என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள்
    X

    பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள்

    • நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வருவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • பயணிகள் வசதிக்காக மேலும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக நிறுவப்படும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    விரைவான மற்றும் சொகுசு பயணம் என்பதால் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 2 லட்சம் முதல் 2.45 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள்.

    இந்த 2 ரெயில் வழித்தடங்களும் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரெயில் நிலையங்களை சந்திக்கும் இடங்களாக உள்ளது. சென்ட்ரலில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் பயணிகள் அதிக அளவு வருவதால் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும்.

    இதேபோல் விம்கோ நகர் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் நடை மேடை 3, 4-ல் வந்து செல்கின்றன. பரங்கிமலையில் இருந்து செனட்ரல் வரும் ரெயில்கள் 1,2-வது நடைமேடைகளில் வந்தடைகின்றன. நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வருவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்கள் வெளியே செல்வதற்கு சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் சென்ட்ரலில் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் பயணச்சீட்டு வழங்கும் தளத்தில் இருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்று வர அமைக்கப்பட்டது. தற்போது இது பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. இதனால் பயணிகள் சிரமமின்றி சென்று வருகிறார்கள்.

    இதேபோல் பயணிகள் வசதிக்காக மேலும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக நிறுவப்படும் என்று தெரிகிறது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இதில் சின்ன மலை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டுகளும் கிண்டி, நங்கநல்லூர் உள்ளிட் ட 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தலா 2 நகரும் படிக்கட்டுகளும், அண்ணா நகர் கோபுரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி, மீனம்பாக்கத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும், திருமங்கலத்தில் 5 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×