமாறாக ஓடி பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பவானியை சேர்ந்த ராமன் (வயது 54) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வினையன், பொன்னுச்சாமி, சுந்தரம், துரையன், அமுதராஜ் ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய சாரதி,சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்காமல் இருக்க பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும் என்று போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பக்தர்கள் சிலர் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.